தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

வியாழன், 11 பிப்ரவரி, 2010

கவிதைத்துடைப்பம்(கதை)

இவன வெச்சு எப்படி சமாளிக்கப் போறமோ?" வெறுப்பு கலந்த சலிப்புடன் தான் அவனை எதிர்கொண்டேன். அவன் கூறிய முகமனுக்குக் கூட பதில் கூட சொல்லவில்லை.அவனைப்பற்றி எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த குறிப்புகள் அப்படி. "சரியான முரடன். வாய் அதிகம். கோபம் வந்தால் தன்னிலை மறப்பான். ஏற்கனவே டெர்மினேசன் வரை போய், யாரோ ஆளைப் பிடித்து டிபார்ட்மெண்ட் மாறி டயட்டரி கிச்சனில் கிளீனராக வந்து சேர்ந்திருக்கிறான். சற்று புத்தி பிசகியவன் வேறு" என்றெல்லாம் அவனைப் பற்றிய செய்திகள் அவனுக்கு முன்பு அவனுடைய சூபர்வைசரான எனக்கு வந்து சேர்ந்துவிட்டிருந்தது.

அவன் பெயர் முனீர். வயது 28. என்னை விட 6 மாதம் பெரியவன்.நான் பணியில் சேரும் போது சரியான பேக்கு. பயந்த சுபாவம். இம்மென்றால் கண்கள் குளம் கட்டி விடும். அதே மருத்துவமனையில் வேலை செய்துகொண்டிருந்த சேச்சிகள் சொன்னதாவது " மகளே...உன் டிபார்ட்மெண்டில் உள்ளது போல கள்ளிகள் எவ்விட காணிணும் இண்டாகில்லா...சூசிச்சு பணியெடுக்கணும்...பங்காளி ஆள்காரரிடத்து, விசமிகிக்க வேண்டாம்...அம்மாரொக்க முக்மாபியா". அதாகப் பட்டதுமருத்துவமனையில் என் டயட்டரி டிபார்ட்மெண்ட் ஆட்கள் சரியான வாயாடிகள். விட்டால் தலையில் மிளகாய் அரைப்பவர்கள்.இதையெல்லாம் கேட்டு வயிற்றில் புளியைக் கரைத்தபடி வேலைக்குப் போனேன். மதிய சிப்ட் இன்சார்ஜ் நான். 26 வயது பெண், 20 பேரை சமாளித்து வேலை வாங்க வேண்டும். என்னைப் பார்த்து பரிதாபப்பட்டே எல்லாரும் ஒழுங்கா வேலை செய்திருவாங்க. என் ஸ்டாப் அவ்வளவு கெட்டவங்க இல்லை. கொஞ்சம் நல்லவங்க தான்.இருந்தாலும் என் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டி இருந்தது. யாரைப்பார்த்தாலும் வலியச் சென்று பேசி சேமலாபம் கேட்டு, ஊர்க்கதை பேசுவேன்..."பிலிப்பைன்ஸ்ல மாம்பழம் கிடைக்குமா...பங்களாதேஸில் என்ன மெயின்தொழில் என்ன ..உங்க ஊரில எப்பப்பா பிரச்சனை தீரும்" என்று எல்லாரிடமும் லொடலொடக்கும் வாயை கட்டுப்படுத்தி," நான் அதிகம் பேஸ் மாட்டேன். செய்து காட்டுவேன் "என்று அஜீத்தின் தங்கையாக ஆகிவிட்டிருந்தேன்.

இப்படியாக நான் ஸ்ரிக்ட் சிந்தாமணியாக ஆன நிலையில் முனீரை என் சிப்டில் போட்டார்கள். எனக்கு அதீத கோபம்... என் மேலாரிடம் போய் ," இருக்கிற நல்ல ஸ்டாப் எல்லாரையும் மார்னிங் சிப்டிலேயே போடறீங்க. புதுசா வர்றவங்களை எனக்குத் தந்தா எப்படி...அதும் இவன் வேற புத்தி சுவாதீனம் சரியில்லயாமே" என்று அழமாட்டாக் குறையாப் பேசினேன்.மேலாளர் சவுதிப் பெண். அவள் சொன்னாள்." பாரு...உனக்கு ருவீனாவப் பத்தி நல்லாத் தெரியும். கோபக்காரி. மூனீரை அவ சிப்டில் போட்டா ரெண்டு பேருடைய சண்டைய சமாளிக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கும். முனீர் ஆத்திரத்தில் அவள அடிச்சிட்டா வம்பு...அதனால் தான் உன் சிப்டில் போட்டேன்,கொஞ்ச நாள் பொறு, மாத்தித்தரேன்.அதிகம் அவனை மிரட்டவோ வேலை வாங்கவோ வேண்டாம், அவனை விரைவில் ரியாத் பணிமாற்ற செய்து விடுவார்கள், கவலைப் படாதே."சமாதானம் ஆகாமலேயே திரும்பி வந்தேன்.

முனீர் இதற்குள் பணிகளை ஆரம்பித்திருந்தான். அப்படி ஒன்றும் மோசமில்லை. அவன் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தான்....அதிகம் பேசுவதில்லை. சில நேரம் சக வங்காளிகளுடன் வாய் ஓயாது பேசுவான். சில நேரம் ஊருக்கு கடிதம் போல எதையோ எழுதிக் கொண்டிருப்பான்.சொல்லும் வேலையை விரைவில் முடித்து விட்டு அமைதியாக அவன் வேலையை செய்து கொண்டிருப்பான்.ஒரு வாரம் சென்றிருக்கும்.டயட்டரி கிச்சன் இரைச்சல் நிறைந்தது. வாக் இன் ரெப்ரிஜிரேட்டர்களின் இரைச்சலையும் மீறி பாத்திரம் கழுவும் இடத்திலிருந்து ஒரு பாட்டுக் குரல். பொதுவாகவே வங்காளிகள் பாடிக்கொண்டே வேலை செய்வார்கள்.நன்றாகவும் பாடுவார்கள். ஆனாலும் இது மனதைப் பிசைவது போலும் வங்காளிப் பாடல், உச்சஸ்தாயில் பிசிறின்றி. நான் தானாகவே அந்த இடத்துக்குப் போனேன். முனீர் வங்காளிப் பாடலைத் தன்னை மறந்து பாடியபடி வேலை செய்து கொண்டிருந்தான். சோகப்பாடலுடன் இணைந்து போனதில்கண்களில் சிவப்பு....முனீரின் அருமையான குரலில் ஈர்க்கப்பட்டு அவன் இருக்கும் இடத்திற்குப் போனேன். என்னைப் பார்த்தவுடன் வெட்கச் சிரிப்புடன் பாட்டை நிறுத்தி விட்டு"யெஸ் சிஸ்டர், " என்றான்."முனீர் நீ பாடியது கஜல் தானே...உனக்குப் பாடத் தெரியுமா"எனக்குப் பாட்டெல்லாம் தெரியாது. கேட்டாப் பாடுவேன் அவ்வளவு தான். ஹிந்தி நடிகை காஜல் வேண்டுமானால் தெரியும்."நல்லா பாடற நீ முனீர்.ஆனா இவ்வளவு சத்தமா பாடினியானா, காரிடார்ல கேக்கும். முத்தவா நேரே உள்ள வருவான்.நான் தான் பதில் சொல்லணும். அதனால் சத்தத்தைக் குறைச்சுக்க." நான்."யெஸ் சிஸ்டர்." என்றான்.இங்கே முத்தாவா எனப்படும் மதக்குருமார்கள் தொல்லை கொஞ்சம் அதிகம்.குறுக்கும் நெடுக்கும் நடந்திட்டு இருப்பாங்க.சரியா தலைக்கு முக்காடு இடாத பெண்கள், அல்லது அதீத மேக்கப் செய்த பெண்கள் இவர்கள் கண்களில் பட்டால் போச்சு. கூப்பிட்டு அறிவுரை அறுத்து விடுவார்கள். இவர்கள் பொதுவாக பெண்களை நிமிர்ந்தும் பார்க்க மாட்டார்கள். ஆனால் இப்படிப் பட்ட பெண்கள் அதிகமாக லிப்ஸ்டிக் அணிவது எப்படித் தெரிகிறதோ....ஏதாவது ஸ்பெசல் விசன் பவர் இருக்குமோ. அதன்பின் சத்தத்தைக் குறைத்துப் பாட ஆரம்பித்திருந்தான். உண்மையாகவே நல்ல சாரீரம்.

இரண்டு நாட்கள் கழித்து என் மேளாளர் பெண்மணி என்னைக் கேட்டாள். "முனீர் ஓ.கே.வா?வேறு ஷிப்ட் மாத்தவா அவனை?" என்று."நான் பிரச்சனை எதுவும் இல்லை. மற்றவர்களை விட நன்றாகவே வேலை செய்கிறான்" என்றேன்.

அன்றைக்கு மூடிக்கொண்டிருக்கும் எலிவேட்டரை நிறுத்த மகா புத்திசாலித்தனமாக கதவுகளுக்கிடையே கால் நீட்டியதில், என் ஷூ, எலிவேட்டர் கதவில் சிக்கியது. அதை இழுக்க எத்தனித்ததில் ஒற்றைக் கால் ஷூ ஹீல்ஸ் தனியே கழண்டு வந்து விட்டது.அடக்கொடுமையே...இப்படியே எப்படி நடப்பது?ஒரு காலில் மட்டுமே ஹீல். வார்டுக்குப் போக முடியாமல். அறைக்கே திரும்பி வந்தேன். ஷூவை கையில் செத்த எலியைத் தூக்கியவாறு தூக்கிக்கொண்டு. மனதில் வேறு காலநேரமில்லாமல் கவிதை முளைத்தது. எனது அவசரபுத்தியை நொந்தபடி அமர்ந்திருந்தேன். ஆபாத்பாந்தவனாக வந்த முனீர்,"என்ன சிஸ்டர் இதெல்லாம் ஒரு பிரச்சனையா..குடுங்க ஷூவை"என்று வாங்கியவன் மெயிண்டனன்ஸ் எடுத்துச் சென்றிருப்பான் போல. திரும்பி வரும் போது ஷூவும் ஹீல்ஸும் டைவர்ஸ் காலம் முடிந்து இணைந்து சிரித்தன."தேங்க்ஸ் பிரதர்" என்றேன்.சிரித்தபடி சென்று விட்டான்.

எனக்கு மருத்துவமனையில், போரடித்தால் எழுதுவது வழக்கம். எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன்.அது போலத்தான் அன்றும் எழுதிக் கொண்டிருந்தேன்.ஏதோ கேட்க என் டேபிளின் அருகே வந்த முனீர்,"சிஸ்டர் என்ன எழுதறீங்க" என்றான்.அவனது கேள்வியால், தடைபட்ட கற்பனை ஓட்டம் சற்றே கோபமளிக்க அமைதியாக இருந்தேன்."இது தான் உங்க ஊர் எழுத்தா? நல்லா இருக்கு சன்னா தால் போல...ஏன் மடித்து மடித்து எழுதறீங்க? இது என்ன பாட்டா?" என்றான்.என்ன இத்தனை கேள்வி? எழுதுவது கவிதை என்றால் அதற்கு வேறு அப்படின்னா என்னன்னு ஆயிரம் கேள்வி கேப்பான்,இதில உவமை வேற சன்னா தாலாம்... என்று மனதில் நினைத்தவாறு,"இல்லை முனீர்,லெட்டர் எழுதறேன் ஊருக்கு...பாரு...தரையில சூப் சிந்திருக்கு.கிளீன் செய்யலையா?" என்றேன்.என்ன புரிந்ததோ அங்கிருந்து நகர்ந்து விட்டான். பத்து நிமிடம் கழித்து வந்தான்."சிஸ்டர் பேனா இருக்கா" என்றான்."எதுக்கு,நேற்றுத்தான ஒரு பேனா குடுத்தேன். ஒவ்வொரு முறை லெட்டர் எழுதும் போதும் புதுப்புது பேனா தான் உபயோகிப்பையா, இரு எழுதிட்டுத் தரேன்" என்றேன்.அப்புறம் பிசியில் மறந்தே விட்டேன் அவன் பேனா கேட்டதை.

அன்று இரவு ஏழு மணிக்கு எனக்குப் பணி முடிந்து வீடு திரும்பி விட்டேன்.இரவு பத்து மணிக்கு சரளா என்ற கிச்சன் ஊழியை எனக்கு போன் செய்கிறாள்."சிஸ்டர், இந்த முனீர் கத்தி எடுத்து நம்ம லிசாவை குத்துவதாக மிரட்டினான், லீசா பயந்து.. தப்பித்து ஓடிவிட்டாள் எப்படியோ" என்றாள் சரளா.அய்யோ...ஏழு மணி வரை ஒன்றுமில்லையே. இது என்ன புதுத் தலைவலி.. என்று சலித்தபடியே உறங்கச்சென்றேன்.

