தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

பரண் பொழுதுகள்

பரண்களில் தேடிய பொழுதுகள்
வீணாய்ப் போனதேயில்லை...

ஒட்டடைப் பூச்சூடிய
கால் உடைந்த மரப்பாச்சியோ...
இன்னும் அழியாத ஆவண்ணாவுடன்
முதல் வகுப்பு சிலேட்டோ
இறந்து போன தாத்தாவின்
முனை மழுங்கிய கைத்தடியோ...
தங்கையுமாய் நானுமாய்
சண்டையில்சேதப்படுத்திய பிரம்புக் கூடையோ....

எதைத் தேடி பரண்நாடினேனோ
அது கிடைக்கவில்லையெனினும்
இதுவரை தொலைத்ததெல்லாமும் கண்முன்னே!
பரண் விட்டிறங்கும் பொழுதுகள்
சுகமானவை....