தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

ஞாயிறு, 4 நவம்பர், 2018


நீ பயப்படுகிறாயா??
இங்கே நீயும் நானும் மட்டுமே தனித்திருக்கிறோம்...உன்னை வெறுப்பவரோ..அச்சுறுத்துபவரோ, அசூசையடைபவரோ..யாருமே வீட்டிலில்லை..
கொல்லிகளும் ஸ்பேரேக்களும் நான் வாங்குவதே இல்லை..
நீ என் காதருகே பாடலாம்..
கவிதைத்தாளின் மீது கூட ஆடலாம்...முன்னங்கால்களைத் தேய்த்துத் தேய்த்து என் இலக்கியத்தைப் பிழை திருத்தலாம்...நமக்கு நிறைய நேரமிருக்கிறது..இன்னும்  கோப்பையில் தேநீர் நிறைய மிச்சம் இருக்கிறது..நீ நிதானமாக அருந்தி விட்டு வா!!!

செவ்வாய், 30 அக்டோபர், 2018


நல்லநடனம் ஒன்று எப்படி இருக்குமென்று..சொல்லித்தந்தது..ஊதுவத்திப் புகை..யாதொரு தடையுமில்லை, யாதொரு தளையுமில்லை,' தன்னையே கரைப்பதில் கிஞ்சித்தும் கவலை இல்லை..காற்றின் மாயக்கரங்களைக் காதலுடன் பற்றியபடி, பிரபஞ்ச இசைக்கு காதுகொடுத்து ஆடுகிறது அழகாய்...வளைந்தும், சுழன்றும்..நடனம் முடிய முடிய நடனமாய் அது ஆகிப்போனது..ஆடியவர் இங்கில்லை..ஆட்டமும் புலனில்லை..திரிபுரம் எரித்த சிவனின் நடனம் கண்டேனில்லை..என்னால் எரிபட்ட ஊதுபத்தியின் நடனம்  அதனினும் குறைவில்லை.

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

மங்கையரர்கரசியின் பின்னல்

மங்கையர்கரசியின் பின்னல்*
எங்கள் தெருவிற்கு
தனிக்குடித்தனம் வந்திருந்தாள் மங்கை அக்கா..ஆசிரியர் பணிக்காய் காத்திருந்தாள்..அம்மன்சிலையொத்த வடிவழகி..அசாத்திய தலைமுடி..நீளப்பின்னலை நாளெல்லாம் பார்க்கலாம்..இழையிழையாய் இழைத்துப்பின்னி... நெருக்கக்கட்டிய ஜாதிமல்லி சூடியிருப்பாள்..அது வாடி யாரும் பார்த்ததாய் வரலாறு கிடையாது..தெருப்பிள்ளைகள் அவளிடம் தலைபின்ன காத்திருக்கும்..வலிக்காமல் சிக்கெடுப்பாள்..ஆயினும் வலிக்கிறதா..வலிக்கிறதா இடையிடயே கேட்டுக் கொள்வாள்..எண்ணைகாணாமல்  என் தலை செம்பட்டை சேர்ந்தென கடிந்து கொள்வாள்..என் திருமணப்பின்னலும் அவள் கைவண்ணம் தான்..வளைகாப்பிற்காய் வீடு வந்த நான்..முதலில் தட்டியது அவள் வீட்டுக்கதவைத்தான்..பகலில் ஒருபோதும் அக்கா கதவை மூடி வைக்க மாட்டாளே..அக்காவைப்பார்த்தபோது.. என் குரல்வளையை கொழுத்தொரு நண்டின் பிடி அழுத்திக் கவ்வியது..அடிவயிற்றுப் பிள்ளை கூட அதிர்ந்து போனான்..அழுந்தச்சிரைக்கப்பட்ட தலை..குழிபட்ட விழிகள்..உலந்த பூச்சரமாய் போயிருந்தாள்.அறுவையும் தெரபிகளும் அவளை குலைத்துக் குதறியிருந்தது..அவளை விழிக்கவிடாமலே விருந்தாக்கிப் கொண்டது..அந்தக் கொடுமைக்கார நண்டு..இன்னும் என் கனவுகளில் மங்கை அக்கா எண்ணையும்சீப்பும் எடுத்து வருகிறாள்..கழுத்துவரை நான் சிகையை அறுத்தெரிந்த பின்னும் கூட..கடவுளை ஒருபோதும் நான் மன்னிப்பதாய் இல்லை!!

செவ்வாய், 2 அக்டோபர், 2018

நீர் கொதிக்க ஆரம்பிக்கிறது...
தேயிலை தொட்டெடுத்து திட்டமாய் தூவுகிறேன்
வியாபிக்கும் தேன் நிறம் விழிகள் வாங்கிக்கொள்ள..
ஆகும் போதே தெரிந்து போனது, ஆகச் சிறந்த தேநீர் இதுவென..

மிக மென்மையாய் வெண்ணிறகோப்பைக்கு மாற்றுகிறேன்...
பிறந்த பிள்ளையை ஏந்தும் கவனம்,
உள்ளங்கை சூடு உயிர்வரை ஊடுருவ,
நடனமிடும் ஆவி ஆன்மாவின் கைதேடும்..
நாசிக்குள் நறுமணம் மூளைக்குள் இதழ் விரிக்கும்.

தேநீர் அருந்த நீ வருகிறாயா??? சூரியனை கேட்கிறேன்...
கோப்பைக்குள் குதித்துக் கரைந்து காணாமல் போகிறான் சூரியன்..
நிதானமாய் அருந்துகிறேன்..."ஒரு கோப்பை சூரியன்"
ஆனந்தி அக்கா மல்லிகை தொடுத்தால்..
முல்லையின் முகம் வாடிப்போகும்..
சரமாகும் வாய்ப்பு விரல்விட்டுப் போனதென
நந்தியாவட்டைகள் நெஞ்சம் வெடிக்கும்..

கமலா அம்மா கத்தரி நறுக்க...
வடிவியல் வாய்ப்பாடுகள் வாயடைத்துப்போகும்..
ஒட்டிப்பிறந்த குட்டிகுழந்தையர் போல..
ஒவ்வொரு துண்டும்.. ஒன்றே போலாய்..

புள்ளிக்கோலம் புனிதா வரைந்தால்..
ஒவ்வொரு புள்ளியும் நின்று பேசும்..

நித்யா மடிப்பாள்...துவைத்த துணியை..
மடிப்பில் மனமது மடங்கிப் போகும்..

பங்கஜவல்லி பாத்திரம் கழுவினால்..
நட்சத்திரங்கள் நிச்சயம் நாணும் .

ஒவ்வொருபெண்ணும் உண்மையில் கவிதை..
நிஜத்தில் பெண் அவள் நித்திய கவிதை..
விழிபடைத்தோர் மட்டும் வாசிக்க கடவர்.