தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

செவ்வாய், 2 அக்டோபர், 2018

நீர் கொதிக்க ஆரம்பிக்கிறது...
தேயிலை தொட்டெடுத்து திட்டமாய் தூவுகிறேன்
வியாபிக்கும் தேன் நிறம் விழிகள் வாங்கிக்கொள்ள..
ஆகும் போதே தெரிந்து போனது, ஆகச் சிறந்த தேநீர் இதுவென..

மிக மென்மையாய் வெண்ணிறகோப்பைக்கு மாற்றுகிறேன்...
பிறந்த பிள்ளையை ஏந்தும் கவனம்,
உள்ளங்கை சூடு உயிர்வரை ஊடுருவ,
நடனமிடும் ஆவி ஆன்மாவின் கைதேடும்..
நாசிக்குள் நறுமணம் மூளைக்குள் இதழ் விரிக்கும்.

தேநீர் அருந்த நீ வருகிறாயா??? சூரியனை கேட்கிறேன்...
கோப்பைக்குள் குதித்துக் கரைந்து காணாமல் போகிறான் சூரியன்..
நிதானமாய் அருந்துகிறேன்..."ஒரு கோப்பை சூரியன்"

1 கருத்து: