தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

பதிலுக்குப் பரிசளிப்போம்

எதிரே இருக்கும் ஏழுவயது சிறுமி
நிலா பிடிக்க எத்தனிக்கிறாள்...
சற்று தள்ளி தளிர் நடை பழகும்
அந்தச் சின்னக்குட்டிப்பாப்பா
மண்சுரண்டித் தின்ன ஆயத்தமாகிறாள்...
அவளுக்கு அப்புறமாய்
முன்பல்லில்லாத சிறுவன் ஒருவன்
காற்றை கைது செய்யமுயல்கிறான்
தன் கையில் இருக்கும் பலூனுக்குள்...
இன்னும் குழுவாய் சில வாண்டுகள்
சோப்புக்குமிழ் பரிசை இறைவனுக்கு
அனுப்ப முயல்கின்றன தீவிரமாய்...
வரிசையில் நிற்கிறோம்
ஏந்திய கரங்களுடன் அவர்களுக்கெதிரே
மகிழ்ச்சியை நம் கைகளில்
மாற்றிவிடும் மனம் அவர்களுக்குண்டு...
பதிலுக்கு பாடப்புத்தக மூட்டையைப்
பரிசளிப்போம் நாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக