தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

செவ்வாய், 16 மார்ச், 2010

வீட்டுமனைவிக்காய்.


சன்னல் திரை தாண்டி
முகம்தொட்டு முத்தமிட்டு
முகமன் சொல்லும் முதல் சூரியக்கதிர்

வான்முகட்டில் முழுதுமாய்
வடியாத பனிமூட்டத்துடன்
நுரை தளும்பத் தளும்ப காலைக்காப்பி

எப்போது வருவேன் என்று
எனக்காக காத்திருந்தே மலரும்
என் வீட்டு வெள்ளை ரோஜா

துணிஉலர்த்தும் கொடிக்கம்பியில்
ஜோடிமைனாக்கள் கொஞ்சல்
என்னைப் பார்த்தும் பதட்டமில்லை

தேங்காய் அரைத்து நான்
முடிக்கும் வரையில் பொறுத்திருந்தே
கட்டான கரண்ட்

உன் தயவாய் சுத்தமானோம்
கழுவித் துடைத்து அடுக்குகையில்
பாத்திரங்கள் நன்றிப் பளபளப்பு

அழுக்குத் துணிதோய்க்கையில்
காற்றுடன் காதல்கொண்டு
ஓடிப்போகும் சோப்புக்குமிழ்

இளமாலை நடைப்பயணத்தில்
தலைநிறைய மரமுதிர்த்து ஆசிர்வதிக்கும்
மேபிளவரும்,சரக்கொன்றையும்

துவைக்கும் கல் சாய்மானத்தில்
சூடான தேநீருடன் தென்னை மர நிழலும்,
தேநீர் அருந்த விருந்தாளியாய் மழை.

மழை குடித்த மிச்சம் குடிக்கவா?
மழை ஒருவாய் தேநீர் ஒருவாய் குடிக்கவா?
சுகமான சலிப்பில் நான்

இரவுக்கட்டிலில்,
நிலாவும் நட்சத்திரங்களும் கவிதைப் புத்தகமும்
காத்திருக்கும் கனாக்களும்.....

இதுபோதும் எப்போதும்.

ஒற்றைப் வீட்டுமனைவிக்காய்
உலகமே சுழல்கிறது.

2 கருத்துகள்:

  1. மிக்க அருமையான மனதை சுண்டி இழுத்துப் போடும் படைப்புக்கள் தோழி..

    //விருப்பத்துடனே விவரங்கள் தவிர்க்கிறேன். தொட்டிலுக்குள் தலைமறைக்கும் குழந்தை... இலைகளுக்குள் இதழ் மறைக்கும் பூக்கள்... மேகத்தில் தனை மறைக்கும் பிறை ... முக்காட்டில் முகம் மறைக்கும் பெண்... இவை வழி நானும் எழுத்தின் பின் எனை மறைக்கிறேன்//

    இப்படி ஒரு எழுத்து கைகூடுமெனில் முகம் ஒன்றும் பெரிதில்லை மறைத்துக் கொள்ளுங்கள் தோழி.

    என் வீட்டு வாசம், தெருவின் நிறம், ஊரின் பசுமை, என் தேசத்து நல்லது கெட்டது உங்களின் எழுத்துக்களில் புதைந்துப் கிடக்குமெனில், உங்களின் முகமொன்றும் அவசியமில்லை; உங்களின் எழுதொன்றே வரமென்பேன் தோழி!!!

    விரைவில் புத்தகமாக்கி அனைத்தையும் நம் தலைமுறைக்கு செர்த்துவையுங்கள்..

    மிக்க நன்றியும், மிக்க பாராட்டும், மிக்க வாழ்த்துக்களும் நிறையட்டும் தோழி!!

    வித்யாசாகர்

    பதிலளிநீக்கு