தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

புதன், 24 பிப்ரவரி, 2010

ஜாலியாய் இளைக்கலாம் வாங்க (பாகம் 1)

ஜாலியாய் இளைக்கலாம் வாங்க...!!!

இந்தத் தொடரை நான் தொடங்கும் இந்நேரம் ஒரு சுபயோக, சுபதினமாய் அமைந்து, இதைப் படிப்பவரெல்லாம் எடைகுறைய சர்வமதக் கடவுளரையும் வேண்டி, ஆரம்பிக்கிறேன். (கொஞ்சம் ஓவர் பில்ட்−அப்போ)சரி, விசயத்திற்கு வருகிறேன். எடையை குறைக்கவோ, கூட்டவோ வேண்டி எந்த உணவியல் நிபுணரை அணுகினாலும், அவர் முதலில் தருவது தினசரி மெனு பிளான் தான். உணவில் எதைக் கூட்ட வேண்டும், எதைக் குறைக்க வேண்டும் என்பது தான் மெனு பிளானின் சாராம்சம்.

நாமும் அதை கர்மசிரத்தையாய் படித்துவிட்டு, இரண்டு நாள் மட்டும் பின்பற்றிவிட்டு, பத்திரமாய் எடுத்து வைத்துவிட்டு (யப்பா..... எத்தனை விட்டு), பின்னர் "பழைய குருடி கதவ திறடி..." கதையாய், பழைய படி சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம்.சிறந்த உணவுப் பழக்கமும்,சரியான உடற் பயிற்சியும் கை கோர்த்தால் தான், உடல் எடை குறைப்பு சாத்தியமாகும்.(ஆ...வ்... என்ன கொட்டாவி வருகிறதா?)

எடையைக் குறைக்க நாம் முதலில் செய்ய வேண்டியது,வழக்கத்தை விடஒரு மணி நேரம் முன்பாகத் துயில் எழ வேண்டும். (என்ன முடியாதா? சரி ஒரு அரை மணி நேரம்?)எழுந்தவுடன் அம்மா... காப்பி என்று கத்தாமல், சமத்தாக பல் தேய்த்து, காலைக் கடன்களை முடித்து (காப்பி குடிக்காட்டி, காலைக் கடன்களைக் கட்ட முடியாதா?..) வெறும் வயிற்றில் மூன்று டம்ளர் தண்ணி குடிக்கவும் (வெறும் வயிற்றில் தண்ணி குடிச்சா வாந்தி வர்ற மாதிரி இருக்கா?..) ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். போகப்போக பழகிவிடும் (உங்களுக்கு ஆரம்பத்தில தண்ணி அ(கு)டிச்சப்ப வாந்தி வந்தது தானே?...).வெது, வெதுன்னு தண்ணில லெமனும், தேனும் தலா ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கலாம். தேனும் லெமனும் சேர்ந்த கலவை நம்ம ரத்தத்தை சுத்திகரிக்கும், நமக்கே தெரியாம நம்ம உடல்ல தினமும் எத்தனையோ நச்சுப் பொருட்கள் சேருது. நம்ம எந்த அளவு தண்ணி குடிக்கிறோமோ அந்த அளவு நச்சு பொருட்கள் இரத்தத்திலிருந்து வெளியேற்றப் படுகிறது. அதோட, தினமும் ஏ.ஸி. ல இருப்பவர்களுக்கு எற்படும் தோல் வறட்சி, உடல் உஸ்ணம், மலச் சிக்கலுக்கு அதிக அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. தண்ணீரை பத்தி பேசனும்னா, (சும்மாவா சொன்னாங்க, நீரின்றி அமையாது உலகு...) தனி கட்டுரையே போட வேண்டி வரும்.

