தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

வெள்ளி, 19 மார்ச், 2010

செண்பகமரம்


நான் கோகிலா. உங்களுக்கு என்னைப் பற்றிச் சொல்லும் இந்நேரம்... தலைப்பிரசவத்திற்காக சவூதியிலிருந்து கோவை செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறேன். மெல்லிய அதிர்வுகளுடன், சீராகப் பறந்து கொண்டிருக்கிறது சவூதி ஏர்லைன்ஸ் விமானம். லிப்ஸ்டிக் தீட்டப்பட்ட உதடுகளால் செயற்கையாகச் சிரித்து, பழரசம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர் விமானப் பணிப்பெண்கள். எட்டு மாதம் நிரம்பிய என் குட்டிப்பெண் ஸ்ருதிகா, கொலுசணியாத குட்டிக்கால்களால் என் வயிற்றுக்குள் உதைத்துக் கொண்டிருக்கிறாள்.

எதிர் சீட்டிலும் தமிழ் குடும்பம்தான். அந்தத் தம்பதியினரின் சுட்டிப்பயல் சரியான அறுந்த வால் போலும். சீட்டின் மேல் ஏறுவதும் இறங்குவதுமாக சேட்டை செய்து கொண்டிருக்கிறான்."டேய் அருண், குரங்கு மாதிரி சீட்டு மேல ஏறாத.. பைலட் அங்கிள்கிட்ட பிடிச்சு குடுத்துருவேன்" என்று அவனுடைய தந்தை அவனை மிரட்டுகிறார்.

குரங்கு மாதிரியா? அவருடைய வார்த்தைகள் எனக்கு சிரிப்பை வரவழைத்து, என் பதின்ம வயதுகளை நினைவுக்குக் கொண்டுவருகிறேன்... இதோ நினைத்தாலே தித்திக்கும் அந்த நினைவுகள்...

அப்போது எனக்கு வயது 16. பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். அது மார்கழி மாதத்தின் புலர் காலைப் பொழுது... கோவை மாவட்டம், இயற்கையாகவே ஏஸி செய்யப்பட்டு குளிரில் இருந்தது. தெருக்களெல்லாம் சுத்தமாகப் பெருக்கித் துடைக்கப்பட்டு, அவரவர் கைத்திறனுக்கேற்ப கோலங்கள் வரையப்பட்டு... கோலத்தின் நடுவில் சாணிப்பிள்ளையார் எருக்கம்பூச்சூடி ஜம்மென்று அமர்ந்திருந்தார்.

"டீ கோகிலா... காலங்காத்தால எந்திருச்சமா... குளிச்சிட்டு கோயிலுக்குப் போனமான்னு இல்லாம... குரங்கு மாதிரி மரம் ஏற ஆரம்பிச்சாச்சா? எறங்கு கீழே... பூப் பறிச்சதெல்லாம் போதும்...", என்று உச்ச ஸ்தாயில் அலறுகிறாளே இது என் அம்மா.

கொப்பும், கிளையுமாய் அடர்ந்திருந்த செண்பக மரத்தின் மேல்கிளையில் லாவகமாய் கால்களைப் பதித்தவாறு நின்று கொண்டு, "அம்மா, இங்கிருந்தே பிள்ளையார் கோயில் தெரியுதே... சாமியெல்லாம் கும்பிட்டாச்சி... வேணும்ணா தோப்புகரணமும் போடவா?" என்று பதிலுக்கு நானும் கத்தினேன்.

"சனியனே... கீழே விழுந்து கையக் கால உடைச்சாதான் உனக்கு புத்தி வரும். ஏங்க இங்க பாருங்க உங்க செல்ல மகள.. மரத்து மேல நின்னுகிட்டு பதிலுக்கு பதில் எகத்தாளமா பேசிட்டிருக்கா..." என்று அப்பாவை துணைக்கழைத்தார் அம்மா.

அப்பா வருவதற்குள் எல்லாப் பூவையும் பறித்துவிட்டு இறங்கலாமென்றால், பறிக்கும் படியாகவா பூத்திருக்கிறது செண்பக மரம்... நூற்றுக்கணக்கில் பூக்கள்... பச்சை இலைகளுக்கிடையில் மஞ்சள் நிறப் பூக்கள். கவிதை போல பூத்து பூரித்து நின்றிருந்தது என் செண்பக மரம். கைக்கு வந்ததெல்லாம் பறித்து விட்டு கிளை கிளையாக கால் வைத்து கவனமாக இறங்கினேன். கடைசிக் கிளைக்கு வந்து தொப்பென்று நான் குதிக்கவும், அப்பா வரவும் சரியாக இருந்து.

என்ன கோகி இது.. பூ வேணும்னா மோகனைக் கூப்பிட்டு பறிக்க வேண்டியது தானே.. நீ ஏண்டா மரமேறுற? செல்லமாய்த் திட்டினார் அப்பா. போப்பா, மோகன் பறிச்சா பாதிப் பூவை அவன் ஸ்கூல் பிள்ளைங்களுக்கும், டீச்சருக்கும் கொண்டு போய்விடுவான். அப்புறம் என் ஃபிரண்ஸ்க்கு ஒன்னுமே இருக்காது...

