தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

நாடோடிகளின் சாவிக்கொத்து

அவ்வளவு தானா
ஒருசாவிக்கொத்தின் சரித்திரம்?
சாவிகளை எளிதில் தொலைப்பதே என் வழக்கம்...
முதல் நாள் பணியில்ஒற்றைச் சாவி ஒன்று கைக்கு வந்தது..
அலுவலக அலமாரிச்சாவி...
கைப்பையின் இண்டுகளில் அதுஒளிந்து விளையாடியதால்
பொம்மை சாவிக்கொத்து ஒன்றைப்
புதியாய் வாங்கிஇணைத்து வைத்தேன் சாவியை...
சாவிக்கொத்து பொம்மைமூக்கை தொட்டால் அழும்
காதைத்தொட்டால் சிரிக்கும்...
அந்த வாரம் வீட்டின்சாவியும், கொத்தில்...
அதற்கடுத்த மாதங்களில்
இன்னும் சில சாவிகளை இணைத்துக் கொண்டு
கொழுத்துப் பருத்ததுசாவிக்கொத்து...
இரண்டு வருடமாய் இதுவரை தொலையவில்லை...
ஒரு நாளும் எடுத்து வரநானும் மறந்ததில்லை...
போரடிக்கும் நேரங்களில்
பொம்மையுடன் பேசிக்கொண்டிருப்பேன்...
இன்று கடைசிநாள் வேலை...
இனி தேவைப்படாது சாவிக்கொத்து....
அரை டஜன் சாவிகள்...
கனமாய் கனக்கிறது கையில்...
என்ன செய்வது சாவிகளை?
நாடு விட்டு நாடு கொண்டு சென்றால்,

பூட்டைப் பிரிந்த சாவிகள் புலம்பாதா?
சாவிக்கொத்து பொம்மை
மூக்கைத் தொட்டவுடன் சத்தமாய் அழுகிறது
சாவிகளின் பிரிதலை எண்ணி...
எது என் மனதைத் தொட்டது...
மனதுக்குள் ஏன் அழுகிறேன் நான்?கனக்கிறது...
சாவிக்கொத்தும்...என் மனமும்.

அன்றும்...இன்றும்!

கைகளில் கிட்டிய போதே
உதிர்ந்தது இதழிதழாய்...
எனக்கென நீ பறித்து
நான் பாடம் செய்த செம்பருத்தி...
அன்று பறிக்கும் போது...,
கல் தடுக்கி
உன் நகக்கண் பெயர்ந்தது...
இன்றுஇதழ் உதிரும் நேரம்
நீ தடுக்கி...நான் பெயர்கிறேன்

எஞ்சிய சாட்சிகள்

தந்தையும் தாயும்
கொஞ்சிக் குலாவிய,
காதல் இதமாய்வழிந்து,
இன்னும்மிச்சமிருக்கிறது
எஞ்சியசாட்சிகளாய்
நானும் காற்றும்
வளைய வருகிறோம்
வீடு முழுக்க...

பட்டாம்பூச்சி

என்னவள் உன்னால்மட்டுமே முடியும்...
உன் சிரிப்பினைபட்டாம்பூச்சிகளாக்கி
நகரெங்கும் பறக்கவிட,
உனக்கு பிடித்தவரின்
தோளில் மட்டும் அமரும் அனுமதியுடன்...
எனக்கான பட்டாம்பூச்சி
என்மேல் அமரும் போது
நானும் இறக்கை முளைத்து
பறக்கத் தொடங்குவேனாயிருக்கும்...!!
என் வாழ்க்கையும்
வண்ணம் பூசிக்கொள்ளுமாயிருக்கும்!!!
நினைவு இனிக்கும் அதே நேரம்
காத்திருத்தல் கசந்து வழிகிறது...
சீக்கிரம் வரச்சொல்லேன்
பட்டாம் பூச்சியை....

ஸ்பரிசம்

ஸ்பரிசம்...
நெருப்பின் ஸ்பரிசம்..
விரல் நுனி தொட்டமுதல் ஜ்வாலை நீ...
மெல்ல படர்ந்து,
குளிரக் குளிர எரித்துச் சென்றாய்...
முழுதாய் எரிந்ததும்
எஞ்சியவை கரைக்க
நீராய் மாறி சுழித்து ஓடினாய்...
உன்னுள் கரைந்து,
மேகமாய் மாறி
உலகமெல்லாம் காதல் பொழிந்து...
பயிராய் முளைத்தெழுவோம்...
உன்னாலும், என்னாலும்
காதலாலும் ஆனது உலகு!!!

பரிசுப்பொதி

மனம்...
நான் விட்டுச்செல்வதாக நினைப்பவைகளை
அழகான பரிசுப்பொதியிலிட்டு
வண்ணரிப்பன் கட்டி
ஒருமூலையில் ஒதுக்கி வைத்துள்ளதுபாதுகாப்பாய்...
என்றேனும் நான் பிரித்துப் பார்க்கக்கூடும்..
என்ற நம்பிக்கையில்,
பிரிக்கையில் எப்படி உணர்வேன்?
பரிசு பெற்ற மகிழ்ச்சி இருக்குமா?
இழந்து போனதன் துக்கம் மிஞ்சுமா?
எதுவாயினும் ஏற்றுக்கொள் என்மனமே...!!!

மனதும் குப்பைக்கூடையும்

தினசரி கிழிக்கும்,
ஒவ்வொரு நாளும்
கழிந்து போன கிழமை நினைவுகள்..,
கசக்கிச் சுருட்டிய
காகிதக் குப்பையாய்..
கிழித்துப் போட்ட தினசரிகளாலும்
ஒதுக்கி வைத்த நினைவுகளாலும்
நிறைந்து வழிகிறது
குப்பைக்கூடையும்,மனதும்...!

ஆதலினால் காதல் செய்வீர் குயில்களே

மலர் தாங்கிமோனத்தில் இருக்கும்
வேப்பமர எதிரெதிர்க்கிளைகளில் குயில்கள் இரண்டு
...கூகூ... இது ஆண்குயில்
குக்கூ...பெண்குயிலோ
சடசடத்து அருகில் அமர்ந்து
இறகு கோதி காதல் செய்யதடை ஏதுமில்லை...
ஆனாலும் கிளைத்தூரம் விட்டு
மொழி பேசி கனிந்து வழியும் காதல்...
கூடிக் கலக்கும் தருணத்தை விட
கூவி பேசும் தருணம்...சொட்டி வழியும் காதல்...
மரமெங்கும் நிறைந்து படர்ந்து....
என்னிலும் அலையலையாய்
எதையோ எழுப்பும்...குயில்களே...
ஆதலினால் காதல் செய்வீர்...!!!

உலகக்கருத்துகளுக்கு உதைபந்தாய் நான்

காப்பாற்று...
தொலைந்து போகிறது...
சட்டென்று படியிறங்கிமழை நனைவதோ,
சோறு வைக்க காக்காவை கத்தி அழைப்பதோ...,
நீர் சொட்டும் கூந்தலுடன்
மொட்டைமாடி புத்தகங்களோ...,
அலட்சியமான சைக்கிள் சவாரியோ...,
இவற்றிற்கான சாத்தியங்கள் மெல்லக்குறைய...
உலகின் கருத்துகளுக்கு
உதை பந்தாய் நான்...
கவிதையே காப்பாற்று...
என் குழந்தைமை
மெல்ல கூக்குரலிட்டுஅழுது மடிவது...
உன் காதில் கேட்கிறதா?

எல்லாமும் இன்னும் இருக்கின்றன

நம் பள்ளிக்குச் வருகிறேன்
இன்று இருக்காது அவைகள் எல்லாம்
என்ற எண்ணத்துடனேயே

நாம் நின்று பேசியபுங்கை மரமும்...
இருவர் சைக்கிளும் உறவாடிய நிறுத்துமிடமும்,
பிள்ளையார் கோயில் கருங்கல் மேஜையும்,
என் பெயர் கீறியஉன் வரிசை பெஞ்சும்...
உன் மணியான எழுத்தில்தேதி,கிழமை தாங்கியகரும்பலகையும்....
பிள்ளைகளுடன்பள்ளி செல்லும் இந்நாள்...

சாக்பீஸ் துகளால் கேசம் வெள்ளையாக்கிச்
சிரிக்கும் என் பிள்ளையும்...
என்னைப்போலவே
நந்தியாவட்டைபறித்து எறிந்து விளையாடும்
உன் மகளும்....

நலம் விசாரித்து மலர்ந்து விரிந்த
நம் கண்கள்பிரதிபலிக்கின்றன...
உன் குடும்பத்தின் மீதானஎன் வாத்சல்யம்...
என் வாழ்வின் மீதான உன் அக்கறை...
இந்த கணம் நாம் விட்டுச் சென்றஎல்லாமும்
அப்படியேஇருப்பதாய் உணர்கிறேன்...

மன்னிப்பு

எழுத்துகள்...
விடாது துரத்தும்
கறுப்பு பூதமாய்...
என்னைக் காட்டிலும்
அதிகப்பிரசங்கிகள்
என் எழுத்துகள்...
ஏதேனும் ஜாலம் காட்டிவிடும்முனைப்பில்
எதையாவது உடைத்துப் போட்டுவிட்டுமண்டியிடும்...
வேறென்ன செய்ய...?
ஒவ்வொருமுறையும்
எழுத்துகளின் சார்பில்
மன்னிப்புக் கோருவதைத் தவிர...

மன மறைவுப் பகுதிகள்

எனக்காக இதைத் செய்வாயா?
எனக்கான பாதைகளை நெறிப்படுத்தி இருந்தாய்...
இருபுறமும் செழித்தபுற்களுடன்,
சலசலக்கும் நீரோடை
வெயில் துளைக்கா ஒற்றையடிப்பாதை
அருமையான சூழல் என்று
அறிமுகப்படுத்தியே வைத்திருந்தாய்...
என் மனமோ நெடிதுயர்ந்த
மலைக்குப் பின்நீட்டி நிற்கும்
பாறைசரிவின்மறைவுப் பகுதியிலே
நாட்டம் கொண்டிருந்தது....
ஒவ்வொரு முறையும்...
பசும்புல் தந்து
வயிறு நிறைக்கும் எனதருமை ஆயனே...
ஒரு முறையேனும் என்னைத் தவறவிட்டுவிடு...
என் மனதின் மறைவுப் பகுதிகளை
நிரப்பிக் கொள்ள...!!!

எட்டிப்போ எச்சரிக்கிறேன்

எப்போதும்
உயர உயரப் பறக்க ஆசை
மகிழ்ச்சியும்,அன்பும்நிறைவும், அமைதியும்
ஊதிக் கட்டிய பலூனாய்...
இலக்கின்றி பறக்கின்றேன்...
இன்னும் மேலே...மேலே...
வாழ்க்கைக் காற்றும்
எனக்குச் சாதகமாய்...
சந்தோச அலையலோடு
இலக்கு நோக்கி பயணம்...
அகந்தைப் பறவை,
போகிற போக்கில்கூரிய அலகால்...
குத்தித் துளைக்க நானா கிடைத்தேன்...???
உனக்கான ஆள் நானில்லை
எட்டிப்போ எச்சரிக்கிறேன்...

சத்தம் போடக்கூடாது

சத்தம் போடக் கூடாது...
கவிதைக் குழந்தை பிரசவிக்கும் நேரமிது...
அழுதபடி பிறக்குமா?
சிரித்தபடி பிறக்குமா?
கைகளைப் பிசைந்தபடி...காத்திருக்கிறேன்...நான்...
தாயும் தந்தையுமாய்
இரட்டைச் சுமை என்மீது...
நானே சுகித்து நானே சுமந்து...
பிள்ளை பெற்றுதெருவில் இறக்கி விடுகிறேன்...
அள்ளி அணைத்து
கன்னம் தடவிக்கொஞ்சி கையிலேந்தி..
மெல்ல மெல்ல
சீராட்டி வளர்க்கிறது உலகம்
பிள்ளையுடன்...தாயையும் சேர்த்து...

பரண் பொழுதுகள்

பரண்களில் தேடிய பொழுதுகள்
வீணாய்ப் போனதேயில்லை...
ஒட்டடைப் பூச்சூடிய
கால் உடைந்த மரப்பாச்சியோ...
இன்னும் அழியாத ஆவண்ணாவுடன்
முதல் வகுப்பு சிலேட்டோ
இறந்து போன தாத்தாவின்
முனை மழுங்கிய கைத்தடியோ...
தங்கையுமாய் நானுமாய்
சண்டையில்சேதப்படுத்திய பிரம்புக் கூடையோ....
தேடச்சென்றது..
கிடைக்கவில்லையெனினும்
இதுவரை தொலைத்ததெல்லாமும் கண்முன்னே
பரண் விட்டிறங்கும் பொழுதுகள்
சுகமானவை....
கனமானவை...

படுக்கை விரிப்புகளுடன்

மெத்தை விரிப்பு
தலையணை உறை
எங்கெங்கும்...உன் பிரத்தியேக வாசம்...
உருவி துவைக்க இடுகையில்
ஒரு நொடியேனும்உதடு புன்னகைக்கும்,
உன் ஸ்பரிசம் நினைத்து,
நாளையோ,
பிரிவு பரிசளித்துப் போகும்
உன் வியற்வை மணமில்லா படுக்கை விரிப்புகள்...,
முற்றிலும் கசங்காமல்..
உயிர் அலசி உணர்வு பிழிந்து
தனிமை வெறுமையில்காயத் தொடங்குகிறேன்...
நானும்...படுக்கை விரிப்புகளுடன்..!!!

மட்டும்கள்

மட்டும்
இதுமட்டும்
அதுமட்டும்
இவைமட்டும்
அவைமட்டும்....என்றின்றி...
நெற்றிப்பொட்டில் சுடர் நிற்கும் வேளை
எனை மறைத்த மட்டும்கள்
ஒவ்வொன்றாய் விலக
எவ்விடமும் பரவி விரிந்து
எம்மட்டும் நானே
உலகெலாம் நானே..
ஜோதிமயமாய்....
இனி போதும் இது மட்டும்...

நீயும் சுயம்புதான்

சுயம்புவாய் யான் மட்டும்...
நினைக்கும் போதே
மனதின் கர்வம்மண்டையில் அறைகிறது..
யாரிங்கு சுயம்பு...?
புதைந்து எழமண் மாதா...
எழுந்து நனைய மழை மாதா...
சுட்டு வடிக்கசூரியன் உதவி..
.உள்ளே திறக்ககாற்றுச் சாவி...
கூப்பி வணங்கமுடிவற்ற ஆகாயம்...
ஐவரும் எம்மைஅனுப்பி வந்த இடம்..
முளைத்தெழும் காலை
சுயம்புவென்றால்...சிரிக்கின்றன பூதங்கள்...
சிரிப்புக்கு பயந்துஉள்ளே ஒடுங்குகிறேன்...
அணைத்துச் சொல்கின்றன...
,உலகச் சுயம்பில் ஒரு துளி நீயென்றால்
நீயும் சுயம்புதான்....

காதல் மொட்டு

மொட்டுகளிம் சென்று
முதல் வேலையாய்க் கேட்பேன்
எப்போது மலர்வீர்?
முதல் பனித்துளிதரை தொடும் போதா?
பட்டாம்பூச்சியின் முதல்ஸ்பரிசம் பட்டா?
கதிரவனின் ஒற்றைக்கதிர்உம் மீது படும் போதா?
தெற்கத்திக் காற்று தடவும்வினாடிப்பொழுதிலா?
எப்போதடி மலர்வீர்?சொல்லுங்களேன்...ம்ஹீம்..
.இன்று வரை சொல்லவேயில்லை...
அருகிருந்து கவனிக்கும்பொழுதுகளில்
மலர்ந்ததே இல்லை
கவனம் தவறும் விநாடிப்பொழுதில்
சில்லென்று சிரித்து...பூத்து விடுகிறது...
ஒவ்வொருமுறை மொட்டுகள் எனை ஏய்க்கும் போதும்....நினைவுவருகிறது...
மொட்டுகள் போலவே தந்திரம் மிக்க உன்காதலும்....

நினைவுச் சிறுவாடு

சிறுவாடாய் என்னை
உன்னுள் சேமிக்கிராய்
கஞ்சன் இறுக்கிய காசாய்
நானும் சேமிக்கிறேன்
சேர்ந்திருந்த நினைவுகளை...
உன் கை கோர்த்து
நினைவுச் செலவு செய்ய...ஆசைதான்,
செலவு செய்யச் செய்ய
சேர்ந்து போகும் நினைவுகள்,அதிசயம் தான்...
உண்டியல் தாளாமல்
உடையும் பொழுது
சிந்தித் தழும்பும்நினைவுச் சில்லறைகள்
செல்லாவதியாகிப் போகுமோ...
என்னவோ தெரியவில்லை
இருந்தாலும் விடாது சேமிப்போம்.....வா...

ஒரு நொடியாவது???

