பக்கங்கள்

செவ்வாய், 2 அக்டோபர், 2018

நீர் கொதிக்க ஆரம்பிக்கிறது...
தேயிலை தொட்டெடுத்து திட்டமாய் தூவுகிறேன்
வியாபிக்கும் தேன் நிறம் விழிகள் வாங்கிக்கொள்ள..
ஆகும் போதே தெரிந்து போனது, ஆகச் சிறந்த தேநீர் இதுவென..

மிக மென்மையாய் வெண்ணிறகோப்பைக்கு மாற்றுகிறேன்...
பிறந்த பிள்ளையை ஏந்தும் கவனம்,
உள்ளங்கை சூடு உயிர்வரை ஊடுருவ,
நடனமிடும் ஆவி ஆன்மாவின் கைதேடும்..
நாசிக்குள் நறுமணம் மூளைக்குள் இதழ் விரிக்கும்.

தேநீர் அருந்த நீ வருகிறாயா??? சூரியனை கேட்கிறேன்...
கோப்பைக்குள் குதித்துக் கரைந்து காணாமல் போகிறான் சூரியன்..
நிதானமாய் அருந்துகிறேன்..."ஒரு கோப்பை சூரியன்"
ஆனந்தி அக்கா மல்லிகை தொடுத்தால்..
முல்லையின் முகம் வாடிப்போகும்..
சரமாகும் வாய்ப்பு விரல்விட்டுப் போனதென
நந்தியாவட்டைகள் நெஞ்சம் வெடிக்கும்..

கமலா அம்மா கத்தரி நறுக்க...
வடிவியல் வாய்ப்பாடுகள் வாயடைத்துப்போகும்..
ஒட்டிப்பிறந்த குட்டிகுழந்தையர் போல..
ஒவ்வொரு துண்டும்.. ஒன்றே போலாய்..

புள்ளிக்கோலம் புனிதா வரைந்தால்..
ஒவ்வொரு புள்ளியும் நின்று பேசும்..

நித்யா மடிப்பாள்...துவைத்த துணியை..
மடிப்பில் மனமது மடங்கிப் போகும்..

பங்கஜவல்லி பாத்திரம் கழுவினால்..
நட்சத்திரங்கள் நிச்சயம் நாணும் .

ஒவ்வொருபெண்ணும் உண்மையில் கவிதை..
நிஜத்தில் பெண் அவள் நித்திய கவிதை..
விழிபடைத்தோர் மட்டும் வாசிக்க கடவர்.