சரி,ஒரு வழியா தண்ணி குடிச்சாச்சா?இப்ப கத்துங்க... அம்மா எந்திரிச்சு இத்தன நேரமாச்சு காப்பி எங்க?..., அம்மாவும் புள்ள மேல இருக்கிற அலாதி பிரியத்தில டபுள் ஸ்ட்ராங்கா, நல்லா நாலு ஸ்பூன் சக்கரைய போட்டு கொண்டு வருவாங்க பாருங்க. அங்க தான் கவனிக்கனும் நீங்க!!! மொதல்ல காபில போடற சக்கரைய ஒரு ஸ்பூனா குறைங்க.... எப்பிடி குடிக்கிறது? கசக்குமேன்னு தான கேக்கிறீங்க, முதல்ல சர்க்கரையே போடாம ஒரு வாய் குடிங்க, கசக்குதா....? இப்படித்தான் தினமும் சக்கரை வியாதிக்காரங்க குடிக்கிறாங்க... அவங்க நிலைமையை நினைச்சு வருத்தப் பட்டுட்டே... நமக்கும் அந்த நிலமை வரக்கூடாதுன்னு நினைச்சிட்டே, ஒரு ஸ்பூன் சர்க்கரையை மட்டும் கலக்குங்க காப்பில..., இப்ப குடிங்க..., இனிக்குமே? பேஷ்.. பேஷ் காப்பின்னா கம்மிச் சக்கரை காப்பிதான். சக்கரைய குறைக்க ஆரம்பிச்சாச்சுன்னாலே எடை குறைப்புக்கான முதலடி வெச்சாச்சுன்னு தான் அர்த்தம், அதுக்குனு குண்டாகணும்னு நினைக்கிறவங்க சர்க்கரய அள்ளி, அள்ளி சாப்பிடாதீங்க. உடம்பு வராது, சுகர் தான் வரும். இப்ப உங்க கையயே முதுகுப் பக்கம் கொண்டு போய் பலே, பலேன்னு ஒரு ஷொட்டு போட்டுக்கங்க.

அப்புறம் தான் முக்கியமான விசயமே... ஆரம்ப பள்ளிக்கூடத்திலிருந்து காலேஜ் முடிக்கிற வரை உங்க டிரில் மாஸ்டர், உங்களை டிரில் எடுத்திருப்பாரே? ஏதாவது டிரில் ஸ்டெப் ஞாபகம் இருக்கா? (இல்லையா, இதெல்லாம் வசதியாய் மறந்திருவீங்களே!!!) ஸ்கூலில படிக்கும் உங்க பசங்களையோ (கல்யாணம் இன்னும் ஆகலலையா) அக்கா, தங்கச்சி பசங்களையோ கேட்டு எளிமையான கை, கால்களுக்கான உடற்பயிற்சியை பதினைந்து முதல் இருபது நிமிடம் செய்யலாம்.வெறுமே குனிந்து நிமிர்வது, மல்லாக்க படுத்து கால்களை தூக்கி பின் இறக்குவது, தோப்புக்கரணம் போடுவது (மனைவியின் முன்னால்... இன்னும் சிறப்பு... பாருடா செல்லம் மாமா நேத்து உன்னை திட்டிட்டேன்னு தான் இன்னைக்கு தோப்புகரணம் போடுறேனு சொல்லுங்க..) போன்றவை இதில் அடங்கும். இது முதல் நாள். ஆப்ஷன் நம்பர் ஒண்ணு.

அடுத்த நாள் நல்ல பிள்ளையாய் (முடிந்தால்) குளித்து.. உங்க வீட்டுப் பக்கத்தில், பத்து நிமிட நடை தூரத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு, நடந்து போயிட்டு வாங்க. பிள்ளையாரிடம் உங்க நீண்ட நாள் கோரிக்கையான (என்னையும் எத்தன நாள் உன்ன மாதிரி பிரம்மச்சாரியாகவே வெச்சிருக்கப் போற, நங்கு நங்குன்னு இந்த உடம்பயும் தூக்கிட்டு நடந்து வரேனே... சீக்கிரம் ஒரு ஃபிகரை காட்டுப்பான்னு சொல்லிட்டு) அங்க குடுக்கிற பிரசாதத்தை மட்டும் நெத்தில பூசிட்டு, சுண்டல், பொங்கல் போன்றவற்றை சாப்பிடாம இருங்க.ஏன் சொல்றன்னா திடீர்னு பிள்ளையார் கண்திறந்து, ஒரு அழகான பொண்ணு உங்களைப் பார்த்துச்சின்னா சுண்டலும், வாயுமா நீங்க காட்சி குடுக்க வேண்டாம் பாருங்க. சரியான தின்னிப் பண்டாரம்னு உங்களை நினைச்சுக்கும். கற்பனைல மிதந்திட்டே வீடு மாறி போகாம, நேரா பொடி நடையா நடந்து, உங்க வீட்டுக்கு வாங்க. இது ஆப்ஷன் நம்பர் இரண்டு..

அடுத்த நாள், உங்களுக்கு தோட்ட வேலை தெரியுமா? இடமும் இருந்து மனதும் வைத்தால் அருமையான தோட்டம் போடலாம். பணத்துக்குப் பணமும், உடம்புக்கு உடம்பும் குறையும். ஃபிகருகளுக்கு ரோஸ் வாங்கற செலவும் மிச்சம். இது மூணாவது ஆப்ஷன்.ஏரோபிக்ஸ், யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ் தெரிந்தவங்கன்னா எனக்கு வேலை மிச்சம். உங்களுக்கு தெரிந்த எதோவொண்ணை, ஒரு இருபது நிமிசம் பண்ணுங்கப்பு, உடம்பு குறைஞ்சா செரிதான். ஆனா இதெல்லாமும் தெரிஞ்சு வச்சிட்டு உடம்பையும் வெச்சிருந்தீங்கனா, முதல்ல உங்க மண்டைல நான் நங்குன்னு ஒரு கொட்டு வெப்பேன்.

எனக்கு எதுவுமே தெரியாதுன்னு, இதெல்லாம் செய்ய முடியாதுன்னா, 20 நிமிசம் மைக்கேல் ஜாக்சன் பாட்டுப் போட்டுட்டு டான்ஸ் ஆடுங்க. அவர மாதிரி ஆட சொல்லலீங்க, உங்கள மாதிரி ஆடுங்க போதும். இதுல ரெண்டு விசயம் நீங்க கவனிக்கனும். ஒண்ணு கதவு, ஜன்னல் எல்லாம் மூடுறது. அப்புறம் நீங்க ஆடுற விசயம் மைக்கேல் ஜாக்சன் ஆவிக்கு தெரியாம பாத்துக்கறது. இது தான் என்னோட ஆப்ஷன் நம்பர் நாலுவேர்க்க விறுவிறுக்க ஆடியாச்சா?

இப்பா நல்லா ஒரு ஷவர் எடுத்துட்டு (அளவுத் தண்ணி காக்கா குளியளா) அப்ப அம்மாவுக்கு லாரி தண்ணி புடிக்க ஹெல்ப் பண்ணுங்க. (ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பாள், தன் மகன் லாரித் தண்ணீர் புடித்தல் கண்டு..) நீங்க உடம்ப குறைக்க செய்யும் சுயநல முயற்சின்னு தெரியவா போகுது?. சமயத்தில பக்கதுது வீட்டு மாலா குடத்தையும் நிரப்பி வெச்சா, அவ உங்களுக்கு சொல்ற தேங்ஸ்ல, நீங்க தினமும் குடத்தை எடுத்துட்டு லாரி பின்னால போறது நிச்சயம்.

முன்பெல்லாம் எங்கூருல "வருத்தப் படாத வாலிபர் சங்கம்" முக்குக்கு முக்கு இருக்கும். எங்கண்ணணுக எல்லாம்,காலங்காத்தால முட்டையும் கையுமா அங்க போயிருவாங்க. தண்டால், பஸ்கி எடுத்துட்டே அக்காங்கா யாராவது க்ராஸ் ஆனால் புஜ, பல பராக்கிரமம் காட்டுவாங்க. இப்பத்தான் எல்லாம் ஏஸி ஜிம் ஆச்சே? பர்சையும் பதம் பர்க்கும்.உங்கள அரைமணி நேரம் தூங்கவிடாத பாவத்தையெல்லாம் என் தலைல எறக்கி வெச்சிட்டு, காலை சிற்றுண்டி சாப்பிடப் போகலாமா.

அம்மா என்னக்கும் இல்லாத அதிசயமா உங்கள பாத்துட்டு, (ஏன்னு உங்களூக்கே தெரியும்) தட்டுல மொத இட்டிலிய வெச்சவுடனே சும்மா வீடே அதிருதில்ல இன்னைக்கும் இட்லியா? நீ என்ன யோசிக்காம இட்டிலிக்கு ஊறப் போடுவோர் சங்கத் தலைவியான்னு "சும்மா மெர்சலாவிங்கல்ல... நானும் உங்களைப் போலத் தான். இட்லிக்கு பொடா, தடா போடணும்னு பொறப்படறவதான். ஆனா இட்டிலி, சட்னி, சாம்பார் காம்பினேசன் மாதிரி பேலன்ஸ்டு டயட்ட அடிச்சுக்க ஆளில்லை. தங்கத் தமிழனின் தன்னிகரற்ற கண்டு பிடிப்பு தான் இந்த இட்லி (தமிழுக்கு அடுத்தபடியாக).எப்படியா? பொறுங்கள்...

தொடர்ந்து இளைக்கலாம் வாங்க...