பக்கங்கள்

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

ஆகுதீ


எண்ணைய் காய பொறுமையின்றி,
முன்னதாகவே இடப்பட்டதால்
கடைசிவரையில் மௌனம் சாதித்த கடுகு....

வடிகஞ்சி ஆற சமயமில்லை
சூடான டம்ளர் விளிம்பு
உதடு தொட்ட இடத்தில் எரிச்சல்....

நிதானமாய் அணிய நேரமில்லை,
கைப்பையில் திணிக்கப் பட்ட கடிகாரம்....

படியிறங்கும் நேரம் போட்டுக்கொள்ளலாம்,
புறக்கணிப்பில்வெள்ளை மேலங்கியின் கீழ்ப்பொத்தான்கள்...

காலை நேரத்தின் அவசரத் தீயில்
நான்..ஆகுதியாய்ப் போகும் நேரம்
எதோ மூலையில், ஈரம் கொஞ்சம்
இன்னும் எஞ்சியிருக்கிறது போலும்...

வாசல் வாஸ்து மணி,சொல்லாமல் போகிறாயே என்று
தலை தட்டிச் சிணுங்குகையில்
அனிச்சையாய் ஆட்டிச் செல்லும் கைகள்....

தடுக்கி விழும் நடையின் அவசரத்திலும்,
எதிர் வரும் குண்டுக் குழந்தையின்
கன்னம் வருடச் சொல்லும் மனம்...

உதிர்ந்த யூகலிப்டஸ் இலைகளின்சரசரப்பில்
தானாக தாமதிக்கும் கால்கள்...

ஈர விறகாய் இன்னும் புகைகிறது என் மனம்....
ஆகுதி ஜ்வாலையின் ஆரஞ்சு நிறத்தையும்
வித்தியாசமான அதன் விசுக் விசுக் நடனத்தையும்
கிளர்ந்து வரும் அதன் மணத்தையும் கூட
கொஞ்சம் ரசித்துக் கொள்கிறேன்...

கொஞ்சம் பொறு தீயே...
முழுதாய் எனை எரிக்காதே....

2 கருத்துகள்: