தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

விடை தெரியாக் கேள்வியே

பொழுது போகாமல் நான் இருந்த நேரம்
நீ என் அருகில் வந்தாய்...
எப்போதும் போலகண்ணாமூச்சி விளையாட அழைத்தாய்...
என் கண்ணைக் கட்டி விட்டு
குறுக்கும் நெடுக்குமாய் ஓட ஆரம்பித்தாய்...
என்னைப் பிடி என்று சொல்லி விட்டுமுன்னேற ஆரம்பித்தாய்
திடிரென உணர்ந்த அமைதியால்
திடுக்கிட்டு கட்டை அவிழ்த்தேன்.
திசை தெரியா இருட்டில்வழி தெரியா இடத்தில்
என்னை தனியாய் விட்டு விட்டு
மாயமாய் மறைந்திருந்தாய்...
அங்கிருந்து ,மீண்டு வருவதற்குள்
மாண்டு விடக் கூடும் என்றே பயந்தேன்...
தட்டுத்தடுமாறி தப்பித்து வந்து விட்டேன்...
எனக்குத் தெரியும்மீண்டும் நீ வருவாய்...
விளையாட அழைப்பாய்...
விடை தெரியாத கேள்வியே...அடுத்தது என் முறை...
உன் கண்ணைக் கட்ட
கருப்புத் துணி தேடிக்கொண்டிருக்கிறேன்...

காலக் குயவன் கைகளில்....

கொஞ்சம் கிடைத்தது காலக் குயவன் கைகளில்

பானை செய்ய உத்தேசித்தான் முதலில்,

மண்ணை மிதித்து,

மனதுபோல வந்தவுடன்சக்கரத்தில் இட்டு சுற்ற ஆரம்பித்தான்

வாழ்க்கைச் சக்கரம் சுற்ற ஆரம்பித்தது..

குயவனின் கைகள் வனைய ஆரம்பித்தது...

சக்கரம் சுற்றச் சுற்ற..மண்ணுக்குக் கிலி எடுத்தது...

மண்ணின் மனது தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தது,

உயிர் போகும் வேதனை உணர ஆரம்பித்தது,

குயவனும் விடாது வனைந்து கொண்டிருந்தான்...

பயத்தில் கூக்குரலிட்ட களிமண்சடுதியில் சமாதானமாகி,

சுற்றோட்டத்தில் சுகம் காண ஆரம்பித்தது...

பானையின் உருவத்தில்

தன்னைப் பொருத்தி பார்க்கும் ஆவலில்

படும் வேதனைகளை பொருட்படுத்தவில்லை அது....

விளிம்பு வரை வந்தாகிவிட்டது...

முழு வடிவமும் அடுத்த சுற்றில்...

நிம்மதிப் பெருமூச்சு விட்டதுபாதிப் பானையாகிய களிமண்...

காலக் குயவனுக்கு என்ன தோன்றியதோ...

வனைந்த பானை வடிவில்லை என்று நினைத்தான் போலும்

உருவாக்கிய பானையை ஒட்டுமொத்தமாய் சிதைத்து

மீண்டும் மண்ணாக்கி....

பூச்சாடி செய்யப் புறப்பட்டான் இப்போது...

களிமண் குழம்பியது...எதற்குள் தன்னை இருத்திக்கொள்ள?

பானைக்குள்ளா...ஜாடிக்குள்ளா...?

என்ன செய்ய?

எப்போதும் எதற்காகவேனும் அழும்
இரண்டு வயது குழந்தையாய் − என்மனது!
கிடைத்த சாமான்களையெல்லாம் உடைத்துவிட்டு,
கிடைக்காத ஒன்றுக்காய் கேவி அழுகிறது...
சாதாரண சமாதானமெல்லாம் எடுபடாது
சாதித்தே தீருவேன் நினைத்ததை என்ற அழுகை
இதுவேண்டாம், அதுபிடிக்கவில்லை
இப்போதேபரணில் உள்ள யானை பொம்மையைத்தா!
அழும்பிள்ளையை அதட்டலாம்... அடக்கலாம்..
முதுகில் இரண்டுவைத்து மூடுடாவாயை எனலாம்
தொட்டதெற்கெல்லாம் சிணுங்கி அழுது,
தொந்தரவு செய்யும் என்மனதை என்ன செய்ய?
எந்த பொம்மையைக் காட்டிஇந்த மனதை வசப்படுத்த?

குருவிகளுடன்....

கண்கள் குளிர்ந்தன...
கண்ணாடியூடே தெரிந்தபரந்து விரிந்த இளமஞ்சள் வானம்,
பச்சைச்செடியில் தீக்கங்குகளாய்அடர்சிவப்புசெம்பருத்திப்பூக்கள்.....
செம்பருத்தியைக் கொத்தியவாறு சிட்டுக் குருவிக் கூட்டம் ஒன்று...
ஏதோ வாகனம் எழுப்பிய இரைச்சலில்
எழும்பிப் பறந்தன
அச்சமுற்றசிட்டுக்குருவிகள்
வேலியின்றும் வேகமாய்...

கவிதை எழுத சரியான தருணம்சொன்னது மனம்...
பேப்பரும் பேனாவும் எடுத்த நிமிடம்
கவிதைக்குச் சிக்காமல்தப்பிப் பறந்திருந்தன குருவிகள்...
எல்லாவற்றையும் வளைத்துப் பிடித்து
வார்த்தையில் அடைத்தல் சாத்தியமா?
எழுதுவதை நிறுத்தி விட்டு

குருவிகளுடன் பறக்கலானது மனது...
குருவிகள் பறக்கட்டும்
கவிதையில் சிறைப்பட வேண்டாம்...
குருவியின் பின்னால் மிதந்து செல்லும் மனதே...
நீயும் தப்ப முயற்சி செய்...என் கவிதையிடமிருந்து...