பேப்பருடன் அமர்ந்தால் மணி ஏழு
டைனிங் டேபிள் முன் என்றால் எட்டு
ஷூவுக்குள் நுழைந்தால் மணிஒன்பது...
டீ குடித்துக் கொண்டிப்பாய் பத்து மணிக்கு...
தயிர் சாதம் புளித்திருக்கக் கூடாது ஒரு மணிக்கு...
வேலை அதிகமாய் இருக்குமோ மூன்று மணி...
பைக் ஹார்ன் கேக்கும் இப்போது ஐந்து மணி...
என் நாள் முழுவதும் ஓடுகிறாய் நீ, நிமிடங்களாய்....
உன் நாட்பொழுதின் நினைவில்...நான் நின்றேனா...
ஒருநொடியாவது?

உடனே அனுப்பு

செய்க தியானம்...
குரல் கேட்டு புறப்பட்டேன்,
குளிர்நீர் குளியல்
குருவுக்குக் பூ
அமர விரிப்பு
ஆசன அமர்வு...
எல்லாம் அற்புதம்
அருமையான யோககாலம்,
எல்லாம் முடித்து மனதை தேடுகிறேன்...
கிடைத்த பின் தான் என்னைத் தேட முடியும்...
உன் கைக்குட்டை மடிப்பிலோ
கண்ணாடி விளிம்பிலோ
சுருள்முடிப் புதரிலோ
கருப்பு வண்ண காலணியிலோ
எங்கேனும் ஒளிந்து கொண்டிருக்கும் என் மனம்
உடனே அனுப்பு...நான் தியானத்தில் இருக்கிறேன்...!!!

எடுத்தெறிய மனமில்லை

பாம்பொன்று உரித்தெறியும்
சட்டையைப் போல
மெல்ல உரிகிறதுநினைவுகள்...
பாம்புச்சட்டை வெதுவெதுப்பு
நாசி தொடும் வினோத நெடி
இன்னும் எஞியிருக்கும் பளபளப்பு
ஏனோ சட்டையை
எடுத்தெறிய மனமில்லை
மெல்ல பத்திரப்படுத்துகிறேன்...

பாவம் தேவதைகள்

பறக்கும் தேவதைகள்
நடந்து பார்த்ததில்லை...
கால்பாவாத தேவதைபோல
வான் வெளி தாண்டியும்
அலையும் கவிதைகள்...
என்றேனும்,
ஒற்றை நட்சத்திரம் மட்டும்
ஒளிரும் ராத்திரியின் நிசப்சத்தில்
மொட்டைமாடி தரைக்குளுமை
முதுகுணரும் அந்த வேளை
தென்னைமர நிழல்
இருட்டின் நிறத்தில்
என் மீது கவிந்திருக்கும் கவின்பொழுது
விரித்து வைத்த என் கவிதைபடித்து விட்டு...
நின்று ஒருநிமிடம் பார்த்துவிட்டு
புன்னகை வீசிச்செல்லுமொரு தேவதை,
கண்ணில் ஆதங்கத்துடன்...
பாவம் தேவதைகள்...!!!
பறந்து கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது!

ரௌத்திரம் பழகு

கோபம் கொள்வதுமில்லை
ஒரு பொல்லாப்புமில்லை...
என்ற சங்கல்பத்துடன்
கண்விழிக்கும்
நாட்பொழுதுகளின் அஸ்தமனத்தில்
கண்ணிமையோர கரிப்புகள்
தவிர்க்க முடியாதவைகளாய்...
அறிவுறுத்திச் செல்கின்றன
"ரௌத்திரம் பழகு"

தோற்றுத்தான் போகிறேன் எப்போதும்

போராட்டங்கள்...
சாமான்யப்பட்டதல்ல...
புழுதியில் கோலியாடும்சிறுவருடன்
குதித்தோடதுடிக்கும்...
பாடல் கேட்டவுடன்
பரபரத்து ஜதிபோடும்...மழைநேரபின்னிரவில்
தெளிந்த சேற்றில் கல்லெறியும்...
நாற்புறம் திறந்த மொட்டைமாடியில்
போர்வையின்றி உறங்கிப்போகும்...
அக்கம்பக்கம் என்ன சொல்லும்
என்று அடக்கி வைக்கிறேன் அவ்வப்போது...
இரும்புக்கதவுக்கும் என்மனதுக்குமான
போராட்டம் சாமான்யப்பட்டதல்ல....
கதவு விளிம்பில் மனம் நசுக்கி
இருகை தூக்கி
தோற்றுத்தான் போகிறேன்எப்போதும்....