அடுத்த நாள் என்ன நடந்திருக்கக் கூடும் என்ற குழப்பத்தூடே பணிமனைக்கு சென்ற என்னை சந்திக்க, காரிலிருந்து இறங்கும் போதேமுனீர் வந்துவிட்டிருந்தான். அனல் கக்கும் பார்வை ஒன்றை அவன் மேல் வீசினேன். என்ன முனீர் உனக்கு அறிவே இல்லையா? கத்தி காட்டி மிரட்டினியா லிசாவை?சிஸ்டர் நேத்து லிசா நீங்க போன உடனேயே ரூமுக்குப் போயிட்டா. பேசண்ட் டிரே 150 ஐயும் நான் தான் கீளின் செய்தேன்.எல்லா வேலையும் நான் செய்து முடித்தவுடன் சாவகாசமாகத் திரும்பி வந்தாள் லிசா. நான் ஏன் வேலைநேரம் வேலையை முடிக்காமல் வெளியே போன? அப்படின்னு கேட்டதுக்கு, என்னை "போடா, பைத்தியகாரா" என்றாள்.நான் கோபத்துடன் கையில் இருந்த கரண்டியை அவள் மேல் வீசுவதற்காக நீட்டினேன். கத்தியெல்லாம் எடுக்கவே இல்லை என்றான் பரிதாபமாக.நான் அவனை நம்பினேன். எனக்குத் தெரியும் லிசாவைப் பற்றி.அவள் இப்படி செய்யக்கூடிய பெண் தான்.சரி முனீர் என்னுடன் வா. நான் பேசுகிறேன், என்று அழைத்துச் சென்றேன் சௌதி தலைமையிடம், ஒரு வழியாக அவளுக்கு விளக்கி எல்லாரையும் அழைத்து " சண்டை போடக்கூடாது, நீங்கள் அனைவரும் வேறு வேறு இடத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்..ப்ளா..ப்ளா..."என்றெல்லாம் அவள் லெக்சர் கொடுத்தபின் அப்பாடா என்று கலைந்தோம்.லிசாவை பெர்சனலாக கண்டித்தேன். அடுத்த நாளே எல்லாம் சரியாகிப் போய் விட்டது.

மறுபடியும் கல்லூரி போல களைகட்டிவிட்டது டயட்டரி.அன்று எதற்காகவோ முனீரை பலமாகக் கடிந்து கொண்டேன். நான் கடிந்து பேசுவது அரிது. சண்டை போட்டாலும் வழிய சமாதானத்திற்கு போய் விடுவேன்.அப்படித்தான் முனீர் இனி இப்படி செய்யாதே என்று அவனைப் பார்த்துக் கூறும் போது, அவன் கேண்டீனில் அமர்ந்திருந்தான். கையில் ஏதோ புத்தகம். வார, மாத இதழ் ஏதோ போல....என்று நினைத்தவாறு,அட்டையைப் பார்த்தால், அட்டையில்...தெரிந்த தாடி வைத்த முகம்....எங்கோ பார்த்த முகம்."என்ன புத்தகம் இது முனீர்?" என்றேன்.இது ரபீந்தரநாத் கவிதைகள் என்றான் பாருங்கள்...என் முகத்தில் ஈயாடவில்லை.ரபீந்தரநாத் தாகூர் கவிதையா...நிஜமாகவே அதிர்ச்சியாகத் தான் இருந்தது. கையில் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். ஜிலேபி பிழிந்தது போல வங்காளி எழுத்துக்கள். அட்டைப்படத்தில் ரபீந்திரநாத் தாகூர் தாடியுடன்.கவிதையெல்லாம் படிப்பியா நீ? ஏன் என்னிடம் சொல்லலே?சிஸ்டர்... உங்களுக்கு கவிதைன்னா என்னன்னு தெரியுமா? பிடிக்குமா? உங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சேன்.இது அவன் முறை.

காத்து அவன் பக்கம் .இல்ல, முனீர் கொஞ்சம் தெரியும். சரி இங்க எப்படி உனக்கு புத்தகம் கிடைக்குது...ரொம்ப விலை அதிகமாச்சே...
அதுவா...ஊருக்கு யார் போனாலும் புக்ஸ் தான் வாங்கிட்டு வரச் சொல்லுவேன். நானும் எழுதுவேன்.
அடப்பாவி, நீ எழுத வேற செய்வியா? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தராதே...எனக்கு நெஞ்சு வலி வரப்போகுது.
நாளைக்கு நான் எழுதுனதெல்லாம் எடுத்துட்டு வர்றேன். நிறைய எழுதி வெச்சிருக்கேன். 10 ஆம் வகுப்பிலிருந்து எழுதறேன். எங்கிட்ட ஆங்கில கவிதை புத்தகங்கள் கூட இருக்கு. வேணுமா உங்களுக்கு?
அந்த புத்தகத்தைப் பிரித்து ஒரு பக்கத்து கவிதைக் காட்டி இதென்ன கவிதை என்று கேட்டேன்.
இது பணத்தைப் பற்றிய கவிதை. ஏழை ஒருவனின் மனநிலை எப்படி இருக்கும் என்பது பற்றியது, என்று அரபிங்லீஸில் விளக்க ஆரம்பித்தான்.

ரசித்துப் படிப்பவர்கள், கவிதையைப் பற்றி விவரிக்கும் போது...சற்றே உணர்ச்சிவசப்படுவார்கள். அதே போல ஏற்ற இறக்கம் கொண்ட குரலில் அவன் அதைப் படித்து விவரிக்கவும்....உறைந்தே போனேன்.

அடடா...முனீர், எனக்கு உன் லேங்குவேஜ் தெரியாது. தெரிஞ்சிருந்தா நல்லா இருக்கும்.நீ படி.என்று சொல்லிவிட்டு கிளம்ப நினைக்கையில்,

"சிஸ்டர் ஒரு நிமிசம்,எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?""என்ன முனீர்?""

இந்தியாவில் வெள்ளிக் கொலுசு அழகாகக் கிடைக்குமாம். எனக்கு ஒரு ஜதை வேண்டும் யாரேனும் அங்கிருந்து வருபவர் இருந்தால் அனுப்பச் சொல்லுங்களேன். பணம் தந்து விடுகிறேன்".
"யாருக்கு?""இந்த வெகேசனில் அநேகமாக எனக்கு கல்யாணம் இருக்கும். கல்யாணப் பொண்ணுக்குத்தான் கொலுசு.
""அட,பொண்ணுப் பாத்தாச்சா? எங்கே பொண்ணு...உங்க ஊரா...இல்லை இங்கத்த பொண்ணா?"
"பொண்ணெல்லாம் ரொம்ப வருசத்துக்கு முன்னாலேயே பாத்தாச்சு...டீச்சரா இருக்கு...பங்களாதேசில்.10 வருடக் காதல்.பேரு ரஸியா."
"அடி சக்கை...நான் எதிர்பார்க்கவே இல்லை...கண்டிப்பா போட்டோ வெச்சிருப்பியே வாலெட்ல...காமி பாக்கலாம்..ரொம்ப அழகா?"
"அழகா...?என்ன இப்படி கேட்டிட்டீங்க...?அந்த மாதிரி ஒரு மூக்கு முழிய நீங்க பாத்திருக்கவே மாட்டீங்க...கத்தி மாதிரி கூர்மையான மூக்கு...உங்க மூக்கெல்லாம் சப்பை மூக்கு சிஸ்டர். "
"சரிதான், அதான் கத்தி மூக்கு மனசக் குத்திக் கிழிச்சிருச்சு போல..."
"மூக்கில ஒரு மூக்குத்தி வளையம் போட்டிருப்பா பாருங்க...அதில மனசு மாட்டிட்டு ஊசலாடும்....கண்ணு இருக்கே...."
"சரி...சரி...என் கல்யாணப் பரிசா உன் ஆளுக்கு கொலுசு கேரண்டி. இப்ப வேலையப் பாக்கலாம். அப்புறம் வர்ணிப்பாயாமாம்."

சிரிப்புடன் இருக்கைக்குத் திரும்பினேன்.அடுத்த நாள் எதேச்சையாக மற்றொரு வங்காளி அகமதுவிடம் முனீர் கல்யாணம் பற்றி விசாரித்தேன்."என்ன அகமது...முனீருக்கு இந்த வெகேசனில் கல்யாணமாம்...உன் தோழன் தான...நீ போறயா கல்யாணத்துக்கு?"

"கல்யாணமா...யாரு சொன்னா? முனீர் சொன்னானா?"அகமது.

"ஆமாம்...பொண்ணு பேரு கூட ரஸியாவாம். எனக்கு பிடிச்ச பேரு அது." நான்.சிஸ்டர்...அது பெரிய கதை...இவனும் ரஸியாவும் பள்ளிக்கூடத்திலிருந்தே லவ் பண்ணினாங்க. முனீர் நல்ல பணக்கார வீட்டுப் பையன்.திடீருன்னு அப்பா இறந்ததில்...வியாபாரம் நட்டமாகி...தெருவுக்கு வந்திட்டாங்க. இவன் படிக்க முடியாம...கிடைச்ச விசாவ வாங்கிட்டு சௌவுதில கிளீனர் வேலைக்கு வந்திட்டான்.இப்ப தம்பியப் படிக்க வைக்கிறான்,போன வாரம் கூட தம்பிக்கு கம்ப்யூட்டர் வாங்கி அனுப்பினான். சரி, நல்லது தான?ஏதோ இவனும் சம்பாதிக்கிறான் தானே அகமது. அந்த குடும்பம் தலை நிமிரும் இல்லையா?அந்தப் பொண்ணு ரஸியா...டீச்சர்...இவங்க நிலை இப்படி ஆனவுடன், வீட்ல பாத்த பையனக் கல்யாணம் செய்துருச்சு...இப்ப ஒரு குழந்தையும் இருக்கு அதுக்கு. அந்த சேதி கேட்டதிலிருந்து இவனுக்கு கொஞ்சம் சித்தம் பேதலித்து விட்டது.இவன் அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆனதை ஒத்துக்கவே மாட்டேங்கிறான், புடவை,வளையல்ன்னு பைத்தியகாரன் மாதிரி வாங்கி சேத்துகிட்டிருக்கான். இவனுக்கு அடிக்கடி தற்கொலை பண்ணிக்கிற மாதிரி கனவு வேற வரும். பயங்கரமா கத்துவான்.

பேச வார்த்தை வரவில்லை. கண்கள் நீர் தேக்கியது.எனக்குப் பிடித்த பெயர் ரஸியா....சட்டென்று பிடிக்காமல் போனது.சைக்யாட்ரிஸ்ட் பாக்கலாமா அகமது? ட்ரீட் செய்தா சரியாப் போகும் தான?சிஸ்டர்...நம்ம சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட நாங்கெல்லாம் கூட்டிட்டுப் போனோம். இவன் என்னடான்னா அங்க போயி அந்தம்மாவப் பேசவிடாம ஒரு மணி நேரம் இவனே பேசினான். அந்தம்மா இவன விட சரியான லூஸு, பெர்சனல் டிபார்ட்மெண்டுக்கு, இவனை டெர்மினேட் செய்வது தான் நல்லதுன்னு மெயில் அனுப்பிருச்சு.

அப்புறம் நாங்கெல்லாம் கெஞ்சிக் கூத்தாடி, மறுபடி வேலைக்குச் சேர்த்தோம். என்ன செய்ய? எல்லாம் விதி.அகமது அந்த இடத்தை விட்டு அகன்றான்.

சிலை போல சமைந்து அமர்ந்திருக்கையில் முனீர் வந்தான், துடைப்பமும் கையுமாய்.அந்த பெரிய ஹாலைத் துடைக்க ஆரம்பித்தான். வாய் கொள்ளா புன்னகையுடன்..ஹிந்திப்பாடலை முணுமுணுத்தவாறு,நான் அருகில் சென்றேன்.

என்ன முனீர் ஒரே சிரிப்பு...என் குரல் இளகியிருந்தது.

"சிஸ்டர்...உங்க கிட்ட மட்டும் சொல்றேன்.நீங்க மட்டும் தான் என்னைப் புரிஞ்சிப்பீங்க...இந்த அழுக்குத்தரையைத் துடைக்கும் போது...தரையில் சில நேரம் ரஸியாவின் முகம் தெரியும்.....என் துடைப்பம் அழகான காதல் கவிதையாய்...அவள் முகம் வருடிச் செல்லும். இது காதல் துடைப்பம் சிஸ்டர்....." தொடர்ந்து பாடியபடி வேகமாகத் துடைக்க ஆரம்பித்தான்.சாத்தியமேயில்லை.....

இன்னும் எத்தனை காதல் துடைப்பங்களோ....கழிவுகள் துடைக்கும் பணியில்.....

நல்லதோர் வீணை செய்து நலங்கெடப் புழுதியில் எறிந்து விட்டாய்.........

கதை கதையாம் காரணமாம் (கதை)

கமலாவின் மனது உலையில் போட்ட அரிசியென பொங்கிப் புகைந்து கொண்டிருந்தது. புசுபுசுவென மூச்சு விட்டபடி, பேப்பரும் பேனாவுமாக ஹாலின் குறுக்கே நடந்து கொண்டிருந்தாள். எப்படி சொல்லலாம் என்னப் பார்த்து...என்னப் பத்தி என்ன தெரியும் இவளுக்கு ... பேச வந்துட்டா பேச...நாங்கெல்லாம் எட்டையபுரத்தில... பாரதிக்கு பக்கத்து வீடுடி, ஆனானப்பட்ட பாரதியோட பாட்டியே, எங்க பாட்டியப் பார்த்து. என்னமா எழுதறீங்க நீங்கன்னு கேட்டிருக்கா தெரியுமா?அடுப்பில் போட்ட கடுகாய் வெடித்துக் கொண்டிருந்தாள் கமலா.

"என்ன நடந்ததுன்னு சொல்லாம நீயே புலம்பிட்டிருந்தா எப்படி?சொன்னாத்தானே தெரியும்...இந்தா இந்த ஜூஸை வாங்கிக் குடிச்சிட்டு, பொறுமையா சொல்லு" இது கமலாவின் கணவன் பட்டாபி.

அந்த கோடிவீட்டு குமுதாயில்ல...அவள இன்னைக்கு லேடிஸ் கிளப்பில பார்த்தேன்னா...வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சிட்டிருந்தா..என்னன்னு கேட்டா எதோ இவ சமையல் குறிப்பாம்..அது மங்கையர் மலர்ல வந்துடுச்சாம்...என்னமோ கின்னஸ் ரிக்கார்டு பண்ணனாப்ல...இருனூறு மங்கையர்மலர் வாங்கி காலனி முழுக்க இலவசமா படிக்கக் குடுக்கிறான்னா...கேட்டேளா இந்த அக்கிரமத்த? கேக்கிறப்ப எல்லாம் பூம்..பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு காசை எடுத்துக் குடுக்கிறான் அவ ஆம்படையான்...நீங்களும் தான் இருக்கேளே?

"சரிடா செல்லம் இதில நீ கோபப்படற மாதிரி என்ன ஆச்சி?" பட்டாபிகுறுக்கே பேசாதீங்கோன்னா..அப்புறம் எனக்கு கோர்வையா சொல்ல வராது...நானும் குமுதா இந்த அலட்டு அலட்டுறாளேன்னு "இது என்னடியம்மா பெரிய விசயம்?நானெல்லாம் எழுதாத கதையா? ...கட்டுரையா? ஒரு காலத்தில என் பேரு வராத பத்திரிக்கையே இல்லன்னு" ஒரு பிட்டத் தான்னா போட்டேன்.அதுக்கு அவ "டெலிபோன் டைரக்டரி, கல்யாணப் பத்திரிக்கை, பூப்பு நன்னீராட்டு விழாப் பத்திரிக்கை இதெல்லாம் பத்திரிக்கை கணக்கில வராது மாமி " ன்னு சொல்லிட்டு என்ன நக்கலாப் பார்த்தான்னா...சுத்தியிருந்த மூதேவிங்க வேற கொள்ளுன்னு சிரிக்குதுங்கள்..எனக்கு இப்ப நெனைச்சாலும் அவமானம் புடிங்கித் தின்றதுண்ணா...

"சரிடா இதெல்லாம் நோக்கு சகஜமான விசயம் தானே...நீயா எதுக்கு துண்டக் குடுத்து துப்பட்டிய வாங்கிக்கிற? "இது பட்டாபி.

"அய்யோ,அய்யோ.. நீங்க எப்பவும் என்னத்தாண்ணா குறை சொல்லுவேள்..உலகத்திலிருக்கிற அத்தனை பொம்மனாட்டியும் நல்லவா உங்களுக்கு...நாந்தான் கெட்டவ...வீட்டுக்குள்ளயே எனக்கு எதிரிய வளர்த்து வெச்சிருக்கேனே...அப்பவே சொன்னா எங்க பாட்டி...பட்டாபி.. கொட்டாவின்னுகிட்டு பேரே நல்லாயில்ல..இவனக் கட்டாதேன்னு...கண்ணைத் திறந்திட்டு இருக்கிறப்பவே அந்த ஈஸ்வரன் என்ன குழில தள்ளிட்டானே"சூடு பிடிக்கிறது அழுகை...

"சரி,சரி அழாதே..இப்ப என்ன பண்றது? நீயே சொல்லு" பவ்வியமாய் பட்டாபி.எது எப்படிப் போனாலும் எனக்குக் கவலை இல்லை...நானும் ஒரு கதை எழுதனும். அது அவள் விகடன்ல வரணும். நானூறு அவள் விகடன் வாங்கி நானும் ஊருக்கே இலவசமாக் குடுக்கணும்...குமுதா ஆம்படையான் மாதிரி, அவ எழுதறப்ப எல்லாம் கண்ணு முழிச்சு காபி போட்டி குடுக்காட்டியும் பரவாயிலை...,என்னை டிஸ்கரேஜ் பண்ணாதேள் அது போறும்.குமுதா வீட்டு வேலைக்காரி மினிம்மா சொன்னா...அந்த சமயல் குறிப்ப எழுதினதே குமுதா ஆம்படையான் தானாம்...ஒரு வாரம் ஆராய்சி பண்ணி நார்த் இண்டியன் சமையலையும்...சவுத் இண்டியன் சமையலையும்...சைனீஸ் கூட மிக்ஸ் பண்ணி புது வெரைட்டி குடுத்தானாம்...நீங்களும் இருக்கேளே...ஒரு ரசம் வெக்கக் கூடத் துப்பில்லை...பொரியல் பண்ணுங்கன்னா உசிலி பண்றேள்...உசிலி பண்ணுங்கண்ணா அவியல் பண்றேள்..ஒரு சாதமாவது வடிக்கத் தெரியறதா...அதையும் குழைச்சு வெக்கறேள்...எல்லாம் உங்கம்மாவைச் சொல்லணும்...வணங்காம வளத்தி விட்டுருக்கா...இப்ப நாந்தான படறேன்...அது முடிஞ்சு போன கதை...நான் ஒண்ணும் சமையல் குறிப்பு எழுதற ஆள் கிடையாது...நான் எழுதற கதையால ஆஸ்கர் அவார்டு வீடு தேடி வரணும்...ஆஸ்கார் விருது வாங்கியே தீருவேன் என்ற மனைவியை அதிர்ச்சியுடன் பார்த்தார் பட்டாபி."கதைக்கெல்லாம் ஆஸ்கார் கொடுக்க மாட்..." பாதியுடன் வாயை மூடிகொண்டு பேஷ்...பேஷ் பிரமாதம் என்றார். வாயை விட்டு அதுக்கு வேற வாங்கிக் கட்டணுமா என்ன?கதை எழுதறதுன்னு முடிவு பண்ணியாச்சு. நல்ல மேட்டர் வேணுமே? மூளையை கசக்கி, துவைத்து, அலசி, சொட்டு நீலம் போட்டு... யோசித்தாள் கமலா.

இத்தனை நேரம் சொப்பு விளாண்டுட்டிருந்த கமலாவின் கடைக்குட்டி மீனு ஓடி வந்தாள். அம்மா பத்திரிக்கைக்கு எழுதப் போறீயா? எனக்கு கூட நிறையப் பாட்டு தெரியும்... நான் சொல்றேன்... நீ எழுது... நாந்தான் உனக்கு சொல்லிக் குடுத்தேன்னு மட்டும் யார்கிட்டயும் சொல்லப்படாது... சரியா?"தோ...தோ நாய்க்குட்டி... துள்ளி வா..வா.. நாய்க்குட்டி" என்று ராகம் போட்டு ஆரம்பித்தாள்.

சனியனே... வந்து வாச்சிருக்கு பாரு எனக்குன்னு... அந்தண்டை போ.. தொப்.. தொப் என்று முதுகில் அடிவாங்கியதில் அழுது கொண்டே அப்பாவிடம் ஓடினாள்.

"அவள ஏம்மா அடிக்கற? கதை வேணும்னா எங்கிட்ட கேக்க வேண்டியது தானே..?" மேதாவித் தனமா பேசறானே இது கமலாவின் புத்திர சிகாமணி வெங்கி.

அம்மா இதப் பாரு... இப்ப ஹாரி பாட்டர் கதைதான் ஹாட் டாபிக். அதையே சாரி பாட்டர்ன்னு மாத்திர வேண்டியது தான்... நம்ம அம்புஜம் பாட்டி தான் சூனியக்கார கிழவி.... மோதிரத்தை அடிச்சுண்டு துடப்பக் கட்டைல ஏறிப் பறந்துண்டே போறா... நம்ம விச்சு தாத்தா ஒட்டடக் குச்சில துரத்திண்டு போறார்... எப்படியிருக்கு ஓப்பனிங்?

"ஏண்டா அம்மா இப்பத்தான் மொத கத எழுதறா? எடுத்தவுடனே அபசகுனமா தொடப்பக்கட்டை. வெலக்குமாறுன்னு அச்சு பிச்சுன்னு ஒளரிண்டு... நல்ல தண்ணி சொம்பு.. இல்லை பசுமாடு வராப்ல ஸ்டார்டிங் வெக்கக்கூடாதாடா அம்பி?" இது பட்டாபி.

"ரெண்டு பேரும் செத்த வாயை மூடறேளா? வீட்ல நா ஒருத்தி இருக்ககேன்றதையே எல்லாரும் மறந்துட்டேளா? இது மூத்த குமாரத்தி வனஜா. அம்மா நோக்கு நான் சொல்ல மாட்டேனா நல்ல கதை? கேளு... நம்ம அம்புஜம் பாட்டி அடிக்கடி சொல்லுவாளே.. தேங்காய் சட்னி அரைக்கறச்ச பொட்டுக்கடலைய சிந்தாம அரைன்னு.. நீதான் வாய்க்கு கொஞ்சம்... கல்லுக்கு மிச்சம்ன்னு அரைப்பியே... அப்படி அரைக்கறச்ச ஒரு பொட்டுக்கடலை கீழே விழுந்துடுத்து... அது அப்படியே உருண்டுட்டு வீடு வீடாப் போயி நீயும் பாட்டியும் போடற சண்டையப் பத்தி கோள் சொல்லுது. அதான் கதை . எப்படி இருக்கு?"

நிறுத்து..நிறுத்து... இதே கதையத்தான அந்த சுசித்ரா பொண்ணு குறு மிளகின் கதைன்னு எழுதிச்சு" இது பட்டாபி.

அதாருண்ணா சுசித்ரா எனக்கு தெரியாம? திடுக்கிடுகிறாள் கமலா.."அதான் கமலு... ரேடியோ மிர்சில வருமே... வெடவெடன்னு... முருங்கக்கா மாதிரி... மூக்கு மட்டும் எடுப்பா இருக்குமே.. அந்தப் பொண்ணுதான் குறுமிளகின் கதைய எழுதிச்சி.. அவார்டு கூட வாங்கிச்சே..", இது பட்டாபி..

நேக்குக் கூடத் தெரியாம எப்படிதான் இப்படி பொது அறிவு பொங்கித்தோ உங்களுக்கு? அந்தக் கதை வேண்டாண்டி... அப்புறம் காப்பி அடிச்ச கதைன்னு கேஸ் போடுவாள்.. கோர்ட்டு படியேறாத குடும்பம்டி இது.ஏன்னா! உங்க தங்கை எதித்த ஆத்துக்காரனோட ஓடிப்போனாளே அதைக் கதையா எழுதட்டா?"

அடிச்சண்டாளி.. .குடும்ப மானத்தை பத்திரிக்கை வரைக்கும் கொண்டு போகத் துணிஞ்சிட்டாளே உன் பொண்டாட்டி... ஏண்டியம்மா உன் பொறந்தாத்தில ஓடிப்போகாத கதையா? அதையே எழுதிடியம்மா... ஏம்மா எம்மகளை வெச்சுத்தான் நீ கதை எழுதி... பெரிய்ய்ய்ய்ய கதாசிரியர் ஆகணுமா?".. .இது பட்டாபியின் அம்மா அம்புஜம்.

நீ வேற சும்மாயிரும்மா... அதையெல்லாம் கமலி எழுதமாட்டா? இல்ல கமலு?"

ஆமா அப்படியே எழுதிட்டாலும்..", நொடிக்கிறாள் அம்புஜம் பாட்டி.

இத்தனை களேபரத்திற்கிடையில் என்ட்ரி குடுக்கிறார்... பட்டாபியின் தந்தை விச்சு... "என்னம்மா மருமகளே கதைதான வேணும்.... முக்கு வீட்டு தமிழ் வாத்தியார் என் ஃபிரண்டு தானே அவன் கிட்ட கேட்டா சொல்லப்போறான்... "

சொல்லி வாயை மூடவில்லை."அந்தாளு சாதாரண வாத்தியாரில்லை... லொள்ளு வாத்தியாரு... மடிசார் கட்டிண்டு நான் நடந்து போறச்சே.. மொறைச்சு பாத்திண்டே "போட்டிருக்கும் மடிசார் வேசம் பேஷாப் பொருந்துதே... எனது பார்வை கழுகுப் பார்வை தெரிஞ்சுக்கோன்னு பாடறான்னா" கழுகுப் பார்வையாமா... சரியான கொரங்குப் பார்வை... பி.வாசு பையன்னு நெனப்பு...
ஏன்னா நான் அவ்வளவு அழகாவா இருக்கேன் மாம்பழ மடிசார் கட்டுல..?

அப்படியில்ல கமலு... உன்னைப் பார்த்தா வாத்தியோட செத்துப்போன எள்ளுப் பாட்டிய பாத்த மாதிரி இருக்காமா... அதனால தான் வாத்தி அப்படிப் பாத்திருக்கார்..இதை இப்படியே விட்டா சரியாகாதென புரிந்து கொண்ட பட்டாபி...என்ன கமலு... யோசிச்சு யோசிச்சு கண்ணுக்குக் கீழே கருவளையமே போட்டிடுத்து போ... எளம் வெள்ள்ரிக்கா நறுக்கி வெச்சிருக்கேன்... அதை கண்ணில வெச்சிட்டு தூங்கினா கனவில நல்ல கதையா தோணும்... என்று எஸ்ஸாகிறார்.

மறுநாள் காலை... பயத்துடன் எழுந்து வருகிறார் பட்டாபி.எண்ணன்ணா... எழுந்துட்டேளா? சூடா உங்க கையால காப்பி போட்டுண்டு வாங்க...

காப்பியுடன் வரும் பட்டாபி... என்னடா செல்லம்... ஏதாவது கதை கிடைச்சுதா?

கதையா...?அதெல்லாம் வேலையில்லா பொம்மனாட்டி பண்ற வேலைன்னா... எனக்கு மணி, மணியா புள்ளைங்க இருக்கு... கண்ணுக்கு நெறைவா நீங்க இருக்கேள்... உங்களையெல்லாம் கவனிக்கறத விட்டுட்டு கதை,கத்திரிக்காய்ன்னு டயத்த வேஸ்ட் பண்ணச் சொல்றேளா?பேப்பர் செலவு, போஸ்டல் செலவுன்னு ஆம்படையான் சம்பாதிக்கறத விசிறி அடிக்கற பொம்மனாட்டி நான் இல்ல...

எதிர் பாராத திடீர் திருப்பத்தால அதிர்ந்து நிற்கிறார் பட்டாபிஆனான்னா... பெரிசா இல்லன்னாலும் இந்த வைரமுத்து, பா.விஜய் அளவுக்கு கவித என்னால எழுத முயும்னு நெனைக்கிறேன்.... கவிதைல ஒரு அட்வான்டேஜ் இருக்குண்ணா... பக்கம் பக்கமா எழுத வேண்டியது இல்லை.. நாலு வரி யாருக்கும் புரியாத மாதிரி எழுதினாப் போறும்... பக்கத்துக்கு நாலு லைன்... நாப்பது பக்கம்... புஸ்தகமே போட்டுரலாம்.... அதாண்னா ஃபேஷனே.... மூச்சு விடாமல் தொடர்கிறாள்.அதிர்ச்சி தாங்காமல் மயக்கம் போட்டு விழுகிறார் பட்டாபி

ஐந்து ரூபாய்க்கு ரெண்டு (கதை)

விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் வருடத்திற்கு ஒரு முறை, வாராது வந்த மாமணியாய் ...அந்த வருடம் கூடுதலாகவே இரண்டு மாதம் கிடைத்து. என் 4வயது மகனுடன் கோவை சென்று இறங்கினேன். அம்மா வீட்டில் தங்கை குடும்பம் மற்றும் அம்மாவுடன் ஜாகை.

முதல் வாரம் பிரயாணக் களைப்பும்..பார்க்க வரும் உறவினர்களுக்கான விருந்தோம்பலுமாகக் கழிந்தது.இரண்டாவது வாரம் சற்றே ஆசுவாசமாக இருந்தது. வழக்கம் போல, நானும் என் தங்கையும், திண்ணையில் உட்கார்ந்து வம்பளக்க ஆரம்பித்தோம். வீட்டின் முன் பக்கம் கதவின் இரு பக்கமும் உள்ள குதிரைத் திண்டில்...நாங்கள் அமர்ந்து விட்டோமென்றால், தெருவே களை கட்டப் போகிறது என்று அர்த்தம்.

அந்தத் தெரு ஒரு கட் ரோடு. வசிக்கும் குடும்பங்கள் எல்லாருமே நல்ல பழக்கம். எனவே போக வருவோரை இழுத்து வைத்துப் ஊர்க்கதை பேசுவது. பூ, காய்கறிக் காரர்களிடம் பேரம் பேசி வாங்குவது என்று நேரம் போவதே தெரியாது.

காலை 10 மணி வாக்கில், ஒரு சைக்கிள்காரன் தெருவில் நுழைந்தான்.பெரிய தட்டிக் கூடை சைக்கிள் கேரியரில் கட்டப்பட்டிருந்தது. அவன் பின்னால் ஜோவென்று சிறுவர் கூட்டம். அருகில் அவன் வந்தவுடன் கூடைக்குள் என்னவென்று ஆச்சர்யம் தாளாமல் எட்டிப் பார்த்தோம்.குட்டிக் குட்டியாய், பஞ்சடைத்த கலர் பந்துகள் போலக் கோழிக்குஞ்சுகள். கலர்க் கலராய்.., பொறித்து ஓரிரு நாட்கள் தான் ஆயிருக்கும் போல. மிளகுக் கண்ணும், கீச் கீச்சென்று சத்தமுமாக நெருக்கி அடித்துக் கொண்டிருந்தன. அத்தனை அழகு.

என் மகன் ஆரம்பித்தான். "அம்மா கோழிக்குஞ்செல்லாம் ஏன் கூடைக்குள்ள இருக்கு?""உன்னை மாதிரியே குறும்பு செஞ்சிருக்கும். புடிச்சி அடச்சி வெச்சிருப்பாங்க" என் தங்கை சொன்னாள்."போ சித்தி...நீ பொய் சொல்ற..எல்லாரும் விளையாட வாங்கறாங்க பாரு...எனக்கும் வாங்கிக் குடு"

இதற்குள் எதிர் வீட்டு பிரவீன் பச்சை ஒண்றும் சிவப்பு ஒன்றுமாக ரெண்டு கோழிகளை வாங்கி விட்டான். ஐந்து ரூபாய்க்கு ரெண்டு.

என் தங்கையின் இரண்டு வயது மகளும் அனத்த ஆரம்பித்தாள். "பெரிம்மா எனக்கும் கோழி வாந்திக் குது"நான் சொன்னேன் ...

�முதல்ல உங்கம்மாவை உன்ன நல்லா மேய்க்கச் சொல்லு...அப்புறம் கோழிய மேய்க்கலாம்.

"என்னை ஏண்டி இழுக்கற?" என்றாள் என் தங்கை.

இதற்குள் அண்ணன், தங்கை இருவரும் பாட்டியைப் பிடித்து, பணத்துடன் வெளியே இழுத்து வந்து விட்டார்கள்.

அம்மாவும், "பசங்க கேட்டா வாங்கிக் குடுக்க வேண்டியது தானே" என்று சொல்லிக் கொண்டே ஆளுக்கு இரண்டாய் கோழிக் குஞ்சுகளையும் வாங்கிக் குடுத்தும் விட்டார்கள். சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்ச் என்று கலர் கலராய் திசையொன்றுக்கு ஓடின கோழிகள்.குழந்தைகள் முகம் சந்தோசத்தில் பொங்கியது.

"எதுக்கு பெரிம்மா கோழி வாங்கிருக்கோம்?"என்றாள் தங்கை மகள்."ஆமா...நீ முட்டையா சாப்பிடறயல்ல அது தான் பெரிம்மா கோழி வாங்கி விட்டிருக்கா.. சுகுணா பிராய்லர்ஸ் மாதிரி பெரிய பண்ணையே ஆரம்பிக்கப் போறா பாரு, இந்த நாளு கோழிய வெச்சு..நீயும் கணக்கில்லாம முட்டை சாப்பிடலாம்." என்றாள் என் தங்கை.

"ஏகத்தாளம் பேசாதடி..கோழிய நல்லாப் பாத்துக்கோ...எங்காவது ஓடப் போகுது...அப்புறம் நாம பெத்த முத்துக ரெண்டும் கத்தித் தொலைக்கும்." என்றேன்.
"அம்மா கோழி கீச்சுக் கீச்சுன்னு கத்திட்டே இருக்கே...பசிக்குதாம்மா கோழிக்கு" கரிசனத்துடன் என் மகன்.
அடடே கோழிக்கு என்ன குடுக்க சாப்பிட?
முன்னப் பின்ன கோழி வளத்தாத் தான தெரியும். அம்மா வேற, கோழி வாங்கிக் குடுத்த கையோட...ஸ்கூலுக்கு கிளம்பிப் போயிட்டாங்க, நான் வந்ததை காரணம் சொல்லி ஒரு மாதம் லீவ் போடுவதாக உத்தேசம். போயிட்டு சாயந்திரம் தான் வருவேன்னு வேற சொல்லிட்டுப் போனாங்க.
அதுவரை கோழிய பட்டினி போடுவதா?"ஏண்டி, அரிசி போடலாமா கோழிக்கு...?" என்றேன் நான்.
"அரிசி சாப்பிட்டா காமாலை வராது, போன வாரம் பக்கத்துத் தெருவில ஒரு ஆடு அரிசி சாப்பிட்டு செத்துப் போயிடுச்சாம்." என்றாள் எனதருமை தங்கை.

இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சு வெச்சுக்கோ...ஆட்டுக்குத் தானடி காமாலை வந்திச்சு...கோழிக்கும் வருமா? " விசனத்துடன் நான்.

"ஏண்டி நேத்துப் பண்ண கோழி பிரியாணி ஃப்ரிஜ்ஜில இருக்கே அதை எடுத்துப் போடுவமா?" என் புத்திசாலித் தங்கை.

"உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? கோழி பிரியாணிய கோழிக்கே போடுறது பாவமில்ல, எப்பிடிடி உனக்கு மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கத் தோணுது... இரு..இரு... கோழிக்கு மோரில வெங்காயத்தை வெட்டிப் போட்டுக் குடுத்தா நல்லதுன்னு படிச்ச ஞாபகம்" இது நான்."நீ மனுசங்களுக்கான சாப்பாடு பத்தித்தான படிச்ச...கோழிக்கெல்லாம் எப்பப் படிச்ச?" எகத்தாளத்துடன் அவள்.

"எருமமாடே.. எல்லாத்துக்கும் நக்கல் பண்ணிட்டிருந்தேன்னா கோழிமாச்சு..நீயுமாச்சுன்னு போயிட்டே இருப்பேன்... நீ பிரியாணியே போட்டுக்கோ..." கோபத்துடன் நான்.

"சரி...இரு வெங்காயத்தை நறுக்கிட்டு வர்றேன்...சின்ன வெங்காயமா...பெரிய வெங்காயமா...வீட்டில சின்ன வெங்காயம் தான் இருக்கு.

" வெங்காயத்துடன் வந்தாள் என் தங்கை.வெங்காயத்தைக் கோழிக்குப் போட்டதும் கோழிகள் கொத்தித் தின்ன ஆரம்பித்தன.�

வெங்காயம் காரமடிக்காதா சித்தி கோழிக்கு" என்றான் என் மகன்."அதுக்கு தான் சித்தி பக்கத்துல ஒரு கிண்ணத்தில சக்கரை வெச்சிருக்கேன்...காரமடிச்சா சக்கரை சாப்பிட்டா சரியாப் போயிடும்.எப்படி சித்தியோட அறிவு?" பெருமையுடன் என் தங்கை.

"இதற்கிடையில் என் பாட்டி வந்தார்கள்.கோழி..வெங்காயம்.. எல்லாம் பாத்து பல்செட் வாயால் சிரித்து விட்டு... என்ன புள்ளைங்க நீங்க கோழிக்கு இத்தூண்டு குறுனையப் போடுவாங்களா? அத விட்டுட்டு தயிரு வெங்காயம்ன்னு வெட்டி வேலை பண்ணிட்டு இருக்கீங்க. அப்படியே செடி செத்தை பக்கத்தில மேய விட்டா அது பாட்டுக்கு புழு பூச்சியெல்லாம் கொத்தித் திங்கப் போகுது...வேண்டாத வேலை புள்ளைங்களா நீங்க பண்றது" என்றபடி தொடர்ந்தார்."ஆளுக்கொண்ணாப் புள்ளையும் பெத்துப் போட்டாச்சி...அப்பவும் புத்தியில்லைன்னா எப்பத் தான் உங்க ரெண்டு பேருக்கும் புத்தி வரும்?அக்காக்காரியும் தங்கச்சியும் அப்படியே ஆத்தாவக் கொண்டிருக்கு..ஒண்ணாவது எம்மவன மாதிரி அறிவா இருக்கா....அவனுக்கென்ன விட்டுட்டுப் போயிட்டானே...தங்கமா பேரப்புள்ளைங்களப் பாக்கக் குடுப்பின இல்லையே...கிழவி, நான் இன்னும் இருக்கனே."அறிவுரையுடன் ஒப்பாரி வேற எப்பவும் போல இலவச இணைப்பு.

"மேய விட்டா பூனை புடிக்காதா? இந்த வீதில தான் நெறையப் பூனை இருக்கே?" முன்னெச்சரிக்கை முத்தம்மாவாக என் தங்கை.

"கண் பார்வையிலேயே மேய விடுங்க...புள்ளைங்களை பக்கத்திலிலேயே இருக்கச் சொல்லுங்க" இது பாட்டி.நாங்களும் கோழிக்குஞ்சுகளை மேய விட்டு...தண்ணி காட்டி...என்று அவற்றின் பின்னாலேயே திரிந்து கொண்டிருந்தோம்.கோழிகளுக்கு சாப்பாடு போடும் மும்முரத்தில் எங்கள் பிள்ளைகளுக்குக் கூட வயிற்றுக்குத் தரவில்லை. ஒருவழியாக கோழிகளுக்கான சாப்பாட்டுப் பிரச்சினை முடிந்தாகி விட்டது.

இப்போது தங்குமிடம். எங்கே அடைத்து வைப்பது...இதற்கும் பாட்டியைத்தான் நாடினோம்."அட்டாலில பஞ்சாரமிருக்குது. சாயந்திரமா யாராவது பசங்களை விட்டு எடுக்கலாம். இப்போதைக்கு அட்டைப் பெட்டில போட்டு வைங்க." என்றார்.மிக்சி வாங்கிய போது வாங்கிய அட்டைப் பெட்டியை எடுத்து அதற்குள் பேப்பர் விரித்து கோழிகளை விட்டு மூடினோம்.

"அம்மா...மூடி வெச்சா கோழிக்கு மூச்சு முட்டாதா?" என் மகன்.

"அடடா இது நமக்குத் தோணலையே...தெறந்து வெச்சா பூனை வந்து புடிக்குமே" இல்லாத மூளையைக் கசக்கி யோசித்தாள் என் தங்கை.

சரிடி. ஜன்னல் வெச்சாப் போச்சி. பெட்டியில் ஒரு ஓட்டை போட்டு ஈர்க்கங் குச்சிகளைச் செருகினாள் ஆர்க்கிடெக்டாக என் தங்கை.

இதற்குள் என் அம்மா வந்தார்கள். வந்தவுடன் அவர்களது கைப்பையைப் பிடுங்காக் குறையாய் வாங்கினோம். எப்போது வெளியே போனாலும் எங்களுக்கு எதாவது கொறிக்க வாங்கி வருவது அம்மாவின் வழக்கம். சூடாக உருளைக் கிழங்கு சிப்ஸ் இருந்தது கைப்பையில். அக்காவும் தங்கையும் பிச்சுப் பிடுங்காத குறையாய் சாப்பிட்டு முடித்தோம். இடையிடையே கோழிக்குஞ்சுகளின் பராமரிப்பையும் சாப்பாட்டையும் பற்றிக் கூறியவாறு.

மாலை மயங்கியாகி விட்டது. மதியம், குட்டித் தூக்கம் போட்டு எழுந்த எங்கள் பிள்ளைச் செல்வங்கள்...எழுந்தவுடன் கோழியை வெளியே எடுக்கச் சொல்லி அடம் பிடித்தார்கள். வெளியே எடுத்தவுடன் தெறித்து ஓடின கோழிகள்...சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில்.கோழிக் குஞ்சுகளை கையில் பிடித்து விளையாடுவதும், தலையில் வைத்து, அவை கால்களால் பிறாண்டும் போது எற்படும் குறு குரு உணர்வை ரசிப்பதுமாக பொழுது ஓடியது. கோழிகளுக்கு பேரும் வைத்தாயிற்று. என் கோழியின் பெயர் செரின் , என் தங்கை கோழியின் பெயர் டயானா, என் மகனின் கோழியின் பெயர் சச்சின், என் தங்கை மகளின் கோழி பிங்க்கி.பெயர் சூட்டி, ஆளாளுக்கு கத்திக்கத்தி அவரவர் கோழியின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்ட படி இருந்தோம்.

இதில் "உங்கோழி சோம்பேறி...போடி உங்கோழி தான் திண்ணிப் பண்டாரம்.."என்றெல்லாம் சண்டை வேறு. இரவும் வந்தாகி விட்டது. பிள்ளைகள் உறங்கி விட எனக்கும் தூக்கம் கண்ணைச் சுழற்ற அம்மாவின் பொறுப்பில் கோழிகளை விட்டு விட்டு அப்படியே உறங்கி விட்டேன்.அடுத்த நாள் கண்விழிக்கும் போதே வீட்டில் பேச்சுக் குரல். யாரோ வந்திருக்கிறார்கள் போல என்று நினைத்தபடியே அறையிலிருந்து வெளியே வந்தேன்.

அம்மா கொல்லையில் நின்றிருந்தார்கள். அம்மா காப்பி என்ற படியே அருகில் போனேன். காற்றில் பறந்த படி, தரையெல்லாம் பச்சையும் சிவப்புமாய் இறகுகள். இரத்த தீற்றல்களுடன் கோழிக்குஞ்சுகளின் கால்கள் மட்டும் கிடந்தன. பார்க்கும் போதே என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது."எல்லா அந்த நாசமாப் போற பூன பண்ணின வேலை. அட்டைப் பெட்டிய பெரட்டித்தள்ளி கோழிய எல்லாத்தையும் கொன்னு தின்னுட்டு, கால மட்டும் போட்டுட்டு போயிருச்சு...வரட்டும் சனியன்.. வெச்சுக்கறேன் அதுக்கு" இறக்கையை கூட்டி வாரிய படி அம்மா புலம்பிக் கொண்டிருந்தார்கள். என் தங்கை இன்னும் விழிக்கவில்லை போல.சச்சின்...சச்சின் என் மகன் தூக்கம் விலகாத கண்களுடன் சச்சினை பார்க்கும் ஆவலுடன் எழுந்து வந்து கொண்டிருந்தான்.
__________________

ஒரு வீடும் சில மனிதர்களும் (கதை)