"தினமும் தானடி உன் சினேதிகளுக்குப் பூ குடுக்கிறே? ஒரு நாள் அவங்க பூவெக்கலேன்னா, எந்த மாப்பிள்ளை கோவிச்சுகப்போறானாமா?" திட்டியபடியே நான் பறித்து வைத்திருந்த செண்பக மலர்களை ஊசி நூலால் கோர்க்க ஆரம்பித்தாள் அம்மா. ஊர்ல எல்லாரும் மல்லிகை, கனகாம்பரம், முல்லைன்னு கோத்து சரம்மா வெப்பாங்க... உங்க பொண்ணு மட்டும் தான் செண்பகத்தையே அறையடி நீளத்திக்கு கோர்த்து வெக்கிறா. இவ பவிசுக்கு நாளைக்கு புள்ளய வளத்த லச்சணம் பாருன்னு மாமியாக்காரி என்னை திட்டப்போறா?

போகுது போ. சும்மா கிடக்கிற பூவுதானெ... வெச்சிட்டுப் போறா விடு.. வேணும்னா மாமியார் இல்லாத குடும்பமாப் பாத்து அவளக் குடுத்தாப் போகுது.

அப்பா எனக்கு சப்போர்ட்டுக்கு வந்ததில் ஏக குசி. அவசர அவசரமாகக் குளித்துக் கிளம்பி, தலை பின்ன அம்மாவிடம் வந்தேன். அம்மா எண்ணை வெக்காதே. தளரப் பின்னுமா, டைட்டா பின்னல் போடாதே... அப்புறம் தலை வலிக்கும், என்று கண்டிசன்களைப் பிறப்பித்துக் கொண்டே தலை பின்னி முடித்தேன்.

அம்மா அழகாக கோர்த்து வைத்திருந்த செண்பகச் சரத்தை, தலையில் வைத்து ஹேர்பின் கொண்டு குத்தினாள். கோகி எல்லாப் பூவையும் ஸ்கூலுக்கு எடுத்துட்டு போகாதடி. கொஞ்சம் வீட்ல வெச்சிட்டுப் போ. நம்ம கமலா வந்தா குடுக்கலாம்.

இங்க பாரு, அடுத்த வாரம் எனக்கு எல்லா சப்ஜெட்டிலும் இன்டெர்னல் இருக்கு. இப்பவே எல்லா டீச்சரையும் பூவக் குடுத்து சரிக்கட்னாத்தான் நல்ல மார்க்கு போடுவாங்க.. உனக்கு நான் நல்ல மார்க் வாங்கனுமா வேண்டாமா? சொல்லுமா? வேணும்னா மோகன் கிட்ட சொல்லி மரத்தில மீதியிருக்கிற பூவ பறிக்கச் சொல்லி, கமலா அத்தைக்கு குடு சரியா? தலையில் அம்மா சூடி விட்ட பூச்சரத்தை கண்ணாடியில் சரிபார்த்தபடி பள்ளிக்குக் கிளம்பினேன்.

என்னுடைய வாகனம் என் லேடிஸ் சைக்கிள். அவள் சும்மா சிங்கம் மாதிரி பாய்ந்து செல்வதால் "சிம்ம ராணி" என்று பெயரிட்டு இருந்தேன். சிம்ம ராணியின் மேல் ஆரோகணித்தேன், யாரோ தலை முடியைப் பிடித்து இழுப்பது போல இருந்தது... என்னுடைய நீண்ட கருங்கூந்தல், சைக்கிள் கேரியரின் கீழுள்ள பிரேக் வொயரில் பட்டு இழுத்துக் கொண்டிருந்தது. அதை சரி செய்து விட்டு சைக்கிளை பள்ளியை நோக்கிச் செலுத்தினேன், பயணிக்கும் இந்த நேரத்தில் என் செண்பக மரத்தைப் பற்றிச் சொல்லி விடுகிறேன்.

நான் ஆறாவது படிக்கும் போது, கோவை அக்ரி காலேஜில் ஒரு பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டேன். அதில் முதல் பரிசு ஜெயித்த போது தான், மிகச் சிறிய இந்த செண்பக நாற்றை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். அதை முகமெல்லாம் பல்லாக வீட்டுக்குக் கொண்டு வந்தேன். என்னடி இது போட்டில ஜெயிச்சா ஒரு சோப்புப் பெட்டி, புஸ்தகம்னு குடுக்காம செடியக் குடித்து விட்டிருக்காங்கனு பாட்டி கிண்டல் செய்ததக் கூட பொருட்டாவே எடுக்கலை நான்.

செடி நடும் வைபவம் சீரும் சிறப்புமாக அன்று மாலையே நடைபெற்றது. கொல்லைப் புறத்தில் குழிதோண்டி ராசியான என் கையால் செடியையும் நட்டாகி, நன்றாக வளர வேண்டி சாமி விபூதியையும் மண்ணில் போட்டாச்சி. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக இலை விட்டு வளர்ந்தாள் செண்பா... நான் அவளை அப்படித்தான் கூப்பிடுவேன். இடையில் அவளைக் காப்பாற்ற நான் கொஞ்சம் கஸ்டம் தான் பட்டுப் போனேன். வில்லன் என் சித்தி மகன் மோகன் ரூபத்தில் வந்தான்.

எங்கள் வீடும் சித்தப்பா வீடும் தனி தனி தான் என்றாலும் இருவருக்குமே கொல்லைத் தோட்டம் பொதுவானது. நான் எப்போதெல்லாம் மோகனுடன் சண்டையிடுகிறேனோ, அப்போதெல்லாம் அவன் என் மீது உள்ள கோபத்தில் செண்பாவின் இலையை உருவுவது, கிளையை உடைப்பது போன்ற பழி தீர்க்கும் செயல்களில் ஈடுபடுவான். இதனைத் தடுக்க நான் வெண்ணிற அட்டைகளில் வாசகங்களை எழுதி மரத்தில் மாட்டி வத்தேன். "உன்னைப் போல நானும் உயிர்தானே.. என்னைக் கிள்ளாதே... "தயவு செய்து உன் கோபத்தை என் மேல் காட்டாதே" போன்ற வாசகங்கள்...

இதனால் மோகனின் தொந்தரவு குறைந்தாலும்... செண்பாவிற்கு வேறுவழியில் அபாயங்கள் காத்திருந்தது. செண்பாவின் பக்கத்துத் தோழியான முருங்கை மரத்து கம்பளிப் பூச்சிகள் செம்பாவைத் தாக்காமலும்... அவ்வப்போது கவனக்குறைவாகத் திறந்து போட்ட கொல்லைப் படல் வழியாக வரும் வெள்ளாடுகளிடமிருந்தும் செம்பாவைக் காப்பாற்ற நான் அரும் பாடு பட்டேன்.

ஒத்தச்செடிய நட்டு வெச்சிட்டு பொழுதன்னைக்கும் அதையே பாத்திட்டு இருக்காதே, ஆகற பொழைப்ப பாரு என்று பாட்டி என்னை திட்டினாலும், நான் செம்பாவிடம் தான் பழியாய் கிடப்பேன். காலை எழுந்ததும் பிரஸ்ஸை எடுத்திட்டு மரத்துக்கிட்ட போனா, பல்லு போதும் போதும் சொல்லர வரைக்கும் தேய்ச்சிட்டு, இன்னைக்கு எத்தனை எலை புதிசா வந்திருக்குன்னு கணக்கெடுத்துட்டுத் தான் வருவேன். இப்படியாக செம்பா என் வாழ்வில் மாற்ற முடியாத பாகமாக மாறிப்போனாள்.

இரண்டு ஆண்டுகளில் இரண்டு ஆள் உயரத்திற்கு வளர்ந்து விட்டாள். "ஏன்டி இத்தனை வருசமாகியும் மரம் பூக்கலையே... அந்த வெளக்குமாரை எடுத்து நல்ல நாளு அடி வைய்யு... பூக்காத மரமும் வெக்கப்பட்டுட்டு பூத்திடும்" பாட்டி இப்படி சொன்னவுடன் வரிந்து கட்டிக் கொண்டு பாட்டியிடம் சண்டைக்குப் போனேன்.

"அவ பூக்கிறப்ப பூப்பா.. உனக்கு என்ன இப்ப பூவெக்க அவசரம்... உன் வேலையப் பாத்தமா வெத்தலையப் போட்டமான்னு இருக்கனும்.. யோசனை சொல்ற வேலையை எல்லாம் தாத்தாவோட நிறுத்திக்கோ புரியுதா?

"எனக்கென்னடி ஆத்தா வந்தது, நீயாச்சு உன் மரமாச்சு..." என்று பாட்டி முகவாய் கட்டையை தோளில் இடித்தபடி போய் விட்டாள்.

அந்த வருடம் பத்தாம் வகுப்பு பரிச்சை லீவில் தான் நான் பெரிய மனுசி ஆனேன். விடுவார்களா வீட்டில்? வாழை மரம் கட்டி, தெருவை அடைத்து பந்தல் போட்டு ஊரையே அழைத்திருந்தார்கள் சீருக்கு. மாடிக்கு மைக் செட் கட்டப் போன என் தம்பி மோகன் அலறி அடித்து ஓடிவந்தான்."அக்கா...அக்கா.. செம்பக மரம் பூத்திருச்சி...ஓடிவா..மஞ்சள் பூவு ஓடிவா..."

பெரிய பச்சை நிறப் பட்டுப் புடவை தடுக்க, வந்திருந்த விருந்தினர்களையெல்லாம் கடந்து கொல்லைக்கு ஓடினேன். என்னடா மோகன் பூவையே காணமே? என் கண்னுக்கு பூ தட்டுப்படாத ஏமாற்றம், அக்கா மாடிக்குப் போனாத் தெரியும் வாக்கா என்று அவன் சொல்ல, தட தடவென்று மாடியில் ஏறினோம் இருவருமாக..

அக்கா அங்க பாரு மஞ்சக் கலருல அடுக்குப் பூ. டேய் ஆமாண்டா.. கண் நிறையப் பூவை பார்ப்பதற்குள்ளாகவே தலையில் குட்டி, உறவுப் பட்டாளம் என்னை கீழே இழுத்து வந்து விட்டார்கள். அம்மாவின் அர்ச்சனை வேறு. அன்று நடந்த என்னுடைய பூப்பு நன்னீராட்டு விழாவில் எல்லாரும் சொன்னது இன்னைக்கும் நினைவு இருக்கிறது "புள்ளைக்கு சுத்திப் போடுங்க... முகம் என்னைக்கும் இல்லாம இன்னைக்கி பூரிப்பா இருக்கு..." அது செம்பா பூத்ததனால் வந்த பூரிப்பென எனக்குத்தான் தெரியும்.

அதன் பின் சம்பா நூற்றுக் கணக்கில் பூத்துத் தள்ளியதும் அதைப் பறிக்க எனக்கும் மோகனுக்கும் அடிதடி நடந்ததும் வேரு விசயம். செண்பகம் மற்ற பூக்களை போலன்றி மிகவும் அரிதான பூ. மணமும் ரம்மியமானது. அதும் செம்பா பூப்பது அடுக்கு செண்பகம்... செண்பகாவினால் அந்த சுற்றுவட்டாரத்திலேயே எங்கள் வீட்டுக்குத் தனிப் பெருமை.

பூ வாங்க வரும் சிறுமிகளும்.. அக்கா நாளைக்கி கல்யாணத்துக்குப் போரேன் பத்து பூ வேணும் என்று முன்பதிவு செய்பவர்களாலும் அம்மா தன்னை ஒரு விஐபியாக உணர்ந்தாள். மரமேறிப் பூப் பறித்ததும், செண்பகப் பூவை சரமாகத் தொடுத்து சூடுவதும், நான் கல்லூரி செல்லும் போதும் தொடர்ந்தது.

அப்போது தான் ஒருநாள் என்னவர் என்னைப் பெண் பார்க்க வந்திருந்தார். மிகுந்த சங்கோஜத்துடன் பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும் என்று ஒரு அசட்டு சிரிப்புடன் கூறினார், எங்களுக்கென இரண்டு நாற்காலிகள் கொல்லையில் செண்பக மரத்தின் கீழ் போடப்பட்டன. மென்று முழுங்கி இவர் என்னைப் பிடித்திருக்கிறதா என்று கேட்டு முடிப்பதற்குள், முப்பது முறை கைக்குட்டையால் முகம் துடைத்து விட்டார்.

திடீரென செண்பகப்பூ ஒன்று அவர் தலையில் பட்டென்று விழுந்தது. ஏற்கனவே படபடப்பில் இருந்த அவர் தலையில் பாறாங்கல் விழுந்தது போல எழுந்தார். நான் என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். எனக்கு ஆச்சர்யம்... செண்பகத்தின் காம்பு வலிமையானாது... பறித்தாலன்றி உதிராது.. எப்படி அவர் தலையில் விழுந்தது, செம்பா அவரை ஒ.கே சொல்லிவிட்டாளோ? எனக்கும் அவரைப் பிடித்துப் போய் விட்டது.

எங்கள் திருமணம் தட தடவென்று நடந்து முடிந்தது. அவர் சவூதியில் வேலை பார்ப்பதனால் உடனே நாங்கள் சவூதி கிளம்ப வேண்டியதாகிவிட்டது. என் குடும்பத்தையும், செண்பகாவையும் பிரிந்த இந்த ஒருவருடத்தைப் பற்றி எழுதக்கூட நான் விரும்பவில்லை.

இந்த ஒருவருடத்தில் ஊரில் எத்தனை மாற்றங்கள்... பாட்டி இறந்து போய்விட்டாள். சித்தப்பா பக்க வாதத்தால் படுத்த படுக்கை ஆகிவிட்டார். எல்லோரையும் பார்க்கும் சந்தோசத்தில், என் நிறைமாத வயிற்றைத் தூக்கிக் கொண்டு, இமிக்கிரேசன் எல்லாம் முடித்து வெளியே வந்தேன். நான் எதிர்பார்த்தபடியே அம்மா, அப்பா, அவர் வீட்டு உறவுகள் எல்லாரும் சூழ்ந்து கொண்டனர். அங்கிருந்து வீடு செல்லும் போது நடு இரவாகிவிட்டது.

போன உடன் உடல்நிலை சரியில்லாத சித்தப்பாவை பார்த்து பேசி... அம்மா கையால் தோசை சாப்பிட்டு, கட்டிலில் அம்மா மடியில் சாய்ந்தபடியே பிரயாணக் களைப்பில் உறங்கிப் போனேன். விடியக் காலையில் தான் உறக்கம் கலைந்தது. செம்பாவின் ஞாபகம் வந்தவளாய் கொல்லைப் பக்கம் போனவள்... கோடாரி கொண்டு யாரோ வயிற்றைக் கிழித்தது போல அதிர்ந்து அலறினேன். என் சத்தம் கேட்டு, தூக்கத்திலிருந்து அம்மா அடித்துப் பிடித்து ஓடி வந்தாள்.

"அம்மா செம்பா எங்கே? யாரு வெட்டினா? எதுக்கு வெட்டினா?" என் அலறலுக்குக் காரணமான செம்பா வெட்டுண்டு, அடிமரம் மட்டும் ஒரு அடி நீளத்திற்கு துருத்திக் கொண்டிருந்தது.

அம்மா ஆயிரம் சமாதானம் சொன்னாள். பாட்டி இறந்தபின் சொத்து தகறாரில், சித்தப்பா மதில் சுவர் எழுப்புவதற்கு வசதியாக, இரவோடு இரவாக மரத்தை வெட்டியதாகவும்... அடுத்த நாள் அவர் பக்க வாதத்தில் விழுந்து விட்டதாகவும்.. அது பச்சை மரத்தை வெட்டிய சாபம் தான் என்று ஊரே பேசுவதாகவும் அம்மா கூறிய எதுவுமே என் காதுகளில் விழவில்லை.

என் உயிரையே யாரோ உருவி எடுத்துவிட்டது போல உணர்ந்தேன், வெட்டப்பட்ட அடிமரத்தில் ஈரமாக ஏதோ கசிவிருந்தது. என் நிலையைப் பார் என்று செம்பா என்னிடம் அழுவதாகப்பட்டது. ஏராளமான கற்பனைகளுடன் வந்த எனக்கு ஏமாற்றங்கள் மட்டுமே மிச்சமானது. அத்துனை உறவுகளும் அருகில் இருந்தாலும், மிக நெருங்கிய ஒருவரை இழந்த உணர்வு...

மோகன் இப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.அவன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்வில் குறுகிப்போனான். அவன் தந்தை தானே மரத்தை வெட்டியது. அவன் பலமுறைகள் மன்னிப்புக் கேட்டுவிட்டான். யாரை நொந்து என்ன பயன்?

இந்த நிலையில் ஒரு நல்ல முகூர்த்தத்தில், ஸ்ருதிகாவைப் பெற்றெடுத்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினேன். குழந்தையைக் குளிக்க வைக்க ஒரு பாட்டி வருவார்கள். எங்கள் ஊர்ப்பகுதியில், அண்டா நிறைய தண்ணீரில் குழந்தையை நீவிக் குளிக்க வைப்பார்கள். அதற்கு கொல்லைபுறம் தான் ஏது எனப்பட்டதால், அங்கேயே குளியல் திருவிழா போல நடைபெறும். நான் கொல்லைப் பக்கம் போவதையே தவிர்திருந்தாலும், பாட்டிக்கு உதவி செய்ய போகவேண்டியதாய் இருந்தது.

கொல்லையில் புத்தகம் படித்தபடி இருந்த மோகன், என்னைப் பார்த்ததும் எழுந்து வந்தான். வீட்டுப்பிரச்சனைக்குப் பின் எங்கள் சகஜ நிலை பாதிக்கப்பட்டிருந்தது என்னவோ உண்மைதான். மோகனுக்கு என்ன தோணியதோ தெரியவில்லை, அருகில் வந்து ஸ்ருதியை பார்த்தவன், "அக்கா உனக்குப் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு நான் தானே பூப்பறிக்க மரமேற வேண்டும் என்று நினத்திருந்தேன்..." என்றபடி வெட்டுப்பட்ட மரத்தினருகே போனவன் "அக்கா, அக்கா இங்கே வாயேன் என்று கத்தினான்.இங்க பாருக்கா செம்பா இலை விட்டிருக்கா... மீண்டும் துளித்துருக்கா..." என்றான் சந்தோசத்துடன்"

ஆமாம்.நான் பார்த்த போது, வெட்டுண்ட இடத்தில் வெளிர்பச்சை நிறத்தில் புதியதாக நான்கு இலைகள் வந்திருந்தன. செம்பா மீண்டும் உயிர்த்திருந்தாள் என் ஸ்ருதிக் குட்டிக்காக.

(சுபம்)

செவ்வாய், 16 மார்ச், 2010

வீட்டுமனைவிக்காய்.


சன்னல் திரை தாண்டி
முகம்தொட்டு முத்தமிட்டு
முகமன் சொல்லும் முதல் சூரியக்கதிர்

வான்முகட்டில் முழுதுமாய்
வடியாத பனிமூட்டத்துடன்
நுரை தளும்பத் தளும்ப காலைக்காப்பி

எப்போது வருவேன் என்று
எனக்காக காத்திருந்தே மலரும்
என் வீட்டு வெள்ளை ரோஜா

துணிஉலர்த்தும் கொடிக்கம்பியில்
ஜோடிமைனாக்கள் கொஞ்சல்
என்னைப் பார்த்தும் பதட்டமில்லை

தேங்காய் அரைத்து நான்
முடிக்கும் வரையில் பொறுத்திருந்தே
கட்டான கரண்ட்

உன் தயவாய் சுத்தமானோம்
கழுவித் துடைத்து அடுக்குகையில்
பாத்திரங்கள் நன்றிப் பளபளப்பு

அழுக்குத் துணிதோய்க்கையில்
காற்றுடன் காதல்கொண்டு
ஓடிப்போகும் சோப்புக்குமிழ்

இளமாலை நடைப்பயணத்தில்
தலைநிறைய மரமுதிர்த்து ஆசிர்வதிக்கும்
மேபிளவரும்,சரக்கொன்றையும்

துவைக்கும் கல் சாய்மானத்தில்
சூடான தேநீருடன் தென்னை மர நிழலும்,
தேநீர் அருந்த விருந்தாளியாய் மழை.

மழை குடித்த மிச்சம் குடிக்கவா?
மழை ஒருவாய் தேநீர் ஒருவாய் குடிக்கவா?
சுகமான சலிப்பில் நான்

இரவுக்கட்டிலில்,
நிலாவும் நட்சத்திரங்களும் கவிதைப் புத்தகமும்
காத்திருக்கும் கனாக்களும்.....

இதுபோதும் எப்போதும்.

ஒற்றைப் வீட்டுமனைவிக்காய்
உலகமே சுழல்கிறது.

திங்கள், 15 மார்ச், 2010

பிரம்பெடுக்கும் தேவதைகள்...



சிவப்பு நிற சேலையில் ரொம்பவே ஃபியூட்டிபுல்லாம்.
மஞ்சள்நிற ஒற்றை ரோஜாவே அதிகம் பிடிக்குமாம்.
பேசிவகுப்பெடுப்பதே பாடுவது போல் இருக்குமாம்.
பாடிவிட்டால் குயில்கள் தோற்றுப்போகுமாம்.
விரித்து விட்ட தலைமுடியில் அழகோ அழகு.
தலைசாய்த்துப் பேசுகையில் ஜிமிக்கி மினுங்குமாம்.
தவறவிட்ட சாக்பீஸ் எடுக்க போட்டாபோட்டி.
முதலில் குட்மார்னிங் சொல்ல பெரிய சண்டையாம்.
மை டீச்சர் இஸ் அன் ஏஞ்சல்.....
என் மகள் சொல்வாள் அடிக்கடி....
நேற்றுவரை...!!

இன்று பக்கத்து தோழியுடன்
அவள் செல்லமாய் சண்டையிட்டதில்
கைசிவக்கும்படி பிரம்படி...
டீச்சர் உபயம்.

முகம் சிவக்க அழுது கொண்டிருந்தவளின்
தேவதை டீச்சர் சாத்தான் ஆனாள்.
மந்திரக் குச்சி பிரம்பாய் ஆனது.

ஜாலியாய் இளைக்கலாம் வாங்க (பாகம்2)

இட்டிலி, சட்னி, சாம்பார் காம்பினேசன் மாதிரி பேலன்ஸ்டு டயட்ட அடிச்சுக்க ஆளில்லை. தங்கத் தமிழனின் தன்னிகரற்ற கண்டு பிடிப்பு தான் இந்த இட்லி. இட்லியப்பத்தி பாக்குறதுக்கு முன்னால, சரிவிகிதச் சத்துணவுனா என்னனு பாக்கலாம்.

நம் உடலுக்கு சக்தி அளிக்கும் கார்போஹைட்ரேட்ஸ்செல் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன்ஸ்ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் விட்டமின்கள்சக்தியை சேமிக்கும் கொழுப்பு போன்ற மேற்கூறியவை தேவையான விகிதாச்சாரத்தில் அமைந்த உணவே சரிவிகிதசத்துணவு.

நாம் உண்னும் சாதாரண இட்லி எப்படி இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்று பார்ப்போம். அரிசியில் கார்போஹைட்ரேட்ஸும், உளுந்தில் தரமான புரோட்டீனும், சாம்பாரில் இடப்படும் காய்கறிகளில் விட்டமின்களும், தாளித்துக் கொட்டப்படும் எண்ணையில் ஃபேட்டி ஆசிட்ஸும் இட்லியை ஒரு சரிவிகிதச் சத்துணவாக மாற்றுகிறது. அதோடு இட்லிமாவு நொதிக்க வைக்கப்படுவதால் ஜீரணத்திற்குத் தேவையான நுண்ணுயிர்ப் பொருட்களும் கிடைக்கின்றது.சரி, அதற்காக இட்லி கிடைக்காத துர்பாக்கியசாலிகள் என்ன செய்வது?

"சீச்சீ, இந்த இட்லி புளிக்கும்" என்று வேற சாய்ஸ் தேட வேண்டியது தான்..கிட்டாதாயின் வெட்டென மற.நம்மைக் காத்து ரட்சிக்க இருக்கவே இருக்கு, பிரெட் குடும்பம், முட்டையின் வெள்ளைக் கருவில் செய்த ஆம்லெட்டுடன் இரண்டு ஸ்லைஸ் ப்ரவுன் ப்ரெட், பருப்புடன் இரண்டு சப்பாத்தி, ஒரு கப் ரவா உப்புமா, ஒரு கப் தயிர் சேமியா, இரண்டு நான்ஸ்டிக் தோசைகள் என ஏகப்பட்ட சாய்ஸ் இருக்கு. நம்ம ஊரில் இருப்பர்களுக்கு ராகி அல்லது சத்து மாவு கஞ்சியும் வரப்பிரசாதம் தான்.

காலை உணவில் பறப்பவை, நடப்பவைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.குளிர் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு தினமும் ப்ரெட்டா?கொடுமைடா சாமி? நாங்க குண்டாவே இருந்துட்டு போறோம்கிறீகளா?

சர்க்கரையில்லாம ஓட்ஸ் கஞ்ஜி நல்லகாலை உணவு. ஓட்ஸை வேகவைத்து மோருடன் உப்பு போட்டும் சாப்பிடலாம், சூப் வடிவிலும் சாப்பிடலாம். காட்டேஜ் சீஸ் உடன் வெஜிடெபிள் பர்கர் சாப்பிடலாம். பிஸ்ஸா பேஸ் வாங்கி அல்லது வீட்டிலேயே செய்து வைத்துக் கொண்டால் அப்பப்ப அருமையான வெஜிடபிள் பிஸ்ஸா (பாதி அளவு போதுங்க) சாப்பிடலாம். கார்ன் ஃப்ளேக்ஸ், ப்ரான் ஃப்ளேக்ஸ் என்று ஏகப்பட்ட ரெடிமேட் உண்வுகள் மார்க்கெட்டில் இருக்கு. இத்தனைக்கும் மேல இருக்கவே இருக்கு சீன உணவுகளின் ராஜா... நூடுல்ஸ்... (ம்ம்மா....நூடுல்ஸ் எங்க? இப்ப நூடுல்ஸ் மேலஆசை வந்தாச்சா?) ஒண்ணுமே பிடிக்கலையா... பாலுடன் ஐந்து ஃபைபர் ரிச் பிஸ்கட்ஸ் சாப்பிடலாம்.

பால் என்றதும் தான் ஞாபகம் வருகிறது."நான் வளர்கிறேனே மம்மி" என்று காம்ப்ளான் அல்லது "சுப்பாங்..., சப்பாங்... ஹுப்பாங்" என்று கோப்பையை சுழற்றிச் சுழற்றி ஹார்லிக்ஸ் குடிப்பவரா? அவற்றிலும் சர்க்கரை அதிகம் உள்ளதால் தவிர்த்தல் நலம் அல்லது அந்தந்த கம்பெனிகளில் வரும் லைட் பிராண்டுக்கு மாறிவிடுங்கள். (அப்புறம் விடுமுறைக்கு அம்மா வீடு சென்ற மனைவியைக் கூப்பிட நீங்களே ரயில்வே ஸ்டேசன் போவீங்களாம்.) பாலும் கண்டிப்பாக ஆடை நீக்கியதாக இருக்க வேண்டும்.

காலை உணவில் பொங்கல், வடை, பூரி, நெய் தோசை, ஆலு பரோட்டா எல்லாம் வேண்டாமே. (அண்னபூர்ணா ஹோட்டல்லுக்குள்ள நுழைந்த மாதிரி இருக்கு மெனுவப் பாத்தா...ஊருக்கு போக ஆசைவருது) வேண்டுமானால் நீங்கள் முதல் கட்டமாக ஒரு கிலோ எடை குறையும் நன்னாளில் உங்களுக்கு ஒரு ஊக்க போனசாக இவற்றில் ஒன்றை மட்டும் யாராவது வயோதிக பிச்சைக்காரருக்கு வாங்கிக் குடுத்துட்டு நீங்களும் சாப்பிடுங்க! அப்புறம் அந்த ஒரு நாள் மனநிறைவு தொடர்வதற்காகவே கண்டிப்பாக நீங்கள் எடை குறைவீர்கள். (என்ன ஒரு ஒளி வெள்ளம் உங்க முகத்தில்)

உங்கள் ஒவ்வொரு வேளை உணவையும் ஒரு முழுப் பழத்துடன் முடிப்பது சிறந்தது. முழு பலாப்பழம், முழு தர்பூசணி, முழு அன்னாசிப் பழம் எல்லாம் கணக்கில் வராதுங்க.பழங்களைப் பற்றிப் பார்ப்போம், பழவகைகள் உடலுக்கு நல்லது என்பது நாம் அறிந்ததே. ஆனால் மா, பலா, வாழை, திராட்சை போன்ற சிலவகைகள் 100கிராம் = 100கிலோ கிலோரிகள் என்று கணக்கிடப்பட்டுள்ளன. எனவே அவற்றை அதிகம் உண்ணாமல், வாரம் நான்கு முறை சாப்பிடலாம். ஆரஞ்சு, ஆப்பிள், பேரிக்காய், பப்பாளி போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.பழங்கள் மேனி அழகைப் பராமரித்து, சருமத்திற்கு புதுப் பொலிவைத் தர வல்லன. எங்க கிளம்பீட்டீங்க? பழம் வாங்கத்தானே? பழம் சாப்பிடப் பிடிக்காதவர்கள் ஜூசாக அருந்தலாம். ஆனால் பழத்தை அப்படியே சாப்பிடுவது தான் நல்லது.

