தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

நமக்குப் பிறந்தவர்கள்

செத்துக்கொண்டிருக்கிறது
கழுத்தில் சுருக்குடன் சாம்பல் நிற ஓணான் ஒன்று...
ஒவ்வொன்றாய் இறக்கை பிய்க்கப்பட்டு
உயிருக்குப் போராடுகிறது வண்ணத்துபூச்சி ஒன்று...
ஊர்ந்து வந்த வண்டொன்று
ஒற்றைக்கண் இழந்து திரும்புகிறது
கால்களுக்கிடையே வாலைச்சுருட்டிக்கொண்டு
ஊளையிட்டு ஓட்டம் எடுக்கிறது கல்லடிபட்ட நாய்
புதிதாய் வாங்கிய ஸ்பைடர்மேன்
கைவேறாய் கால்வேறாய்
வைத்தியம் பார்க்க வேண்டிய ஸ்திதியில்...
குழந்தைகளை வெறுத்தேன் தற்காலிகமாக...
கருப்புத்துணியால் கண்கள் கட்டப்பட்டு
துப்பாக்கி முனையில் நிர்வாண மனிதனொருவன்...
பார்த்தவுடன் தோன்றியது
நமக்குப்பிறந்தவர் தானே குழந்தைகள்...!!!

3 கருத்துகள்: