தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

என் கவிதையே

போகிறாய்..அவ்வப்போது...
சொல்லிக் கொள்ளாமலே...
நானும் தேட முயற்சிப்பதே இல்லை...
பிரபஞ்சப் பெருவெளியில்உன்னைத் தொலைந்து போகவிடுகிறேன்...
மிகச் சரியாய் வந்து விடுவாய்...
உன் மடியில் முகம் புதைத்து
நான் அழக் காத்திருக்கும் தருணங்களில்...
நான் ஆசுவாசம் அடைந்ததும்என் அமர்களம் தாங்காமல்மீண்டும்தொலைவாய்..
என் கவலைக்காலங்களை
எப்படி சரியாக கண்டுகொள்கிறாய்
கண்ணீர் கரிக்கும் கவிதையே!!!

ஞானம்

ஞானம் கிடைத்தபோது
நான் நான்கே மாத குழந்தைதானாம்...
பசித்தால் கூடபதறி அழ மாட்டேனாம்...
பால் ஆற்றும் சத்தத்திற்கேற்ப
கால் உதைத்து களித்திருப்பேனாம்...
தாத்தா சைக்கிள் கிறீச்சிடுவதைசரியாய் கண்டுபிடிப்பேனாம்...
தொட்டி நிழலாடுவதை பார்த்தால்கை கொட்டிச் சிரிப்பேனாம்...நான்...ஞானக்குழந்தையாம்...
சொல்லும் போதே...,
பொக்கைவாய் முழுக்கபெருமை பொதிந்து போயிருக்கும்...
பாட்டி காலத்திய "ஞானம்"எத்துணை எளிமையானது பாருங்களேன்!

கனாக்காலம்

எக்காலம் இது...?
மேகமும் சூரியனும்ஓளிந்து விளையாடும்
பகல்பத்து மணிப்பொழுது!
வானொலியில் ஓயாது
வாயடிக்கும் பெண்குரல்...
கழனிப்பானையில் தலைவிட்டுக் கவிழ்க்கும்
பக்கத்துவீட்டுப் பசு...
சமையலுக்காக ஆயப்பட்ட
கீரைமிச்சங்கள் சிதறிய முற்றம்...
அவசரம் ஒன்றும் இல்லை
ஆற அமர பேச நிறைய இருக்கிறதுஎதிர்வீட்டுப் பாட்டியுடன்...
இது என்ன காலம்?
அள்ளிப்போட்டுக் கொண்டு
அலுவலகம் செல்லும் பெண்களின் கனாக்காலம்!!!

பிரகாரப் பதுமைகள்

கன்னிகளாகவே பிறந்து
முதுமை காணாது
முதுகு கூனாது
தோல் தளராது
கட்டு குலையாது
நரை திரை இல்லாது
சிரிப்பும் மாறாது
வாழ்வாங்கு வாழ்கின்றன..
பிரகாரப் பதுமைகள்...

நீ தூங்கிவிடாதே

கிழிந்திருந்த பாயின்கோரையை கைகள் திருக,
உன் இடுப்பில் என் கொலுசுக்கால்கள்...
குசுகுசுவென எனக்குமட்டும்கேட்கும் மொழி பேசும் உன் உதடுகள்...
ஆச்சர்யம் விரித்துப் போகும்விழிகள் இருட்டிலும் பளபளக்கும்...
எந்த வினாடி தூக்கக்கிணற்றுக்குள்தவறி விழுந்தேன்
என்றஞாபகம் இருக்காது...
விடியலில்...கதையின் மீதிகேட்டால் செல்லமாய் அதட்டுவாய்...
எனக்கான உலகத்தை சிருஷ்டித்துஒரு கதை சொல்லேன்...
உன் மூக்குப்பொடி வாசத்துடன்
முந்தானை பிடித்து நிம்மதியாய்...தூங்க விரும்புகிறேன்...
நான் வருவதற்குள்நீ தூங்கி விடாதே....என் செல்லப்பாட்டியே...

தெரிந்திருக்கப்போவதில்லை

வாய் பிளந்து இரைக்காகக்காத்திருக்கும்
குருவிக்குஞ்சுகளுக்கோ,
தளை அறுத்து தாய்மடிமுட்டும்
செவலைக்கன்றுக்கோ,
மோவாயில் பால்தடத்தோடுகிறங்கிக்கிடக்கும்
மூன்றுமாதக்குழந்தைக்கோ,
தெரிந்திருக்கப்போவதில்லை...,
இன்னும் ஐந்துநிமிடத்தில்
அங்கே கண்ணிவெடியொன்று வெடிக்குமென்று....

கதவைத்திற

காத்திருக்கக் கூடும் இன்னும்,
என் விரல் தொட்டுப்பறந்தவண்ணத்துப்பூச்சியும்,
என் விழிதொட்டுக்கலைந்தவானத்து மேகமும்,
என் முகம் தழுவிப்போனமுன் பனிக்காற்றும்...
உன் வாசலில் இன்னும்
என் காதலைச் சொல்ல
கால் வலிக்க காத்திருக்கக்கூடும்
கதவைத் திற தயவு செய்து...

பாட்டி உனக்காக

உனக்காக இடிக்கும் வெற்றிலையில்
எனக்காக எப்போதும் ஒரு பங்கு...
ஒவ்வொருமுறையும் மழைநனைந்த
என்னைத் துவட்டும் சேலைமுந்தானை...
குளிக்குமுன்னே காத்திருக்கும்
மைகோதியும்மணக்கும் சாம்பிராணி புகையும்...
மணிப்பொழுதாயினும அசையமாட்டாய்..
மடிதூங்கும் நான் அசங்கக்கூடாதாம்...
பாட்டி,உன் மேல் எனக்குக் கோபம்...!!!
பொக்கைவாயும்,புரையோடியகண்ணும்
போட்டி போட்டு அன்பைப்பேச...
உன் அன்பைப்பற்றி எழுதும் எல்லாமும்
தோற்றே போய்விடுகிறது போ....

இன்னும்?

உன் குழந்தைக்கு நீசோறூட்டுகிறாய்...
என் மகனுக்கு பந்து பொறுக்குகிறேன் நான்...
உன் வீட்டிலும்
என் தெருவிலும்
ஒரே நேரத்தில் ஒலிக்கிறது...
நீயும் நானும் சிலவருடம்முன்சேர்ந்து ரசித்த பாடலை...
கையெடுத்த கவளமும்...எறிய எடுத்த பந்தும்...
தாமதிக்கும் கணத்தின் கனம்..
இன்னும் நம் காதல்,
எங்கோ இந்த பிரபஞ்சத்தில்இருப்பதை
சொல்லாமல் சொல்கிறது.

மெல்லென ஒரு தூறல்

தடவையாவது பெய்தே தீரவேண்டும்
ஒரு கடுங்கோடையானாலும் சிறுதூறல்..,
நான் வைத்த செடியில்இன்னும் பூக்காத பூவின் கோரிக்கை..
வானவில்லே பார்த்தறியாதகுட்டிமகனின் ஏக்கம்...
செய்து வைத்த காகித கப்பலைஎன்ன செய்வதென்ற குழப்பம்...
மழைத்துளியை ஸ்பரிசித்திராதநேற்றுஜனித்த பூனைக்குட்டி...
இவர்களின் பிரதிநிதியாய்கேட்கிறேன்..
எனக்காக,
மெல்லென தூறல்போடுவானமே நீ ஒரு தடவை!!!