சரி, இப்பொழுது சாப்பிடும் முறை பற்றிப் பார்க்கலாம்.காலை உணவாக இட்லி சாப்பிடுவதாக வைத்துக் கொண்டால் நான் விட்டாலும் இட்லி என்னை விட மாட்டேங்குதே? நான்கு இட்டிலியையும் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு அப்படியே அவசர அவசரமாகச் சாப்பிடாமல், ஒவ்வொன்றாக நிதானமாக ருசித்து சாப்பிடவும். ஒரு இட்லி சாம்பாருடன், ஒரு இட்லி சட்னியுடன்... என்று ருசித்து சாப்பிடும் போது குறைவாகச் சாப்பிட்டாலும் அதிகம் சாப்பிட்டது போல மனம் திருப்தி அடையும்... இல்லை உங்கள் மனம் திருப்தி அடையவில்லையா? சாப்பிட்டு பழகிய வயிறு இன்னும் போடு போடு என்கிறதா? சட்டையே செய்யாமல் இரண்டு டம்ளர் தண்ணி குடிக்கவும். வயிறு, வாயை மூடிக் கொள்ளும். இரண்டு இட்லிக்கு கால்லிட்டர் எண்ணைய் ஊற்றுபவரா?முதலில் பட்ஜெட்டில் எண்ணையைக் குறைத்து வாங்க ஆரம்பிங்க.

ஒரு முக்கியமான விசயத்தை உதாரணத்துடன் விளக்குகிறேன். கோவையில் எனக்கொரு அண்ணா இருக்கார். அவர் மனைவிக்கு அவர் மேல் கொள்ளைப் பிரியம். காலை உணவை அவர் மனைவிதான் அவருக்குப் பறிமாறுவார். அண்ணன் மூன்று இட்லி போதுமென்று கை கழுவப் போனால், அவ்வளவு தான் "அய்யோ மாமா, என்னக் கல்யாணம் கட்டின நாள்ல இருந்து தினமும் பத்து இட்டிலிக்கு குறையாம சாப்பிடுவீங்களே? யாரு கண்ணுபட்டுதோ தெரியல, மூணோட முடிச்சிட்டீங்களேனு... மூக்கு சிந்த ஆரம்பித்து விடுவார்கள் அண்ணி. அவங்க பன்ற அலம்பல்ல பத்து இட்டிலிய படப்படன்னு உள்ளே தள்ளிடுவாரு வாத்தியாரண்ணா.காலையிலே இப்படின்னா மத்தியானம் பரிமாறும் செஷன் வாத்தியாரோட அம்மாக்கு. இவரு, போதும்மா, எதுக்கு இத்தனை சோத்த அள்ளிக் கொட்டற என்று கேட்டால் போச்சு. "பாவிப்பய முப்பது வருசமா மூச்ச குடித்து வளர்த்தேனே... நேத்து வந்தவ முந்தானைல முடிஞ்சிட்டாலே காலைல பத்து இட்டிலி அவ கையால சாப்பிட்டேயேடா... இப்ப பெத்த தாயி குடுத்தா கசக்குதா...ன்னு ஆரம்பிப்பாங்க ஆத்தா.. அன்பு நிலையென்றால் தாய்க்கும் தாரத்திற்கும் பொதுவில் வைப்போம்கிற கொள்கை உடையவர் நம்ம அண்ணாத்த. அம்மா போட்ட அத்தனையும் ஆடாம அசங்காம, அத்திப்பூ வாடாம சாப்பிட்டு எந்திருப்பாரு நம்ம தலைவர்.இதுதான் என் அண்ணாத்தேவின் சோகக்கதை.(உங்களுக்கு இதுபோல ஏதாவது சொந்தசோகக்கதை இருக்கா?அய்யோ பாவம்...உங்களையும் என் அண்ணாத்தையா ஏத்துக்கறேன்.)

உடலைக் குறைக்க காலை, மாலை இரண்டு வேளை அண்ணன் நடப்பாரு .ரோட்டுல நடந்து விட்ட கலோரிய எல்லாம் வீட்ல அம்மாவும், மனைவியும் போட்டி போட்டுட்டு அண்ணன் உடம்பில நிரப்பி விடுவாங்க. அதாகப்பட்டது குழந்தைகளே... இந்த கதையால் அறியும் நீதி என்ன? சாப்பிடும் விசயத்தில சென்டிமென்டுக்கு இடம் கொடுக்காதீங்க.

தொடர்ந்து இளைக்கலாம் வாங்க...
__________________