தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

திங்கள், 28 மே, 2012

என் கவிதை பிறந்த காரணம் என்ன?
வெள்ளைத்தாளில் இந்த வினாவை விதைத்து விட்டு


மெல்ல விழிமூடி உள்ளுக்குள் தேடுகிறேன்!
ஏதேனும் புதுக்கவிதை வெளிவருமா? முளைவிடுமா?

"கர்ப்பம் சுமப்பது போல் கவிதை சுமப்பவன் கவிஞன்"

என்றெல்லாம் வெறுமே கட்டுக் கதை சொல்லப்போவதில்லை.

கவிதையது கடவுள் தந்த வரமென்று காதில் பூ ச்சுற்றும் எண்ணமில்லை

விழிகளுக்குள் விழுவதெல்லாம் என் விரல் நுனியில் கவிதையாகும்

ஆசுகவி நானென்று உம்மை மோசம் செய்யும் எண்ணமில்லை..



புல்நுனிப் பனித்துளி அது பொசுக்கென்று உருகும் போதும்

மெல்லென சரக்கொன்றை மலரொன்றை உதிர்க்கும் போதும்

பல்லில்லா குழந்தையது, நம்மைப் பார்த்ததுமே சிரிக்கும் போதும்

எல்லோரின் உள்ளத்திலும் கவிதையது கால்பதிக்கும் - நீங்கள்

எண்ணத்தில் எழுதியதை நான் எழுத்தாலும் எழுதுகின்றேன்- அதை

கவிதை என்று மதிப்போரை இரு கரம் கூப்பி வணங்குகிறேன்.

காற்று பிறந்ததன் காரணம் மானுடம் பிழைத்தல் மாட்டென்றால்-என்

கவிதை பிறந்ததன் காரணம் மனம் கொஞ்சம் உயிர்த்தல் மாட்டென்பேன்.



வேலிக்குப் பின்னே விடுதலைக்காய் காத்துநிற்கும் ஈழச்சோதரரின்

வெடித்த உதடுகளில் துடிக்கும் வேதனைதான் என் கவிபிறக்கக் காரணமா?

வாரக் கூலிக்கு வரிசையிலே காத்துநிற்கும் என் தேசச்சிறுவர்களின்

வறுமை அழித்து விட்ட வறண்ட வாழ்க்கைகூட ஒருவகையில் காரணம்தான்.

பொருந்தாத கல்வியினால் பொதிமாடு போல புத்தகங்கள் சுமந்தபின்னும்

படிப்பின் கனம் தாளாமல் பரிதவித்து பலியான எம் மாணவச்செல்வங்களின்

மனம் வடித்த ,கடைசிக்கண்ணீர் தடம் கூட ஒருவகையில் காரணம் தான்.

மொத்த நாட்டையும் குத்தகையெடுத்த ஒற்றைக்குடும்பமும் ஒரு காரணமே...

உற்ற தோழியை விட்டுப்பிரியாத ஓரங்க நாடகமும் ஒருவகையில் காரணமே



மாளாத மகிழ்ச்சியிலே என் கவிதை இதழிதழாய் மலர்ந்ததுண்டு

தாளாத சோகத்தில் அதுவே இமைநீராய்க் கரைந்ததுண்டு.

மூளாத செந்தீயாய் பெருங் கோபத்தனல் கொண்டதுண்டு

வாளாக உயிர் அறுக்கும் தீராத வலியாலும் பிறந்ததுண்டு.

எதன் பொருட்டுப் பிறந்ததென்று எனக்கே தெரியாமல்

எழுவாயே இல்லாத கவிதைகளும் என் களத்திலுண்டு.

இறுதியாய் இன்னுமொரு காரணமும் என் வரிகளின் வசத்திலுண்டு

இன்னும் அதை நான் என்னவென்று இருட்டிலே தேடுகின்றேன்...

எனவே இத்துடன் போதுமென்று இக்கவிதையை நான் முடிக்கின்றேன்.