"பால்காரரே... இன்னிலிருந்து ஒரு மாசத்துக்கு 2 லிட்டர் பால் சேர்த்து ஊத்துங்க..." சொன்ன கோகிலா அறுபதுகளின் ஆரம்பத்தில் இருந்தாள். அறுபது வயதில்... என்ன அப்படி ஒரு சந்தோசம் இருந்து விடப்போகிறது?... என்று நாம் யோசிக்கும் வண்ணம்... முகம் மகிழ்ச்சியில் பூரித்திருந்தது."என்ன கோகிலாம்மா... பையனும் பொண்ணும் வெளிநாட்டிலிருந்து வந்திட்டாங்க போல... எங்களுக்கொண்ணும் விசேமில்லையா... எப்பம்மா வந்தாங்க... பேரம் பேத்திய பாத்த சந்தோசத்தில பத்திருபது வயது கொறைஞ்சு போயிடுச்சு போல...." பாலை ஊற்றிய படி பேச ஆரம்பித்தார் பால்கார கோணார்.ஆமாம்பா... முந்தாநாளே வந்திட்டாங்க. மூணு வருசம் கழிச்சு அண்ணனும் தங்கச்சியும் ஒட்டுக்கா லீவு போட்டிட்டு வந்திருக்காங்க.. உனக்குத் தான் தெரியுமே... நம்ம சிவசு இருக்கிறது அமெரிக்காவில... கல்யாண முடிஞ்சவுடனேயே மருமகனோட ஆஸ்திரேலியா போயிட்டா மீரா... ரெண்டு பேரும் சொல்லி வெச்சி லீவு வாங்கி அம்மாவப் பாக்க வந்திருக்காங்க... அந்த ஊரிலெல்லாம் லீவு கிடைக்கறதே கஷ்டம்பா....சரிம்மா, நம்ம குழந்தகளைப் பத்தித் தான் எனக்கு நல்ல தெரியுமே... நான் பால் ஊத்தி வளந்த பசங்க... பேரக்குட்டிங்க சேதி என்ன அத சொல்லுவீங்களா.....பேரக் குழந்த என்று சொன்னவுடன் தனிச்சோபை வந்து உக்காத்து கொண்டது கோகிலாம்மா முகத்தில்.அய்யோ... அதை ஏன் கேக்கறீங்க... அப்படியே வாத்தியாரய்யாவ உரிச்சு வெச்சிருக்கு சிவசுவோட சின்னக்குட்டி அர்ஜூன். பெரிய பொண்ணு அனாமிகா ரொம்ப அமைதி. நம்ம மீராவோட குட்டி சோனு இருக்கானே ரெட்டை வாலு... பால்காரரே இதுகெல்லாம் தஸ்ஸு புஸ்ஸுன்னு அதுகளுக்குள்ள இங்கிலீஸ்ல தான் பேசிக்குது. ஆனா தமிழும் தக்கி முக்கி பேசுதுக... சும்மா சொல்லக் கூடாது... என் கூடவே சுத்திட்டு இருக்குதுக...சரி மருமகப் பொண்ணு அமெரிக்காக்காரப் பொண்ணாமே?... சிவசு மனசுக்குப் புடிச்சுப் போயி கண்ணாலம் கட்டிக்கிச்சாமே.. அப்படியா?ஆமாங்க கோணாரே... அமெரிக்காவில கூட வேலை செய்யறவங்களாம். பூர்வீகம் இந்தியா தானாம். அங்கியே பிறந்து வளந்த ஐயர் வீட்டுப் பொண்ணு ... பேரு என்ன தெரியுமா... அங்கையர்கண்ணி... அம்முனு சிவசு கூப்பிடுறான்... நல்ல பாந்தமான பொண்ணு... யாரை கல்யாணம் செஞ்சா என்ன? கடைசி வரை பசங்க நிம்மதியா இருந்தா சரி...அம்மா.... அம்மா... என்று மீராவின் குரல் கேட்டு...சரி பால்காரரே.... புள்ளங்க எந்திருச்சுட்டாங்க போல..... சாவகாசமா சாய்ந்திரம் வாங்க... சிவசு கூட உங்களப் பத்திக் கேட்டான். நான் காப்பி போடறேன். மீரா பல்விளக்காமயே காப்பி குடிக்கற புள்ள... உங்களுக்குத் தான் தெரியுமே...என்ன மீரா... காப்பியா... என்ன சீக்கிரம் எந்திருச்சிட்டே....அம்மா இங்க வாயேன்... சோனு கை, காலப்பாரேன்... அம்மை போட்ட மாதிரி தடிச்சிருக்கு...அடிப்பாவி மகளே... என்ன சொல்ற, புள்ளையக் கொண்டா இங்கே... ஆமாமா... இதென்ன இது நேத்துக் கூட நல்லாத்தானே இருந்தான்... உடம்பெல்லாம் முத்து முத்தா இருக்கே... போ சிவசுவ கூப்பிடு...அண்ணா... அண்ணா... தூங்கினது போதும் இங்க கொஞ்சம் வாயேன்... எந்திரி.... சரியான தூங்கு மூஞ்சி...சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்து வந்த சிவசுசுக்கு 35 வயது. மருத்துவருக்கே உரிய அந்த தோரணையும் கம்பீரமும் முகத்தில் இருந்தது.என்ன ஆச்சு மீரா... என்னம்மா ஆச்சு.... லீவுக்கு வந்தாக்கூட நிம்மதியா தூங்க விடமாட்டீங்களா?'புள்ளய பாரு சிவசு... கை காலெல்லாம் கொப்பளம்... என்னாச்சுனு தெரியல..' பதறியபடி கோகிலாம்மாள். இது தானா... சோனுக்கு கொசுக்கடி புதுசும்மா... அலர்ஜியாயிருக்கு... மீராவப் பத்தி தெரியாதா? எறும்பு கடிச்சாலே தேள் கொட்டின மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் செய்வா... நீயும் அவ பேச்ச கேட்டிக்கிட்டு.... பார்மஸில மருந்து வாங்கிப் போட்டா சரியாகும். நீதான் மஞ்சள அரைச்சுப் பூசுவியே எல்லாத்துக்கும்... இதுக்கும் பூசு... அது போதும்.சோனு.. யு வில் பீ ஆல்ரைட் மேன்.... டோன் வொர்ரி... ஏண்டி வந்தவுடன் ஆரம்பிச்சிட்டியா... உங்கூட 40 நாள் எப்படித்தான் இருக்கப் போறேனோ தெரியலயே...போடா உனக்கென்ன... புள்ளைக்கு ஏதாவது ஒண்ணுன்னா அந்த மனுசன் எம்மேல தான் பாய்வாரு... தெரிஞ்ச கதைதான?ஹாரிபிள்... ஐ கேன்ட் இமேஜின் திஸ்... ஐ வாண்ணா கோ பேக் டு மை கண்ட்ரி" பாய் கட் வெட்டப்பட்ட தலை முடியை சிலுப்பிக் கொண்டே... சிணுங்கலுடன் வந்தாள் 8 வயது அனாமிகா... சிவசுவின் சீமந்த புத்திரி."வாட் ஹேப்பண்ட்... வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்" சிவா கேட்பற்குள், மீரா குறுக்கிட்டாள்.என்னம்மா பினாமி என்ன ஆச்சு?...ஆண்ட்டி எனக்கு டாய்லெட் போகணும்...அதுக்கென்ன போ..."வ்வேர் இஸ் வெஸ்டெர்ன் குளோசெட்... எனக்கு இந்த டைப் பழக்கம் இல்ல"இப்படி ஒரு பிரச்சனையை யாரும் எதிர் பார்க்கவில்லை...இதை நான் யோசிக்கவே இல்லையே� பாவம் குழந்தைகள் அதுங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்லியே! பாட்டியப் பாக்க வந்து கஷ்டப்படுதுக.. கோகிலம்மாவின் முகம் வாடியது.அதனால தான் அப்பவே சொன்னேன். வீட்ட இடிச்சிட்டு மாத்திக் கட்டலாம்னு. நீதான் அப்பா கட்டின வீடு.. ஒரு செங்கல்லக் கூட தொந்தரவு செய்யக் கூடாதுன்னு அடம் புடிக்கிற. காலத்தோட மாறப் பழகிக்கணும்மா.. இது சிவசு.இத்தன வருசம் சொல்லியும் அம்மா கேக்கல. இப்ப சொன்னா மட்டும் கேக்கப் போறாங்களா. இப்ப அனாமிகாவோட பிரச்சினைக்கு வழியப் பாருன்னா.இன்னைக்கு ஒரு நாள் ... ட்ரை டு அட்ஜஸ்ட்... அப்புறம் பாக்கலாம்... இது சிவசு.வாட் டேட்... டாய்லெட் உள்ள விழுந்துட்டா... பயம்மா இருக்கு டேட்... அனாமிகா. அம்மா... இவளுக்கு இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணையும் ஒரு வாழப்பழமும் குடு... அப்புறம் எங்க போகச் சொன்னாலும் போவா பாறேன்..அண்ணி எங்க அண்ணா... தூங்கறாங்களா... புருசனும் பொண்டாட்டியும் சரியான ஜோடி தான்... சரியான தூங்கு மூஞ்சிக் குடும்பம்... எங்க நீ பெத்தெடுத்த அடுத்த முத்து அர்ஜூன். ஏன்னா இதென்ன பேரு அனாமிகான்னு.... அமானுஷ்யமா இருக்கு... வேற பேரே கிடைக்கலையா உனக்கு? , இது மீரா.அனாமிகான்னா பேரே இல்லாதவள்ன்னு அர்த்தம்... இதுக்கெல்லாம் ஒரு ரசனை வேணும்டி... உன் பையனுக்கு வெச்சிருக்க பாரு சுப்பிரமணின்னு... அனாமிகா பக்கத்தில் நிக்க முடியுமா...நான் ஒண்ணும் வெக்கல சுப்பிரமணின்னு... அது அவரோட அப்பா பேரு ... என் மாமியாரு செலக்சன்... என்றாள் மீரா.இருக்கட்டும்... உன்னைக் வெக்கச் சொன்னா மட்டும் என்ன சொல்லிருப்ப.... கமலஹாசன்னு வெச்சிருப்ப... கூடவே பத்மஷ்ரின்னு பட்டத்தோட வெச்சிருப்ப... அதும் இல்லன்ன பத்தாப்பு படிக்கும் போது உன் பின்னாலே சுத்தனானே... அவன் பேரு என்ன... மோகன் விஜி... அவன் பேரு வெச்சிருப்ப... அவன் மேல உனக்கொரு சாப்ட் கார்னர் இருந்த மாதிரி தெரிஞ்சிதே... இது சிவசு. அம்மா... பாரும்மா அண்ணாவ... என்கிட்ட மட்டும் எப்பப்பாரு வம்ப்பிழுப்பான்... அவன் பொண்டாட்டிகிட்ட பேசச் சொல்லு... அம்மு.. அம்முன்னு ஒரே வழிசல்...என் பிரச்சினைக்கு ஒரு வழி சொல்லுங்க டேட், சிணுங்கினாள் அனாமிகா. பொறு டியர், உள்ள போனா வெளிய வந்து தான தீரணும். தீர்வில்லாத பிரச்சனைகள் எதுவுமே கிடையாது, மரணத்தைத் தவிர. மரணம் பல பிரச்சனைகளுக்குத் தீர்வா அமையும். ஆனா அது கூட இன்னொரு பிரச்சனைக்கு ஆரம்பம் தான், மறுபடி பிறக்கனும். அம்மா வயித்தில இருந்து வெளியே வந்ததும் அழணும் புணரபி மரணம் புணரபி ஜனனம்- சிவசு. என்ன ஆண்ட்டி, ஷிவா பிலாசபி பேச ஆரம்பிச்சிட்டாரா? திடிருன்னு ஒரு நாள் உங்க புள்ளையாண்டான் கசாயம் கட்டிண்டு, கமண்டலம் எடுத்துட்டுப் போயிருவாரோன்னு பயமா இரூக்கு ஆண்ட்டி நீங்க கொஞ்சம் அட்வைஸ் பண்ணப் படாதோ? இப்பத்தான் எழுந்து வருகிற அம்மு என்கிற அங்கயர்கண்ணி. தூக்கக் கலக்கத்தில் அங்கங்கே வேண்டுமென்றே கலைத்து விடப்பட்ட மாடர்ன் ஓவியம் போல் இருந்தாள்.வாம்மா நீ காப்பி குடிப்பியா�ஓ பேஷா, குடிப்பனே. தாங்க்ஸ் ஆண்ட்டி.சிவசு அந்த மேஸ்திரியக் கூப்பிட்டு பாத்ரூம மாத்தி உங்க வசதிக்கு கட்டிக்கலாம். நான் போய் சொல்லிட்டு வரேன்.இரும்மா என்ன அவசரம். பசங்க எல்லாரும் எந்திரிக்கட்டும். என்ன டிபன் பண்ணிருக்க.இட்லி, புதினாச் சட்னி கேட்டா மீரா . உனக்கு அடைன்னா பிடிக்குமே! வெல்லமும், வெண்ணையும் கூட இருக்கு, உனக்கு என்னம்மா வேணும்?�மருமகளைப் பார்த்துக் கேட்டாள், கோகிலம்மாள்.எனக்கு எதுவா இருந்தாலும் ஒ.கே. ஆண்ட்டி. நான் பசிக்கு சாப்பிடறவ. ருசிக்கு இல்லை. உங்க புள்ளைக்குத்தான் நாக்கு நீளம் அதிகம். நான் எது செஞ்சாலும் அம்மா மாதிரி இல்லைம்பார். அவர கவனிங்க அது போறும். ஆனாலும் இப்படி பிள்ள வளத்தக் கூடாது ஆண்ட்டி. இப்ப நான்னா சிரமப் படறேன்.இதற்குள் பொடிப் பட்டாளங்கள் எல்லாம் எழுந்து விட்டன போலும். அமளி துமளி ஆரம்பித்து விட்டது. தினமும் நெட்டில் சாட் செய்தாலும் நேரில் பார்த்து பேசுவது போல ஆகுமா?யு னோ வாட் ஹேப்பண் இன் மை ஸ்கூல். பொடிசுகள் அததுகள் கதைகளை நெல்லிக் காய் மூட்டையாய், அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர். கொண்டு வந்த டாய்ஸ் , புக்ஸ் எல்லாம் இறைத்து வைத்துக் கொண்டு.ஒரு வழியாக சாப்பாட்டுக் கடை ஓய்ந்தது.அம்மா உனக்கும் வயசாயிடுச்சு. தனியாத் தான் இருப்பேன்னு அடம் பண்ணறே. ஒண்ணு எங்ககூட அமெரிக்கா வந்திடு. இல்ல மீரா கூட ஆஸ்திரேலியா போ. இப்படி தனியா உன்ன விட்டிட்டு போக எங்களுக்கு மனசே வரலை. ஏம்மா வர மாட்டேங்கிற. அப்படி என்ன தான் இருக்கு இந்த வீட்டில? பழைய காலத்துக் கட்டு வீடு. உதிந்து போன காரையும், கல்லுமா! இடிச்சிட்டாவது கட்டித்தர்றேம்மா. கொஞ்சம் வசதியாவாவது இரேன். நான் கொஞ்சமாவது சந்தோசப் படுவேன், என்றான் சிவசு. ஆமா பாட்டி ரெம்ப சூடா இருக்கு பாட்டி. சென்ரலைஸ்டு ஏஸி பண்ணித்தாங்க, டேட்..அனாமிகா முனகிக் கொண்டே வரவும். அவள் பின்னேயே அர்ஜுனும், சோனுவும் வந்தார்கள்.பாட்டி முறுக்கு சூப்பர். இன்னொன்னு வேணும். இது சோனு.அம்மா இங்க பாரு கதவு நெலவெல்லாம் உளுக்க ஆரம்பிச்சிட்டு உள்ள கரையான் வெச்சிருக்கு போல - மீராநெலவுன்னா என்ன மம்மி. யு மீன் மூன்? இது சோனு.கோகிலம்மா மெல்ல எழுந்து கதவின் அருகே போய் நிலைப்படியை தடவினாள்.இந்த நெலவு வைக்கும் போது மீரா மூணு வயசு குழந்த. என்ன செஞ்சா தெரியுமா. எங்களுக்குத் தெரியாம, பாத்ரூம் கழுவ வெச்சிருந்த ஆசிட் பாட்டில் எடுத்து தண்ணி குடிக்கிற மாதிரி குடிச்சிட்டா. புள்ள செத்துட்டான்னே நினைச்சோம். எப்படியோ பொழைச்சு வந்தா. எம் மாமியாரு மீராவோட பாட்டி, சிவன் கோயில் போயி 3 நாளு பழியாக் கிடந்தாங்க. எம் பேத்தி பிழைச்ச சேதி வந்தாத் தான் நான் வீட்டுக்குப் போவேன்னுட்டு. அவங்க வேண்டுதல் தான் மீரா பிழைச்சது..கோகிலாம்மாவின் கண்கள் பழைய கால நினைவுகளால் முன்னை விட ஒளிர ஆரம்பித்தது.ரியல்லி பாட்டி. வெரி ஃபன்னி? இது அனாமிகா.ஆமாண்டா கண்ணு. உங்க அப்பா மாத்திரம் சாதாரணப் பட்டவன் இல்ல. இந்த வீடு கட்ட பூஜை செஞ்சப்ப, தேங்கா உடைச்சோமா. தேங்காய நான் தான் உடைப்பேன்னு ஒரே அழுகை. தேங்கா சரியா உடையனுமே, அது தான சாஸ்திரம். அப்புறம் ஒரு வழியா சமாதானம் பண்ணி மேஸ்திரியும், அவனும் சேந்து தேங்கா உடைச்சாங்க. பூ விழுந்த தேங்கா, எவ்வளவு சந்தோசம் சிவசு அப்பா முகத்தில. எம் பிள்ள ராசிக்காரண்டா, அப்படின்னு தலைல தூக்கி வெச்சு ஆடினார். அப்பவும் விட்டானா! தேங்காத் தண்ணி தனக்குத்தான் வேணும்னு, மண்ணில தெளிக்கக் கூடாதுன்னு புரண்டு புரண்டு அழ ஆரம்பிச்சிட்டான். அவன் அழுதது எனக்கு இன்னும் கண்ணுக்குள்ளையே இருக்கு.யூ டூ டாட். வெரி இண்டெஸ்டிங். பாட்டி வேறென்ன ஸ்டோரி சொல்லுங்க பாட்டி. அதீத ஆர்வத்துடன் அனாமிகா.வெளிய தெரியுதே தென்னை மரம். அதில முதல்ல இருக்கே அது சிவசு வெச்சது. ரெண்டாவது மீரா வெச்சது. இரண்டு பேரும் போட்டி போட்டுட்டு தண்ணி ஊத்துவாங்க. சிவசு கீழே விழுந்த அவனோட பல் எல்லாத்தையும் அந்த மரத்துக்குக் கீழ தான் புதைச்சி வெச்சிருக்கான்.அய்யே சேம் சேம் பல் விழுந்தா அத டூத் பேரி கிட்டத் தான் குடுக்கணும். இது அர்ஜூன்.ஐ வாண்ணா டிக் தட் ப்ளேஸ். கமான் யார்மரத்தின் கீழே தோண்டி, பல்லை எடுத்து விடும் ஆர்வத்துடன் அனாமிகா வெளியே ஓடினாள்.எல்லாரும் அவளைத் தொடர்ந்து வெளியே வந்தனர்.அம்மா இது தான் உங்க தென்ன மரமா? லவ்லி. இது சோனு மீரா பெத்த வாண்டு.உங்க அம்மாவுக்கு தென்ன மரத்தை விட அதோ அந்த மாமரம் தான் ரொம்பப் பிடிக்கும் பாவாடைய வழிச்சுக் கட்டிட்டு ஏறுவா பாரு.. பசங்க தோத்தாங்க.. ஒரு நாள் அப்படித்தான் மாங்கா பறிக்க மரமேறி.. மரத்து மேல இருந்த பச்சோந்தியப் பாத்து பயந்து கீழ விழுந்தா. மோவாய்க்கட்டைல 4 தையல் போட்டோம். அதோட மரமேறுறதை நிறுத்திட்டா.மீரா அழகாய் சிரித்தாள். கீழே விழுந்த போது அணிந்திருந்த பாவாடை மேலேறி விட்டது. அருகில் விளையாடிக் கொண்டிருந்த அண்ணனின் தோழர்கள் வேறு� அப்போது அநியாயத்துக்கு வெட்கப்பட்டது. இப்போது நினைத்தால் கூட முகத்தில் சிவப்பைத் தந்தது.இந்த வேப்ப மரத்துக்குக் கீழ தான் சிவசு சைக்கிள் நிறுத்துவான். ஒரு நாளைப் போல, காக்கா வந்து அவன் சீட்டு மேலயே கழிஞ்சு வைக்கும். தினமும் காக்காவைத் திட்டிட்டுத்தான் சைக்கிள் எடுப்பான். காக்காக்கு சோறு வைக்காதேன்னு கலாட்டா பண்ணுவான்.இப்போது சிவசு முகம் விசகித்தது, கண்களில் லேசான கண்ணீர்.இந்த இடத்தில தான் மீராவும் எதித்த வீட்டு நிம்மியும் எப்பப் பாத்தாலும் கோடு வரைஞ்சு பாண்டி விளையாடுவாங்க. மீரா இடைக்கண்ணால பாத்துட்டே. ரைட்டா ராங்கான்னு அழுகுணி அட்டம் ஆடுவா.அம்மா அழுகுணியா. ஐய்யே ஷேம் ஆப் யூ மாம்..சோனு.இது என்ன இவ்வளவு பெரிய கண்டைனர். தண்ணியா பாட்டி இதுல? அர்ஜூன்.இது தண்ணித் தொட்டி கண்ணு. இதில தான் தண்ணி புடிச்சு நெறைச்சு வெப்போம். சிவசு குழந்தையா இருந்தப்ப இதில தான் டயர் கட்டி நீச்சல் அடிப்பான். புள்ள டாக்ரருக்குப் படிக்கும் போது விடிய விடிய படிப்பான். தூக்கம் வந்தா நடு ராத்திரி தலைல தண்ணி ஊத்திட்டு ஈரத் தலையோட படிப்பான் உள்ள டாக்டர் ஆகணும்னு ஒரு தீ இருக்கும்மா. இந்த பச்சத்தண்ணி தான் அந்த தீக்கு பெட்ரோல், அப்படீனு எனக்குப் புரியாத மாதிரி பேசுவான். இந்த புள்ள நல்லாயிருக்கணும்ன்னு எனக்குள்ளே ஓயாம ஒரு பிரார்த்தனை இருக்கும்.சிவசு அந்தக்கால நினைவுகளுக்கு போய் விட்டதை அவன் மௌனம் காட்டிக் குடுத்தது.ஆண்ட்டி இது துவைக்கிற கல் தான்� இதிலயா இன்னும் துவைக்கறீங்க. மெஷின் பாத்தனே ஆத்துல. சிவசுவின் மனைவி. அம்மு.ஆமாம்மா. மெசின்ல தான் போடுறேன் .குனிஞ்சு துவைக்க முடியரது இல்ல. இது மீராவோட கல்லு துக்கமோ சந்தோசமோ எது வந்தாலும் இந்தக் கல்லு மேல தான் உக்காந்துக்கும். ஒரு கையில டீ டம்ளரும். மறு கையில ஏதாவது புக்கும் வெச்சிட்டு மீரா உக்காந்திருக்கும். மீரான்னு சரியா தான் பேரு வெச்சிருக்காங்க உனக்கு. எப்பப் பாத்தாலும் தனியா புக்கும் கையுமா உக்காந்திட்டு சரி தம்புராக்கு பதிலாத் தான் டீ க்ளாசா? அப்படின்னு சிவசு கிண்டல் பண்ணுவான் அவள.ஆண்ட்டி இது என்ன பூவு பச்சைக் கலர்ல. நல்ல மணமா இருக்கே? பச்சைக் கலரில் இலை போலும் இருந்த பூவைப் பறித்த படி கேட்டாள் அம்மு.இது மனோரஞ்சிதம். சிவசுவுக்கு இந்த வாசம் ரொம்பப் பிடிக்கும். பக்கத்தில ஜாதி மல்லி, சாயந்திரம் விரிய ஆரம்பிக்கும், தொடுத்துத் தரேன்.மீராவுக்கு அப்ப நல்ல முடி. நெகு நெகுன்னு நாகப் பாம்பு மாதிரி சிக்கெடுத்து பின்னல் போடறதுக்குள்ள கை கடைஞ்சு போயிரும். ஜாதி மல்லி அவ பின்னலுக்குன்னே பூத்த மாதிரி இருக்கும்.தலை குளிக்கறதுன்னா அவ்வளவுதான் சீயக்காய் தேய்ச்சு குளிச்சு, காயவெச்சு... அப்படியே விரிச்சுப் போட்டுட்டு ஊஞ்சல்ல படுத்து தூங்கிடுவா. எந்திருக்கும் போது தல வலி வராம என்ன செய்யும். ஈரத் தலையோட படுக்காதேன்னா கேப்பாளா. சாம்பிராணி போட்டு முடிக்கும் வரை கூட பொறுமையா இருக்க மாட்டா. கண்ணு சொக்கி விழுவா. இப்பப்பாரு அத்தனை முடியயையும் கன்னா பின்னான்னு வெட்டி வெச்சிருக்கா முடி தானே பொண்ணுங்களுக்கு அழகுன்னு சொன்னா அவளுக்கு சுருக்குன்னு கோபம் வருது இப்ப பொண்ணுகள முடியாவும் முகமாவும் மட்டும் தான் பாக்கணுமான்னு கேக்கறா என்ன செய்ய அவ முடிய வெட்டி எறிஞ்ச மாதிரி என்னால இந்த ஞாபகங்களை வெட்டி எறிய முடிஞ்சா எப்பவோ நான் வீட்ட இடிக்க ஒத்துருப்பேன்.வீட்டுக்கு முன்னால் இருக்கே இந்த வராந்தா. இதில தான் உங்க தாத்தா கடைசியா படுத்திருந்தார் கண்ணுங்களா. ஸ்கூலுக்கு பொறப்புடும் போதே நெஞ்சில சுருக்குன்னு இருக்கு. இனிமே வாழைக்கா சமைக்காத அப்படின்னு சொன்னார். போகும் போது மீராவுக்கும், சிவசுவுக்கும் ஏதாவது வேணுமானு கேட்டார்.திரும்பி வரும்போது, மாலையும், கழுத்துமா தான் வந்தார். சிரிச்ச மாதிரியே உயிர் போயிருந்தது. மாரடைப்பு. கண்ண மூடி தூங்கிறாப்பில இருந்தார், சத்தம் போட்டா முழிச்சு திட்டுவார்ன்னு பயந்தேன். கத்தி அழக் கூட முடியல. இந்த வராண்டால தான் உக்காந்து பொழுதன்னைக்கும் எழுதுவார். பேப்பர் படிப்பார்...குயில் கத்துச்சின்னா பதிலுக்கு இவரும் கூட விசிலடிப்பார். அதுவும் இவருக்கு பதில் குடுக்கற மாதிரி திரும்பக் கூவும்.கோகிலம்மாவின் கண்களினின்றும் முத்துப் போல உருண்டு வந்த கண்ணீர்த் துளி சிவசு, மீரா, அம்முவின் உள்ளம் நனைத்து, உதிர்ந்து போனது.இப்ப என் பிள்ளைங்க நியாபகங்களோட தினமும் வாழ்ந்திட்டு இருக்கேன். இனி நீங்க போன பின்னால, என் பேரக் குழந்தைகள் விட்டுட்டுப் போன செருப்பும் அழுக்குத்துணியும் வீடு பூரா கேட்ட பேச்சுச் சத்தமும். சோனு வோட சிரிப்பும் உடைச்சுப் போட்ட சாமான்களும் பிள்ளைகளுக்கு நான் சொன்ன கதைகளும் பிள்ளைகள் என்னைக் கேட்ட கேள்விகளும் என்னை அடுத்த முறை நீங்க வர்ற வரை உயிரோட வைக்கும். என்னைப் பத்திக் கவலைப் பட ஒண்னுமில்லை.. ஞாபகங்களை எங்கிட்ட இருந்து யாரும் பிரிச்சுக் கூட்டிட்டுப் போக முடியாது.வெறும் காற்று வீசும் சத்தமும் குயில் கூவும் சத்தமும் மட்டும் அங்கே கேட்டது கொஞ்ச நேரம். கனத்த அமைதி. மௌனம் மனித மனங்களை புதுப்பித்துக் கொண்டிருந்தது.அனாமிகா வாய் திறந்தாள்.பாட்டி. அடுத்த முறை நான் வரும் போது பார்பி கேர்ள் மாதிரி நிறைய முடி வளத்துட்டு வர்றேன். எனக்குத் தலைபின்னி அந்த வொயிட் கலர் பூ வெச்சு விடுவீங்ளா..?

அறை எண் 406 (கதை)

இன்றைய பொழுது இனிதாக விடியவில்லை எனக்கு. யார் முகத்தில் முழித்தேனோ தெரியவில்லை, மருத்துவமனைக்குச் செல்லும் வழியெல்லாம் ஒரே ட்ராஃபிக்.சவூதி மன்னர் எங்கள் நகருக்கு விஜயம் செய்கிறார் பராக்.. பராக்.. எனவே காணும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்த காவல் வாகனங்களைத் தாண்டி, சுற்றிச் சுற்றி ஊரையே வலம் வந்து மருத்துவமனைக்குள் நுழையும் போது 1 மணி நேரம் லேட்.நுழைந்தவுடன் கடுவன் பூனை போல முகத்தை வைத்துக் கொண்டு நான் எப்படா வருவேன் என்று காத்துக் கொண்டிருந்தாள் என் சீஃப் டயடீசியன். அவள் பிலிப்பின் நாட்டைச் சேர்ந்த பேரிளம் பெண், தேவதை கொஞ்சம், ராட்சஸி மிச்சம் கலந்து செய்த கலவை. வயதோ 45, கேட்டால் போன வாரம் தான் 25 ஆம் வயதை வழி அனுப்ப கேக் வெட்டியதாகச் சொல்வாள்.எப்போதும் மேக்கப் கலையாத முகம், எப்போதாவது சிரிக்கும் உதடுகள். கையில் ஒரு ஃபைலை வைத்துக் கொண்டு எப்போதும் ஓடிக் கொண்டிருப்பாள். பாத்ரூம் போனாலும் கையில் ஃபைல் இருக்கும். அவளுக்கு நான் வைத்திருக்கும் பட்டப் பேர் "ஃபைல் பட்டம்மா�"லேட்டாக வந்த என்னைப் பார்த்து அவள் சிரித்தது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நானும் அவளைப் பார்த்து "கமுஸ்தஸ்கா�?" என்றேன். பிலிப்பைனி மொழியில், எப்படியிருக்கிறாய்? என்று பொருள். "சரி,சரி 406 ஆம் அறைக்கு ஓடு, சூசைட் அட்டெம்ப்ட் கேஸ், டயட் கவுன்சலிங் தேவையாம்" என்றாள். அவள் ஏன் என்னைப் பார்த்து சிரித்தாள் என்று இப்போது தான் எனக்குப் புரிந்தது. 406 என்னுடைய வார்டு அல்ல. அது அவள் பார்க்க வேண்டிய பேஷன்ட். நான் யோசிப்பதைப் புரிந்து கொண்டாள் போலும். அது என் வார்டு தான். ஆனால் எனக்கு கொஞ்சம் அவசரவேலை இருக்கிறது, அதனால் நீ அட்டென்ட் செய்... என்றாள். எனக்குத் தெரியாதா? அவளுக்கு என்ன அவசர வேலை என்று? ரெஸ்ட் ரூம் போய் போட்ட மேக்கப்பைக் கலைத்து மீண்டும் போடுவது தான்.இருந்தாலும் கால தாமதமாக வந்ததற்கு தண்டனையை அனுபவித்துத்தான் தீர வேண்டும். சீருடையை திருத்திக் கொண்டு கிளம்பினேன். 406 ஆம் எண் அறை நான்காவது மாடியில் இருக்கிறது. எலிவேட்டரைத் தவிர்த்து மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தேன். யாருமே உபயோகிக்காத மாடிப்படிகளில் தனியே ஏறிச் செல்லுவது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று.குறிப்பிட்ட அறைக்குச் செல்லும் முன் நோயாளியைப் பற்றிய விபரங்களை கேட்டறிய நர்சை அணுகினேன். நர்ஸ் கேரள தேசத்து பெண். அவளிடம், என்ன கேஸ் இது சேச்சி? என்றேன். அதற்கு அவள் "அது பிசாசானு, அவிட போகன்டா மோளே... அப் பெண்குட்டி புத்தி பேதலிசசு போயி. இது நின்ட வார்டு இல்லல்லோ, எந்தினா இவிட வந்தது?...�, என்றாள் பட படப்புடன். அவளிடம் மலையாளத்தில் சம்சாரித்ததிலிருந்து தெரிந்து கொண்டவை.....பேசண்டின் பெயர் முனீரா. சவுதிப் பெண், கை நரம்புகளைத் துண்டித்து தற்கொலை முயற்சி. அதிக இரத்த சேதம் இல்லாததால் பிழைத்துக் கொண்டாள்... உடல் எடையைக் குறைக்க உணவு ஆலோசனை தேவைப்படுகிறது.காலையிலேயே என் தலைவி ஃபைல் பட்டம்மா, முனீராவிடம் கவுன்சிலிங்காகப் போய் இருக்கிறாள். போன சமயத்தில் முனிரா �ஒரு கையில் கோக்கும், மறு கையில் கேக்குமாக� வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்திருக்கிறாள்... சும்மா விடுவாளா ஃபைல் பட்டம்மா... உனக்கிருக்கிற உடம்புக்கு இதெல்லாம் சாப்பிடக் கூடாது என்று பிடுங்கி வைத்து விட்டு அறிவுரையை அள்ளித் தெளித்திருக்கிறாள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பின் பொங்கி எழுந்த முனிரா, பெரிய கோக் டின்னை இவள் மேல் விசிறி அடித்திருக்கிறாள். நல்லவேளை அது அவள் மேல் படவில்லை... பட்டிருந்தால் ஃபைல் பட்டம்மா ... தலையில் பெரிய கட்டம்மா� என்று பாடியிருக்கவேண்டியது தான். நடந்ததையெல்லாம் மறைத்து, என்னையும் முனீராவிடம் அனுப்பியிருக்கிறாள். இப்ப சொல்லுங்க, அவளை ராட்சஸி என்று நான் சொல்லுவேனா, மாட்டேனா?இதையெல்லாம் கேட்ட எனக்கு கிலி பிடித்தது."சேச்சி எண்ட கூட வரூ� என்று நர்ஸையும் அழைத்துக் கொண்டு அறை எண் 406 ஐ அடைந்தேன். கதவைத் திறந்து வழக்கம் போல் முகமன் கூறினேன்.அங்கே முனீராவைப் பார்த்த நான் அசந்து போனேன். 20 வயதுப் பெண். குழந்தை தனம் மாறாத அழகான வட்ட முகம், களையான பச்சைநிற கண்கள் என்று ஒரு மெகா சைஸ் பூங் கொத்தாக, ஒரு தேவதைபோல அமர்ந்திருந்தாள் முனீரா.. என்ன கொஞ்சம் குண்டு தேவதை... உடல் எடைதான் 100 கிலோ இருக்கக் கூடும். இடது கையில் கட்டு... வலது கையில் ஒரு பெரிய லேய்ஸ் சிப்ஸுடன், அறையிலுள்ள டி.வியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளுடன் அவள் பெற்றோரும் இருந்தனர்.அவர்களிடம் என்ன பிரச்சனை என்றேன் அரபியில். எதிரில் அசிரத்தையாக நின்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு சவுதி உடைந்த ஆங்கிலத்தில் பேசத் துவங்கினான்.அதாகப்பட்டது, அந்த சவுதியின் பெயர் சாலேஹ். அவன் மனைவிதான் முனீரா. திருமணத்திற்குப் முன் ஒல்லியாய் அழகாய் இருந்த முனீரா திருமணத்திற்குப் பின் குண்டாகி விட்டாளாம். அதிக எடை காரணமாக முனீராவை சாலேஹ்க்கு பிடிக்காமல் போய் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உத்தேசித்துள்ளானாம். இதை அறிந்த முனீரா கை நரம்பை வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள்.இதை விசாரித்து முடிப்பதற்குள் சிப்ஸை முழுதுமாக முடித்திருந்தாள் முனீரா. இது என்னுடைய நேரம்... நான் அதிகம் பேச வேண்டிய நேரம்...நர்ஸ் என்னை முனீராவிடம் அறிமுகப் படுத்தினாள்.. நான் அவள் உணவைப் பற்றித்தான் பேசப்போகிறேன் என்று தெரிந்து கொண்ட முனீரா, பாம்பைப் பார்த்த கீரியைப் போல என்னுடன் சண்டைக்கு வர ஆயத்தமானாள். நான் முனீராவிடம் முதலில் பேசிய வார்த்தைகள் "நீ ரொம்ப அழகாயிருக்கிறாயே... உனக்கு லேய்ஸ் சிப்ஸில் எந்த ஃபிளேவர் ரொம்ப பிடிக்கும்?..�, என்றேன்.முனீரா மொத்தமாக நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தாள்.முதல் நாள் சந்திப்பிற்குப் பின் அவள் முகத்தில் லேசான சிரிப்பை நான் பார்தேன். அடுத்தடுத்த நாட்களில் பிலிப்பைனியை தடுத்து விட்டு நானே முனீராவைப் பார்க்க போனேன். எனக்கு ஏனோ முனீராவை பிடித்திருந்தது சிறிது நேரம் கிடைத்தாலும் அறை எண் 406 க்கு பச்சைக் கண் தேவதையைப் பார்க்கப் போய்விடுவேன்.முனீரா நல்ல புத்திசாலிப் பெண். மென்மையான மலரைப் போன்றவள். முனீரா, தான் 2 மாதம் கர்ப்பமாய் இருப்பதாகவும், அதை இன்னும் தன் குடும்பத்தில் கூட யாருக்கும் தெரியப்படுத்தவில்லை என்றும், என்னிடம் தான் முதலில் சொல்வதாகவும் கூறினாள். நான் அதிர்ச்சி அடைந்தேன். வயிற்றுப் பிள்ளையுடனா தற்கொலைக்கு முயன்றாய் என்று கடிந்து கொண்டேன்.. தனக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும் என்றும் அதற்கு "ஃபாத்திமா" என்று பெயர் வைக்கப் போவதாகவும், அவளை நன்றாக படிக்கவைத்து ஒரு மருத்துவர் ஆக்கப் போவதாகவும் கூறினாள். பிரசவம் பார்க்க இதே மருத்துவமனைக்குத் தான் வருவேன், நீயும் என்னுடன் கண்டிப்பாய் இருக்க வேண்டும் என்றாள். நானும் சரி என்று உறுதி அளித்தேன். எனக்கும் குட்டி பச்சைக்கண் தேவதையைப் பார்க்க ஆவலாய் இருந்தது. `அவளைப் பார்க்கப் போகும்போதெல்லாம் தொழில் தர்மத்தை மீறி, அவளுக்குப் பிடித்த சாக்லேட்டோ, சிப்ஸோ வாங்கிச் செல்வேன்... பிள்ளைத்தாய்ச்சி பெண் ஆகையால் தற்போது எடையைக் குறைக்க வேண்டாம் என்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் போதும், எடைக் குறைப்பை டெலிவரி ஆன பின் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தேன்.இத்தனைக்கும் எனக்கு அரபிமொழி அவ்வளவாகத் தெரியாது.அவளுக்கு ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. எங்கள் சம்பாசனைகள் பெரும்பாலும் என் பட்லர் அரபியிலும், ஊமைச் சைகைகளிலும் இருக்கும். இருப்பினும் மொழியைத் தாண்டி எங்களை ஏதோ ஒன்று பிணைத்திருந்ததை உணர்ந்தேன். நான்காம் நாள் மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகையில் நான் அவளுடன் இருந்தேன். என்னை அணைத்து முத்தமிட்டு, தான் அணிந்திருந்த ஒரு பச்சைக் கல் மோதிரத்தை கழற்றி, என் விரலில் அணிவித்தாள். ஓய்வு எடுக்க அம்மா வீட்டுக்குப் போவதாகவும், விரைவில் என்னைத் தொடர்பு கொள்வதாகவும் கூறினாள்..அதன் பின் சில நாட்கள் கழித்து, அவள் கொடுத்த தொலைபேசி எண்ணில் அழைத்தால் யாருமே எடுக்கவில்லை. நானும் வேலைப்பளுவில் முனீராவை மறந்து போனேன். 406 ஆம் அறையைத் தாண்டும் போது மட்டும் அனிச்சையாக என் கண்கள், என் கையிலிருந்த மோதிரத்தைப் பார்க்கும்.இப்படியாக நான்கு மாதங்கள் கழிந்திருக்கும், அது ஒரு சனிக்கிழமை. அவுட் பேசண்டுகளுக்கான நேரம். சவுதி அரேபியா இயல்புக்கு மாறாக மேகமூட்டத்துடன், மழைக்கான அறிகுறிகளுடன் தென் பட்டது. நானும் இரண்டு நோயாளிகளை சந்தித்து விட்டு, உடனிருந்த நர்ஸுடன் சூடான தேநீர் பருகிவிட்டு அடுத்த நோயாளிக்காகக் காத்திருந்தேன்.கதவு தட்டப் பட்டு, தம்பதி சமேதராக வந்தவர்களை ஏறிட்டேன். அந்தப் பெண் உடைந்து விடுவாள் போல ஒல்லியாக இருந்தாள். உடன் வந்த சவுதி பேசத்துவங்கினான். "டாக்டோரா, இவள் என் மனைவி, மிகவும் ஒல்லியாக இருக்கிறாள். அழுந்த முத்தமிட்டால் மூச்சு முட்டி இறந்து விடுவாள் போல...குடும்பம் நடத்தவே பயமாக இருக்கிறது. எப்படியாவது இவளைத் தேற்றுங்கள்�", என்றான்.எங்கேயோ பார்த்தமுகம் அவனுடையது, எல்லாம் பேசி முடித்து கணிணியில் பதிவதற்காக, என்ன பெயர்?என்று கேட்டேன். �சாலேஹ்� என்றான். அட இது முனீராவின் கணவன்! இப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது. நான் குழம்பிப் போனவளாய் முனீரா எப்படி இருக்கிறாள்? என்று கேட்டேன்.முனீரா மருத்துவமனியிலிருந்து போன, நான்காவது வாரம், சாலேஹ் வேறொரு பெண்ணைத் ரகசியத் திருமணம் செய்திருக்கிறான். அதைத் தாங்க முடியாத முனீரா தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு (இந்த முறை பிழைக்காமல்) செத்துப் போய்விட்டாளாம், என்று சொல்லி முடித்து என் பதிலுக்கு காத்திராமல் சாலேஹ் வெளியேறினான் புது மனைவியுடன்."என்ன இது? சற்று முன் வரை நன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்த இந்தப் பெண்ணிற்கு என்ன ஆயிற்று? திடீரென மோதிரத்தை கழற்றி வைத்துக் கொண்டு இப்படி தேம்பித் தேம்பி அழுகிறாள்??..", என்று என்னை வினோதமாகப் பார்த்தாள் உடனிருந்த நர்ஸ்.