
சன்னல் திரை தாண்டி
முகம்தொட்டு முத்தமிட்டு
முகமன் சொல்லும் முதல் சூரியக்கதிர்
வான்முகட்டில் முழுதுமாய்
வடியாத பனிமூட்டத்துடன்
நுரை தளும்பத் தளும்ப காலைக்காப்பி
எப்போது வருவேன் என்று
எனக்காக காத்திருந்தே மலரும்
என் வீட்டு வெள்ளை ரோஜா
துணிஉலர்த்தும் கொடிக்கம்பியில்
ஜோடிமைனாக்கள் கொஞ்சல்
என்னைப் பார்த்தும் பதட்டமில்லை
தேங்காய் அரைத்து நான்
முடிக்கும் வரையில் பொறுத்திருந்தே
கட்டான கரண்ட்
உன் தயவாய் சுத்தமானோம்
கழுவித் துடைத்து அடுக்குகையில்
பாத்திரங்கள் நன்றிப் பளபளப்பு
அழுக்குத் துணிதோய்க்கையில்
காற்றுடன் காதல்கொண்டு
ஓடிப்போகும் சோப்புக்குமிழ்
இளமாலை நடைப்பயணத்தில்
தலைநிறைய மரமுதிர்த்து ஆசிர்வதிக்கும்
மேபிளவரும்,சரக்கொன்றையும்
துவைக்கும் கல் சாய்மானத்தில்
சூடான தேநீருடன் தென்னை மர நிழலும்,
தேநீர் அருந்த விருந்தாளியாய் மழை.
மழை குடித்த மிச்சம் குடிக்கவா?
மழை ஒருவாய் தேநீர் ஒருவாய் குடிக்கவா?
சுகமான சலிப்பில் நான்
இரவுக்கட்டிலில்,
நிலாவும் நட்சத்திரங்களும் கவிதைப் புத்தகமும்
காத்திருக்கும் கனாக்களும்.....
இதுபோதும் எப்போதும்.
ஒற்றைப் வீட்டுமனைவிக்காய்
உலகமே சுழல்கிறது.